Type Here to Get Search Results !

யாழ்ப்பாணம் மந்திரிமனை


மந்திரிமனை என்பது இலங்கையின் வடபகுதியில் தமிழரசர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள அரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில் தமிழரசர் காலத்தோடு சம்பந்தப்படும் ஒரு கட்டிடமாகும். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. 

இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போர்த்துக்கேயரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்கு முன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவெனக் கூறப்படுகிறது. 

 இக் கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் யாழ்ப்பாண அரச தொடர்புடையதாக இருந்திருக்க முடியும் எனக்கருத இடமுண்டு. சிறுவனாக இருந்த கடைசி மன்னன் சார்பில் அரசப்பிதிநிதியாக இருந்த சங்;கிலி குமாரனுடைய அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலத் தோப்பும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும் மேலும் பல அரச தொடர்புள்ளவைகளாகக் கருதப்படுபவையும் இதற்கு அண்மையிலே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலையில் இக் கட்டிடம் ஏறத்தாழ 70x80 மீற்றர்கள் அளவுகளைக் கொண்ட நிலப்பரப்பில் அதன் தென்மேற்கு மூலையை நோக்கி அமைந்துள்ளது. தொடக்கத்தில் இதற்குரிய நிலம் இன்னும் பெரியதாக இருந்திருக்க கூடும். இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ள பொருட்களான செங்கட்டி, சுண்ணாம்புச்சாந்து, மரங்கள், ஓடுகள் என்பவைகளையும் இக்கட்டிடத்தின் அமைப்பையும், முன்புறத்தில் செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைகளையும் கருத்தில் கொண்டு ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என யாழ்ப்பாண சரித்திரவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். 

ஆனாலும் இக்கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சில கூறுகள் குறிப்பாக அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான சில தூண்கள், போதிகைகள் போன்றவை யாழ்ப்பாண அரசர் காலத்திற்குரியதாக கருதப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயரும் பின்னர் வந்த ஒல்லாந்தரும் தமது நிர்வாக தேவைகளுக்காக நல்லூரில் எஞ்சியிருந்த அரசகட்டிடங்களையும், நிலங்களையும் பயன்படுத்தியிருக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.

இவ்வாறே “மந்திரிமனை” என்றழைக்கப்படும் இக்கட்டிடமும் புதிதாகவோ அல்லது திருத்தியமைக்கப்பட்ட கட்டிடமாகவோ இருக்க வேண்டும் இக் கட்டிடமானது தற்போதைய உரிமையாளர்களின் முன்னோரான ஒரு மருத்தவரால் கட்டப்பட்டதாக இன்றைய உரிமையாளர்களுள் ஒருவரால் தெரிவிக்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்வரை இக் கட்டிடம் அருகிலுள்ள சட்டநாதர் சிவன் கோயிலுடன் தொடர்புடையவரால் குடும்பமொன்றினது இருப்பிடமாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது. அக் காலத்திலே அதன் பெரும்பகுதி கைவிடப்பட்ட நிலையிலே இருந்தது. அண்மைக் காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் இக் கட்டிடமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது ஓரளவு திருத்தப்பட்டுள்ளது.

எப்படியாயினும் யாழ்ப்பாணத்தில் அதன் குடியேற்றவாதக் காலத்துக்கு முற்பட்ட தொடர்புகளைக் கொண்ட எஞ்சியுள்ள மிகச் சில கட்டிடங்களில் ஒன்று என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad