யாழ்ப்பாண மாவட்டம் Jaffna District இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்று. இது நாட்டின் வடகோடியில் அமைந்துள்ளது. மேற்கில் மன்னார் வளைகுடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும் சூழப்பட்டுள்ளது.
இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை இந்த மாவட்டம் உள்ளடக்கியுள்ளதுடன், தெற்கேயுள்ள பல தீவுகளும் இதனுள் அடங்கும். இத் தீபகற்பத்தினுள்ளிருக்கும், தொண்டமானாறு, உப்பாறு போன்ற கடல்நீரேரிகளால், இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என அழைக்கப்படுகின்றன. இம் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், யாழ்மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து 1984 பெப்ரவரியில் பிரிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உள்ளது.
நிர்வாகம்
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இம்மாவட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரி, மாவட்டச் செயலாளர் (முன்னர் அரசாங்க அதிபர்) என அழைக்கப்படுகிறார். இம்மாவட்டம் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளாக (முன்னர் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள்) என அழைக்கப்படும் பல துணைப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் பிரிவுகள்
- யாழ்ப்பாணம்
- நல்லூர்
- சங்கானை
- சண்டிலிப்பாய்
- தெல்லிப்பழை
- உடுவில்
- கோப்பாய்
- கரவெட்டி
- மருதங்கேணி
- பருத்தித்துறை
- சாவகச்சேரி
- ஊர்காவற்றுறை
- வேலணை
- காரைநகர்
- நெடுந்தீவு
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவும் ஒரு பிரதேச செயலாளரின் கீழ் செயல்படுகின்றது. இந்தத் துணைப் பிரிவுகளும் மேலும் 434 கிராம சேவை அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பிரதேச சபைகள்
யாழ்ப்பாண மாவட்டம்
இவற்றைவிட மக்களால் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் அடங்கும், மாநகரசபை, நகரசபை, மற்றும் பிரதேச சபைகளாகவும் யாழ்ப்பாண மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில்
- யாழ்ப்பாண மாநகர சபை
- வல்வெட்டித்துறை நகரசபை
- பருத்தித்துறை நகரசபை
- சாவகச்சேரி நகரசபை
- பருத்தித்துறை பிரதேச சபை
- சாவகச்சேரி பிரதேச சபை
- நல்லூர் பிரதேச சபை
- காரைநகர் பிரதேச சபை
- ஊர்காவற்றுறை பிரதேச சபை
- நெடுந்தீவு பிரதேச சபை
- வேலணை பிரதேச சபை
- வலிகாமம் மேற்கு பிரதேச சபை
- வலிகாமம் வடக்கு பிரதேச சபை
- வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை
- வலிகாமம் தெற்கு பிரதேச சபை
- வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
- வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை