Type Here to Get Search Results !

கட்டுரை; 2019 ஆம் ஆண்டு பொருளாராத வளர்ச்சி இலக்கு சாத்தியமாகுமா?

2019 ஆம் ஆண்டு பொருளாராத வளர்ச்சி இலக்கு சாத்தியமாகுமா?

2018 ஆம் ஆண்டு இலங்கை 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடையும் என இலங்கை மத்திய வங்கியினால் எதிர்ப்பார்ப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் இலங்கையால் 3.2 சதவீத பொருளாதார வளர்ச்சியையே பதிவு செய்ய முடிந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய அசாதாரண காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயத்துறையை மீளக்கட்டியெழுப்பும் பட்சத்தில் 2018 ஆம் ஆண்டு இலங்கை 4.2 – 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன ஏற்கெனவே எதிர்வுக்கூறியிருந்தன.

இவ்வாறான நிலையில் 2018 ஆம் ஆண்டு விவசாயத்துறையானது 4.8 சதவீத வளர்ச்சிப்போக்கை பதிவு செய்திருந்த போதிலும் இலங்கையானது 2017 ஆம் ஆண்டு பதிவு செய்த 3.1 சதவீத பொருளாதர வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 0.1 சதவீத அதிகரிப்பையே இவ்வாண்டில் பதிவு செய்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9,644,728  மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இது கடந்த 2017 ஆம் ஆண்டு 9344839  மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில்  299889 மில்லியன் ரூபா அதிகரிப்பபையே பதிவு செய்துள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தை அடுத்து இலங்கையின் பொருளாதாரமானது துரித வளர்ச்சியை நோக்கி நகர்ந்ததை அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு 3.5 சதவீதமதக இருந்த இலங்கையின் பொருளாதர வளர்ச்சி படிப்படியாக உயர்வடைந்து 2012 ஆம் ஆண்டு 9.1 சதவீதத்தை அடைந்திருந்தது. இதனை அடுத்து 2013 ஆம் ஆம் ஆண்டு 3.4 சதவீதமாக பதிவான வளர்ச்சி வீதம் அதன் தொடர்ச்சியாக குறைந்துக்கொண்டே சென்று 2018 ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாக பதிவாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் நான்கு பிரதான பகுதிகளான விவசாயம், கைத்தொழில், சேவை மற்றும் உற்பத்தி பொருட்கள் மீதான மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள் என்பன மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு  முறையே 7.9, 27.0, 56.8, 8.3 சதவீத பங்களிப்பை வழங்கிள்ளன.

கடந்த வருடம் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய விவசாயத்துறை வீழ்ச்சி இவ்வருடக்காலத்தில் சாதகமான நிலையை பதிவு செய்துள்ளது. அதன் பிரகாரம் கடந்த 2017 ஆம் ஆண்டு 7.1  மறை வளர்ச்சி வீதத்தை பதிவு செய்த நெல் உற்பத்தி 2018 ஆம் ஆண்டு 33.9 சதவீத நேர் வளர்ச்சி வீதத்தை பதிவு செய்துள்ளது.

மேலும் பழங்கள், நன்னீர் மீன்பிடி,எண்ணெய் சார்ந்தபழங்களின் வளர்ச்சி, வாசனைத்திரவியங்களின் வளர்ச்சி, கால்நடை உற்பத்தி, காய்கறி என்பனவும் வளர்ச்சிப்போக்கில் பதிவாகியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.


கைத்தொழில் துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 0.9 சதவீத வளர்ச்சியுடன் 27 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது. இதில் உற்பத்தித்துறையானது கடந்த வருடத்துடன் 3 சதவீத்தால் உயர்வடைந்துள்ளது.  மேலும் உணவு குடிப்பான வகைகள் மற்றும் புகையிலை உற்பத்தி, புடவை உற்பத்திகள் முறையே 5.5,3.6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கைத்தொழில் பிரிவுகளுக்கு இடையில் மின்சாரம்,வாயு, நீராவி மற்றும் குளிரூட்டி வழங்கல் நீர் சேகரிப்பு, சுத்திகரிப்பு மற்றும் வழங்கல் என்பன முறையே 4.1 மற்றும் 4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதே போல் இப்பிரிவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் சேவைத்துறையானது கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.7 சதவீத வளர்ச்சியுடன் 56.8 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.


இவ்வாறு 2017 ஆம் ஆண்டை விட மேற்குறிப்பிட்ட துறைகள் வளர்ச்சியடைந்த போதிலும் நாட்டின் பொருளாதார வளர்சியானது சிறிய அளவே அதிகரித்துள்ளதுடன். ஆதன் இலக்கை அடைய முடியாமல் போனமையானது இத்துறைகளில் இதன் பங்களிப்பு மேலும் தேவைப்படுகின்றது என்பதை உணர்த்துகின்றது.

2019 ஆம் ஆண்டு பொருளாதார இலக்கு
நாடு தற்போது முகம் கொடுத்துள்ள நிலை எதிர்க்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை மேலும் மந்தக்கதிக்கு கொண்டு செல்லும் சாத்திக்கூறுகள் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.5 – 4 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. இந்த இலக்கை நோக்கி தனது பொருளாதார நகர்வை ஆரம்பித்த இலங்கைக்கு நாட்டில் ஏற்பட்ட குண்டுத்தாக்குதல் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பொருளாதார இலக்கை அடைவது கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதே வேளை இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைக்குறித்து அறிக்கையிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதாரம் பாதகமான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையிலான செயற்பாடு;கள் முன்னெடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம். உயர் மட்டத்தில் காணப்படும் அரச கடன் மற்றும்; கடன் மீளளிப்பு மற்றும் கீழ் மட்டத்தில் பதிவாகியுள்ள செலாவனி கையிருப்பு காரணமாக தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
  

இவற்றை கவனத்தில் கொண்டு நோக்கும் போது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் நாட்டின் பொருளாதாதர வளர்ச்சியை விருத்தி செய்வதற்கு மேலும் முனைப்புடன் செயற்பட வேண்டிய நிலை தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதனை கருத்தில் கொண்டு பொருளாதாரத்தின் முக்கிய துறைகளான விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத்துறைகளை மேலும் விருத்தியடைய செய்ய வேண்டும்.  நாட்டின் வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல், முதலீடுகளை அதிகரித்தல், உற்பத்தி செயற்பாடுகளை விருத்தி செய்தல் மற்றும் ஏற்றுமதிகளை அதிகரிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.

கடந்த 30 வருடகால எமது நாட்டின் ஏற்றுமதி துறையானது போட்டிச்சந்தைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படாமல் குறித்து சில துறைகளை நம்பியே இருக்கின்றது. இதில் ஆடை ஏற்றுமதி,தேயிலை, இறப்பர்,இரத்தினக்கல் மற்றும் சுற்றுலாத்துறையை அடிப்படையாக கொண்டு காணப்படுகின்றது. இத்துறைகளில் இருந்தே அதிக வருமானத்தையும் பெற்று வருகின்றது. எனவே நாம் உலக சந்தை தேவைக்கு ஏற்றவாறு சந்தையின் கேள்வியை இணங்கண்டு அதற்கு ஏற்றால் போல் எமது ஏற்றுமதிகளை மாற்றியமைக்க வேண்டும்.

அத்துடன் ஏற்றுமதியின் உயர்வான வளர்ச்சிக்கு பாரிய மூலதன வழங்கல் மற்றும் பாரிய முதலீடுகள் உள்ளீர்க்கப்பட்டல் வேண்டும் மேலும் கவர்ச்சிகரமான பெறுபேறுகளை அடைந்துக்கொள்வதற்கு புதிய தொழில் நுட்பங்களை கண்டுப்பிடித்தல், நவீன முகாமைத்துவ தரவு முறைகள் மற்றும் சந்தைத் தொடர்பான தகவல்களை கொண்டிருத்தல் அவசியமாகும்.

எமது ஏற்றுமதி கட்டமைப்பில் முக்கிய இடம் வகிக்கும் தேயிலை ஏற்றுமதியானது ஏற்றுமதி வருமானத்தில் பெரும் பங்கை வகிக்கின்றது. ஒரு காலத்தில் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு காணப்பட்ட மவுசு தற்போது குறைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.எனவே தேயிலை உற்பத்தியின் வினைத்திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அதே போன்றே இறப்பர் உற்பத்தியும் குறைவடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு காரணம் சில பெருந்தோட்ட கம்பனிகளின் வினைத்திறனற்ற செயற்பாடாகும். எனவே பெருந்தோட்ட கம்பனிகளின் வினைத்திறனை அதிகரிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படல் அவசியமாகும்.

ஆதெ போன்றே பொருளாதர வளர்ச்சி வேகத்தை அதிகரிப்பதற்கு ஆடை உற்பத்தி துறையின் வினைத்திறனை அதிகரித்தல் அவசியமாகும். இலங்கையின் தைத்த ஆடை இறக்குமதிக்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையினை நாம் இதற்கு சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முன்னர் வழங்கப்பட்டிருந்த இந்த சலுகை 2010 ஆம் ஆண்டு இடை நிறுத்தப்பட்டதுடன் அது மீண்டும் 2017 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்றது இந்த கால இடை வெளியில் எமது நாட்டுக்கு 150 – 250 பில்லியன் அமெரிக்க டொலர் வரையான வருமான இழப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு 4.67 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்த ஆடை ஏற்றுமதி வருமானம் 5.32 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையின் சாதகமான தாக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 2025 ஆம் ஆண்டு இலக்கான 8 பில்லியன் அமெரிக்க டொலர் ஆடை ஏற்றுமதி இலக்கை அடைவதற்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும்.

இவ்வாறு இலங்கைக்கு வருமானத்தை ஈட்டித்தரும் பிரதான துறைகளின் நிலைக் குறித்து கண்டறிந்து அவற்றை வினைத்திறனான முறையில் செயற்படுத்துவதன் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் இலக்கை நோக்கி இலகுவாக நகர முடியும்.

தனி நபர் வருமான மட்டம்

இலங்கையை பொருத்தவரை மக்களின் வருமான மட்டமானது தென் கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 60 வருடக காலத்தில் கீழ் மட்டத்தில் இருந்து வருகின்றது. இலங்கையின் தனி நபர் வருமானம் 4000 அமெரிக்க டொலர் மட்டத்திலேயே இருந்து வருகின்றது. ஆந்த வகையில் 2018 ஆம் ஆண்டு இலங்கையிக் தனி நகர் வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில்  4,102 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்து 2017 ஆம் ஆண்டு 4,104  அமெரிக்க டொலராக பதிவாகி சிறிய வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது.


தனி நபர் வருமான அதிகரிப்பானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமையும். அத்துடன் பொருளாதர வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் பட்டசத்திலேயே தனி நபர் வருமான மட்டத்தை அதிகரிக்க முடியும். இவ்வாறான நிலையில் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 5 சதவீத்திலேயே காணப்படுகின்றது. இந்த வளர்ச்சி வேகமானது தனிநபர் வருமானத்தை அதிகரிக்க போதுமானதாக இருக்காது.

இலங்கையில் பொருளாதரா வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக அதிகரிக்கும் பட்சத்திலேயே 2025 ஆண்டளவில் தனிநபர் வருமானத்தை இரு மடங்காக அதிகரித்துக்கொள்ள முடியும். இந்த பொருளாதார வளர்ச்சி வேகம் 2009 ஆம் ஆண்டு எமது நாடு அடையப்பெற்ற போதிலும் அதை எம்மால் தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போய் விட்டது.

நாடு தற்போது முகம் கொடுத்துள்ள பயங்கரவாத அச்சுறத்தல் காரணமாக இவ்வருடத்தில் மதிப்பிடப்பட்ட பொருளாதார இலக்கை அடைவது எந்த அளவு சாத்தியம் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பங்களிப்பு இவ்வருடத்தில் எந்த அளவு இருக்கும் என்பதை உடனடியாக கணிக்க முடியாது. எனவே அத்துறைகளை பிரதானமானதாக கொள்ளாமல் உள்நாட்டு உற்பத்தியின் பால் கவனம் செலுத்தி அவற்றி விருத்தி அடைய செய்து எமது பொருளாதார இலக்கை அடைவதில் முனைப்புகாட்டுவதே காலத்திற்கு உகந்ததாகும்.

 இலங்கையின் பொருளாதாரம் பாதகமான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம். உயர் மட்டத்தில் காணப்படும் அரச கடன் மற்றும்  கடன் மீளளிப்பு மற்றும் கீழ் மட்டத்தில் பதிவாகியுள்ள செலாவணி கையிருப்பு காரணமாக தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகின்றது

(சர்வதேச நாணய நிதியம்)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad