Type Here to Get Search Results !

2019 - சர்வதேச அரசியல் விவகாரங்கள்

சர்வதேச வெளிவிவகாரக் கொள்கைகள், அதன் பிரதிபலிப்புகள், உள்நாட்டு அரசியல் என பல தடங்களை 2019ஆம் ஆண்டு கடந்து சென்றுள்ளது. 

 இம்மாத முதல் வாரத்தில் நடைபெற்றிருந்த வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) உச்சிமாநாடு தொடர்ச்சியாக நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பு விருத்தி மற்றும் தொடர்ந்து ஒன்றிணைந்த பாதுகாப்புக்கு ஒத்துழைத்தலை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது. கூட்டத்தின்
முடிவுகள் மற்றும் முன்னுரிமைகளில், ரஷ்ய இராணுவம் மற்றும் இணையத் தடுப்புக்கு எதிராக எதிர்ப்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துதல் மற்றும் நேட்டோவின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆகியன தமது உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை கண்டிப்பாக இணைந்த பாதுகாப்புக்கு வழங்குதல் ஆகியவை பிரதானமாக பேசப்பட்டிருந்தது.
இது ஒரு புறமிருக்க, ரஷ்ய, பெலாரஸ், சேர்பியப் படைகளால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஸ்லாவிக் சகோதரத்துவம் என்ற இராணுவப் பயிற்சி தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டு நடைபெற்றுள்ளமை, ஸ்கண்டிநேவியன் நாடுகளின் பாதுகாப்பு தொடர்பாக கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. சேர்பியா ஒரு புறம், இவ்வாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவிடம் இருந்து மூன்று தாக்குதல் ஹெலிகொப்டர்கள் எம்.ஐ – 35எம், நான்கு போக்குவரத்து ஹெலிகொப்டர்கள் எம்.ஐ- 17பி5ஐ வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. 

 மறுமுனையில், நேட்டோ நாடுகளின் பங்காளியாக சேர்பியா உள்ளது. ரஷ்ய ஆயுதங்களின் சேர்பிய வருகையைப் பற்றிய செய்தி பால்கன் நாடுகளின் செய்தித்தாள்களால் பரவலாகப் பதிவாகியுள்ளதன் அடிப்படையில், சேர்பியாவின் குறித்த இந்நகர்வு சேர்பியர்களிடையே கவலைலையை ஏற்படுத்தியுள்ளது. சேர்பிய அரசாங்கம் ஒருபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தை அணுகுவதற்காக அரசாங்கம் மேற்கத்திய சார்பு கொள்கைகளை பின்பற்றும் அதேநேரம், சேர்பிய – ரஷ்ய உணர்வுகளை பொதுமக்களுக்கு ஊட்டுகிறது என்றும் இந்நிலை நாட்டின் வெளிவிவகார கொள்கைகளுக்கு சிக்கல் நிலையையே ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றமை, 2020/2021களில் சேர்பியா எவ்வாறாக தனது ரஷ்ய சார்பு தன்மைகளை பேணப்போகின்றது என்பதை ஊகிக்க முடியாத தன்மைக்கு கொண்டுசெல்கிறது. 
மறுபுறம், சர்வதேச அரசியலில் ரஷ்யாவுக்கு இராணுவ ஆயுதங்கள் மற்றும் தளபாட விற்பனை தொடர்பான முக்கிய இறக்குமதியாளராக இருந்த இந்தியா, இவ்வாண்டு காலப்பகுதியில் ரஷ்யாவுக்கு நிலையற்ற மற்றும் நம்பமுடியாத ஒரு பங்காளியாக மாறியுள்ளமை சர்வதேச அரசியலில் தளம்பலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, ரஷ்யாவுடனான உறவுகளில் பரஸ்பர ஆர்வத்தை கொண்டிருந்தாலும், அவ்வாறான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொண்டாலும், ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான பயனுள்ள தொடர்புகளுக்கான வழிகளையே இந்தியா இன்று தீவிரமாக நாடுகிறது.

 இதன் அடிப்படையிலேயே இந்தியா அண்மையில் தங்கள் விமானப்படையின் தேவைகளுக்காக, ரஷ்ய எஸ்-30 எம்.கே.ஐ போர்விமானங்களுக்கு பதிலாக,பிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 மத்திய கிழக்கை பொறுத்தவரை, இவ்வாண்டு செப்டெம்பர் 24ஆம் திகதி அன்று, துருக்கிய ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஒரு சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் குர்திஷ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை இவ்வாண்டு நடந்தேறி இருந்தது. 32 கிலோமீட்டர் அகலமும் 480 கிலோமீட்டர் நீளமும் கொண்ட உலகின் மிகப்பெரிய அகதி முகாமாக அம்மண்டலத்தை அமைக்க அவர் முன்மொழிந்திருந்தாலும், அது ஒரு சுயாதீனமான ஜனநாயகக் கூட்டத்தின் குர்திஷ் கனவை அழிப்பதற்கான ஒரு முயற்சியாகவே கருத்தப்பட்டிருந்தது.

 இப்பின்னணியில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய அமெரிக்க துருப்புக்கள் சிரியா - துருக்கி எல்லைகளில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்திருந்ததுடன் அதற்கு பின்னரான சில நாட்களிலேயே குர்திஷ் இன அமைப்புக்கு எதிராக துருக்கி இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. 

 குறித்த இராணுவ நடவடிக்கை ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியதுடன் முடிவுக்கு வந்திருந்தாலும், அமெரிக்கா தமது நட்பு கூட்டான குர்திஷ் இன மக்களுக்கு எதிராக துருக்கி நடவடிக்கை எடுக்க ஒத்துழைத்திருந்தமை சர்வதேச மட்டத்தில் வெகுவாகவே கண்டிக்கப்பட்டிருந்தது ஒரு புறம் - மறுபுறம், ஐக்கிய அமெரிக்காவின் தடைகளுக்கு எதிர் நடவடிக்கையாக குறித்த அமெரிக்கா விட்டுச்சென்ற எல்லையில் துருக்கியும் ரஷ்யாவும் இணைந்து பாதுகாப்பை மேற்கொள்ள ஒத்துக்கொண்டமை அமரிக்க வெளிவிவகார கொள்கையின் ஒரு தோல்வியாகவே பார்க்கப்பட்டது. 

 அதே பிராந்தியத்தில்- கிழக்கு சவுதி அரேபியாவில் எண்ணெய் நிறுவல்கள் மீதான இவ்வாண்டு செப்டெம்பர் 14ஆம் திகதி ட்ரோன் தாக்குதல்கள் - ட்ரோன் தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது இன்னமுமே தெரியாத நிலையில், ஈரானிய ஆதரவுடைய போராளிகளான மக்கள் அணிதிரட்டல் படைகள் அல்லது ஈராக்கில் உள்ள ஈரானிய புரட்சிகர காவலர்களின் பிரிவுகளால் குறித்த தாக்குதல் ஈரானிய ஜனாதிபதி அல்லது வெளியுறவு அமைச்சரின் உத்தரவு இல்லாமல் கூட நடந்திருக்க முடியும் என ஊகங்கள் எழுந்தமையும் குறித்த அமெரிக்க - ஈரானிய பேச்சுவார்த்தைகளை மேலதிகமாக தொடரமுடியாத நிலைக்கு தள்ளியுள்ளதுடன், அதற்கும் மேலதிகமாக பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பதற்றங்களை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை தவிரவும், கனடா, இஸ்ரேல் மற்றும் பிரித்தானியாவில் நடைபெற்றிருந்த நாடாளுமன்ற தேர்தல்கள், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக காங்கிரஸ் முன்மொழியும் பதவியில் இருந்து அகற்றலுக்கான தீர்மானம், காலநிலை மாற்றம் மற்றும் தொற்று நோய்களை தடுத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகலின் சர்வதேச நடவடிக்கைகள், அமேசான் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் ஏற்பாட்ட காட்டுத்தீ, தொடர்ச்சியாகவே கேள்விக்குறியில் உள்ள வடகொரிய - ஐக்கிய அமெரிக்க உறவுகள், மாலி மற்றும் நைஜீரியாவில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள், தொடர்ச்சியாக பெருகும் தேசியவாத கொள்கைகளை கையாள்வதில் அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என 2019 கடந்து செல்கின்றது.
2020ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் காங்கிரஸ் பிரேரணையுடன் ஆரம்பமாக உள்ள இந்நிலையில், சர்வதேச விவகாரங்களில் 2020இல் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதை சொல்லித்தான் புரியவேண்டிய தேவை இல்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad