Type Here to Get Search Results !

French Revolution - பிரெஞ்சுப் புரட்சி 1789–1799

பிரெஞ்சுப் புரட்சி 1789–1799  SrilankaGK  


பிரெஞ்சுப் புரட்சி  1789–1799 பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாகப் பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, மாற்றவியலாத உரிமைகள் (inalienable rights) போன்றவை பரவின. பிரான்சின் இடது சாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும் இம்மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தனர்.

1789 இல் ஸ்டேட் ஜெனரல் (பிரெஞ்சு பாராளுமன்றம்) கூட்டப்பட்டதுடன் பிரெஞ்சு புரட்சி துவங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் மன்னராட்சியின் வலது சாரி ஆதரவாளர்கள், மிதவாதிகள், இடது சாரி தீவிரவாதிகள், பிற ஐரோப்பிய நாடுகள் ஆகியோருக்கிடையே பிரான்சின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் பலப்பரீட்சை நடந்தது. பெரும் வன்முறைச் செயல்கள், படுகொலைகள், கும்பலாட்சி, அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்களெனப் பிரான்சில் பெரும் குழப்பம் நிலவியது. செப்டம்பர் 1792 இல் பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியும் அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லட்டின் தலைவெட்டு எந்திரம்மூலம் கொல்லப்பட்டனர். குடியரசின் புதிய ஆட்சியாளர்களுக்கிடையே அதிகாரப் போட்டிகள் மிகுந்து பிரான்சு 1793 இல் மேக்சிமிலியன் ரோபெஸ்பியரின் சர்வாதிகாரப் பிடியில் சிக்கியது. 1794இல் ரோபெஸ்பியர் கொல்லப்பட்ட பின் அவரது பயங்கர ஆட்சி முடிவுக்கு வந்தது. பின் 1799 வரை டைரக்டரேட் என்ற அமைப்பு பிரான்சை ஆண்டது. அதற்குப் பின் நெப்போலியன் பொனபார்ட் ஆட்சியைக் கைப்பற்றிச் சில ஆண்டுகளில் தன்னைத் தானே பிரான்சின் பேரரசராக அறிவித்துக் கொண்டார். நவீன வரலாற்று யுகத்தின் வளர்ச்சியில் பிரெஞ்சுப் புரட்சியின் பங்கு பெரியது. குடியரசு ஆட்சிமுறை, புதிய அரசியல் கொள்கைகள், தாராண்மிய மக்களாட்சி முறை, மதச்சார்பின்மை, ஒட்டுமொத்தப் போர்முறை ஆகியவை பிரெஞ்சு புரட்சியால் உருவாகி வளர்ச்சி பெற்ற விசயங்களுள் அடங்கும். 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய அரசியல் வரலாற்று நிகழ்வுகளிலும் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கங்கள் காணக் கிடைக்கின்றன.

புரட்சிக்கான காரணங்கள்

புரட்சிக்கு முந்தைய பிரான்சின் “பழைய ஆட்சி”யின் (Ancien Régime) கூறுகளே பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டன. பிரெஞ்சு சமூகத்தின் நலிவடைந்த பிரிவுகள் பசி, ஊட்டச்சத்துகுறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தன. பல ஆண்டுகளாக உணவுப் பொருட்களின் அறுவடை தொய்வடைந்திருந்ததால் ரொட்டியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. அறுவடைகளில் தொய்வு, உணவுப் பொருள் விலையேற்றம், ஊர்ப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு உணவுப்பொருட்களைக் கொண்டு செல்லப் போதிய போக்குவரத்து கட்டமைப்பின்மை போன்ற பொருளாதார காரணிகள் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகளில் பிரெஞ்சு குடிமைச் சமூகத்தை நிலை குலையச் செய்திருந்தன.

முந்தைய ஆண்டுகளில் பிரான்சு ஈடுபட்டிருந்த போர்களின் விளைவாக அந்நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்சின் ஈடுபாட்டால் பெரும் பொருள் செலவாகியிருந்தது. வட அமெரிக்காவிலிருந்த தனது காலனிகளின் கட்டுப்பாட்டைப் பிரான்சு இழந்ததும், பெருகி வந்த பிரித்தானிய வர்த்தக ஆதிக்கமும் போர்களினால் விளைந்த சமூகத் தாக்கத்தை அதிகமாக்கின. பிரான்சின் திறனற்ற பொருளாதார முறைமை அரசின் கடன்சுமையை சமாளிக்க இயலாமல் திணறியது. நாட்டின் வரிவசூல் முறையின் போதாமையால் இக்கடன்சுமை கூடிக் கொண்டே சென்றது. அரசு கடன்சுமையால் திவாலாவதைத் தவிர்க்க அரசர் புதிய நிதி திரட்ட முனைந்தார். இதற்கு ஒப்புதல் பெற 1787 இல் குறிப்பிடத்தக்கவர்களின் மன்றத்தைக் (Assembly of Notables) கூட்டினார்.

வெர்சாயில் அமைந்திருந்த அரசவை கீழ்தட்டு மக்களின் கஷ்டங்களைக் கண்டுகொள்ளாது ஒதுங்கியிருக்கிறதென்ற பிம்பம் உருவாகி வலுப்பட்டது. மன்னர் பதினாறாம் லூயி சர்வாதிகாரம் பெற்றவராயினும் மன உறுதியற்றவராக இருந்தார். கடுமையான எதிர்ப்பு எழுந்தால் தனது முடிவுகளை மாற்றிக் கொள்பவராக இருந்தார். லூயி அரசின் செலவுகளைக் குறைத்தாலும், நாடாளுமன்றத்தில் அவரது எதிரிகள் அவரது சீர்திருத்த முயற்சிகளைத் தோற்கடித்து விட்டனர். லூயியின் கொள்கைகளை எதிர்த்தவர்கள் அரசு மற்றும் அதிகாரிகளைத் தாக்கித் துண்டறிக்கைகளை அச்சடித்து விநியோகம் செய்தனர். இச்செயல்கள் அரசின் அதிகார மையத்தை உலுக்கியதுடன், அதற்கு எதிராக மக்களைத் தூண்டின.

அறிவொளிக்காலக் கொள்கைகள் பிரெஞ்சு சமூகத்தில் பரவியதும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மன்னராட்சியின் முழுச்சர்வாதிகாரம், பிரபுக்கள் அனுபவித்து வந்த உரிமைகள், நாட்டின் நிருவாகத்தில் திருச்சபையின் தலையீடு போன்றவற்றுக்கு எதிராக உழவர்கள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே கலக உணர்வு எழுந்தது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சமதர்மத்தை அவர்கள் விரும்பலாயினர். அரசி மரீ அன்டோனைட்டுக்கு எதிராக மக்களின் உணர்வு திரும்பியது. அவரை ஆஸ்திரியப் பேரரசின் கையாளாகவும் உளவாளியாகவும் மக்கள் கருதினர். மக்களின் பிரதிநிதியாகக் கருதப்பட்ட நிதி அமைச்சர் ஜாக் நெக்கரை லூயி பதவியிறக்கியது மக்களின் கோபத்தை அதிகமாக்கியது. புரட்சி வெடிக்க இவை கூடுதல் காரணங்களாக அமைந்தன

புரட்சிக்கு முன் நிதி நெருக்கடி

பதினாறாம் லூயி அரசணை ஏறியபோது பிரான்சில் நிதி நெருக்கடி நிலவியது. அரசின் செலவுகள் அதன் வருமானத்தைவிட மிக அதிகமாக இருந்ததால், அரசு திவாலாகும் நிலையில் இருந்தது.[3] ஏழாண்டுப் போர், அமெரிக்க விடுதலைப் போர் போன்றவற்றில் பிரான்சு பங்கேற்றமையே இந்நிலைக்கு காரணமாக இருந்தது.[4] மே 1776 இல் பொருளாதாரத்தை சீர்திருத்தத் தவறிய நிதி அமைச்சர் டர்கோ பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு வெளிநாட்டவரான ஜாக் நெக்கர் நிதிக் கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார். அவர் புரோட்டஸ்தாந்த திருச்சபையைச் சேர்ந்தர்வராதலால் அவருக்கு அதிகாரப்பூர்வமாக அமைச்சர் பதவி தரப்படவில்லை.

பிரான்சின் கடுமையான பிற்போக்கு வரி முறைகீழ் தட்டு மக்களுக்குப் பெரும் பாரமாக இருப்பதை நெக்கர் உணர்ந்தார். அதே சமயம் பிரபுக்களுக்கும் திருச்சபை பாதிரியார்களுக்கும் பல்வேறு வரிவிலக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அதற்கு மேலும் மக்களின் வரிச்சுமையைக் கூட்ட முடியாதென வாதிட்ட நெக்கர், பிரபுக்களுக்கும் பாதிரியார்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த வரிவிலக்குகளை குறைத்து, மேலும் வெளிநாடுகளில் கடன் வாங்கி நாட்டின் நிதிப் பற்றாகுறையைச் சமாளிக்கலாமெனப் பரிந்துரைத்தார். இதனை அரசரின் அமைச்சர்கள் விரும்பவில்லை. தனது நிலையைப் பலப்படுத்தத் தன்னை அதிகாரப்பூர்வமாக அமைச்சராக்கும் படி நெக்கர் வேண்டினார். ஆனால் அவ்வாறு செய்ய மறுத்த லூயி, நெக்கரைப் பதவிலிருந்து விலக்கினார். அவருக்குப் பதிலாகச் சார்லஸ் தே கலோன் நிதிக் கட்டுப்பாட்டாளரானார். ஆரம்பத்தில் தாராளமாகச் செலவு செய்த கலோன், விரைவில் நிதி நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்தார். அதைச் சமாளிக்க ஒரு புதிய வரி முறையைப் பரிந்துரைத்தார்.

அப்பரிந்துரையில் பிரபுக்களையும் பாதிரியார்களையும் பாதிக்கும் நில வரி ஒன்றும் அடங்கியிருந்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் குறிப்பிடத்தக்கவர்களின் அவையைக் கூட்டி ஆதரவு தேடினார் கலோன். ஆனால் அந்த அவையில் அவருக்கு ஆதரவு கிட்டாமல் அவரது நிலை பலவீனமானது. இதனைச் சமாளிக்க மன்னர் லூயி 1789 இல் எஸ்டேட்ஸ் ஜெனரல் எனப்படும் பொது மன்றத்தைக் கூட்டினார். 1614 க்குப்பின்னர் பொது மன்றம் கூட்டப்படுவது அதுவே முதல் முறை. இச்செயல் போர்பன் வம்ச முடியாட்சியின் பலவீனத்தைப் பறைசாற்றியது.

1789 இன் பொது மன்றம்

பிரான்சின் பொதுமன்றம் பாதிரியார்கள், பிரபுக்கள் மற்றும் ஏனைய மக்கள் என்ற மூன்று பெரும் பிரிவுகள் கொண்டிருந்தது.அதற்கு முன்னர் 1614 இல் இறுதியாகக் கூடிய பொதுமன்றத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வாக்கு தரப்பட்டிருந்தது. ஏதேனும் இரு பிரிவுகள் கூட்டணி சேர்ந்தால் மூன்றாவது பிரிவினைத் தோற்கடித்து விடலாம். ஆனால் 1789 இல் அவ்வாறு இருக்கக் கூடாதெனக் குரல்கள் எழுந்தன. "முப்பது பேர் குழு" என்ற பாரிசிய தாராண்மிய அமைப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு தர வேண்டுமெனப் போராடத் தொடங்கியது.ஆனால் இக்கோரிக்கை குறிப்பிடத்தக்கவர்களின் மன்றத்தால் ஏற்கப்படவில்லை. ஆனால் மன்னர் லூயி அதனை ஏற்றார். அதே வேளை ஒவ்வொரு உறுப்பினரின் வாக்குக்கும் எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமென்பதை பொதுமன்றமே தீர்மானிக்கலாம் என்று விட்டுவிட்டார்.

1789 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் பொதுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் மூன்றாம் பிரிவுக்கு வாக்களிக்க ஒருவர் பிரான்சில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டியிருந்தது. மேலும் குறைந்த பட்சம் 25 வயது நிரம்பியுள்ளவராகவும் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் வசிக்கும் வரி செலுத்துபவராகவும் இருக்க வேண்டியிருந்தது.மக்கள் அதிக எண்ணிக்கையில் இந்தத் தேர்தலில் பங்கேற்றனர். மொத்தம் 1201 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

அவர்களில் 201 பேர் பிரபுக்கள், 300 பேர் பாதிரியார்கள், எஞ்சிய 610 பேர் மூன்றாம் பிரிவினராகிய பொதுமக்கள். உறுப்பினர்களுக்குத் துணைபுரிவதற்காகப் பொதுமக்களின் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு "முறையீட்டு நூல்கள்" உருவாக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன் மிகவும் புரட்சிகரமானவையெனக் கருதப்பட்ட கருத்துகளை இந்நூல்கள் சாதாரணமாக முன்வைத்தன. எனினும் அவை முடியாட்சி முறைக்கே ஆதரவு தெரிவித்தன.

ஊடகத் தணிக்கை நீக்கப்பட்ட பின்னர் தாராண்மியக் கருத்துடைய பிரபுக்களும், பாதிரியார்களும் எழுதி வெளியிட்ட துண்டறிக்கைகள் பரவலாகப் படிக்கப்பட்டன.ஜனவரி 1789 இல் கத்தோலிக்கப் பாதிரியாரும், கோட்பாட்டாளருமான ஆபி சியேஸ், மூன்றாவது பிரிவின் முக்கியத்துவத்தைப் பற்றி "மூன்றாவது பிரிவு என்பது யாது?" என்ற தலைப்பில் துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "மூன்றாவது பிரிவு என்பது அனைத்துமாகும். இதுவரை அரசியல் அடுக்கமைப்பில் அதற்கு இடமில்லை. இனிமேல் தனக்கென ஒரு இடத்தை வேண்டுகிறது." என்று வாதிட்டார். மே 5, 1789 இல் வெர்சாயில் நெக்கர் ஆற்றிய மூன்று மணி நேர உரையுடன் பொதுமன்றக் கூட்டம் தொடங்கியது.

தேசிய மன்றம் (1789)

பொதுமன்ற உறுப்பினர்களின் தகுதிகளைச் சரிபார்ப்பதில் மூன்றாவது பிரிவுக்கும் ஏனைய இரு பிரிவினருக்குமிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஜூன் 12, 1789 அன்று அபீ சியேசின் தூண்டுதலின் பெயரில் மூன்றாவது பிரிவினர் தங்கள் உறுப்பினர்களின் தகுதிகளைத் தாங்களே சரி பார்க்கத் தொடங்கினர். தங்களைத் தாமே பிரான்சின் "தேசிய மன்றம்" (National Assembly) என்று அறிவித்துக் கொண்டனர்.[18] இப்புது மன்றம் "பிரிவுகளின் மன்ற"மாக இல்லாது "மக்களின் மன்ற"மாக அமையும் என்று அறிவித்தனர். பிற பிரிவுகள் இதில் இணைந்து கொள்ளலாம் ஆனால் அவர்கள் இணைந்தாலும் இணையாவிட்டாலும் நாட்டின் நிருவாகம் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டிவிட்டனர்.

இந்தப் புதிய மன்றம் கூடுவதைத் தடுக்க நினைத்த லூயி, மன்றம் கூடவிருந்த சாலே தே எடாட்ஸ் அரங்கை மரத்தச்சு வேலை நடக்கவுள்ளதென்று கூறி மூடிவிட்டார். வெளியே மன்றம் கூடத் தட்பவெட்பநிலை இடம் தரவில்லை. எனவே தேசிய மன்றம் அருகிலிருந்த ஒரு உட்புற டென்னிஸ் அரங்கில் கூடியது. அங்கு மன்ற உறுப்பினர்கள் ஜூன் 20, 1789 இல் புகழ்பெற்ற "டென்னில் அரங்கு சூளுரை" யினை ஏற்றனர். அதில பிரான்சுக்கென ஒரு தனி அரசமைப்புச் சட்டம் இயற்றப்படும் வரை மன்றம் கூடுமென்று உறுதி பூண்டனர். பாதிரியார் உறுப்பினர்களில் பெரும்பாலானோரும் 47 பிரபு உறுப்பினர்களும் விரைவில் அவர்களுடன் இணைந்து கொண்டனர். ஜூன் 27ம் தேதி மன்னரின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக இப்புதிய மாற்றத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதே வேளை பாரிசு மற்றும் வெர்சாயைச் சுற்றி பிரான்சின் இராணுவம் குவியத் தொடங்கியது. இப்புதிய மன்றத்துக்குப் பிரான்சின் நகரங்களிலிருந்து ஆதரவு செய்திகள் வந்து குவிந்தன.

தேசிய அரசியல் நிர்ணய மன்றம் (1789–1791)பாஸ்டில் சிறையுடைப்பு

நெக்கர் வெளிப்படையாக மக்களைத் தூண்டி விட்டது, பிரெஞ்சு அரசவையில் அவருக்குப் பல எதிரிகளை உருவாக்கியிருந்தது. அரசி மரீ அன்டோய்னெட், அரசரின் தம்பி காம்டி தே ஆர்டாய்ஸ் மற்றும் பிற பழமைவாதிகள் நெக்கரை பதவி நீக்கம் செய்யும்படி அரசரை வலியுறுத்தினர். நெக்கர், அரசின் கடன்சுமை பற்றிப் பிழையான ஒரு அறிக்கையை உருவாக்கிப் பொது மக்கள் பார்வைக்கு அளித்தார். இதன் பின்னர் ஜூலை 11, 1789 அன்று அரசர் லூயி அவரைப் பதவி நீக்கம் செய்து நிதி அமைச்சகத்தை முழுமையாகப் புனரமைத்தார்

லூயியின் முடிவுகள் தேசிய மன்றத்தைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன எனப் பல பாரிசுக்காரர்கள் கருதினர். நெக்கரின் பதவி நீக்கம் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்ட முதல் நாளே வெளிப்படையாக அரசருக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டனர். தேசிய மன்றத்தை மூட வெளிநாட்டுக் கூலிப்படையினர் வரவழைக்கப்படலாமென்றும் அவர்கள் அஞ்சினர். வெர்சாயில் கூடிய தேசிய மன்றம், அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க இடைவிடாத கூட்டமொன்றைத் தொடங்கியது. பாரிஸ் முழுவதும் கலவரமும் வன்முறையும் பரவின. கலவரக்காரர்கள் விரைவில் நகரக் காவல்படையினர் சிலரது ஆதரவையும் பெற்றனர்.

ஜூலை 14ம் நாள் கலவரக்காரர்களின் கவனம் பாஸ்டில் கோட்டைச் சிறையின் உள்ளே அமைந்திருந்த பெரும் ஆயுதக் கிடங்கு பக்கம் திரும்பியது. பாஸ்டில் முடியாட்சியின் அதிகாரச் சின்னமாகக் கருதப்பட்டது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் கலகக்காரர்கள் பாஸ்டிலைக் கைப்பறினர். பாஸ்டிலின் ஆளுனர் பெர்னார்ட் தே லானே கொல்லப்பட்டார். பின் அங்கிருந்து நகர மன்றத்துக்குச் சென்ற கலவரக்காரர்கள் நகரத் தந்தை ஜாக் தே ஃபிளசெல்சை மக்கள் துரோகியெனக் குற்றம் சாட்டி கொலை செய்தனர். வன்முறையைக் கண்டு அஞ்சிய அரசர் தனது இறுக்கமான நிலைப்பாடுகளைத் தளர்த்தினார். மார்க்கி தே லா ஃபயாட் பாரிசு நகரக் காவல்படையின் தளபதியாகவும், தேசிய மன்றத் தலைவர் பெய்லி நகரத் தந்தையாகவும் அறிவிக்கப்பட்டார். ஜூலை 17ம் தேதி பாரிசுக்குச் சென்ற லூயிக்கு அங்கு பிரெஞ்சு மூவர்ணக் கொடி நிறம் கொண்ட சின்னம் (cockade) அளிக்கப்பட்டது (சிவப்பு-வெள்ளை-நீலம் மூவர்ணக் கொடி பிரெஞ்சு புரட்சிக்காரர்களின் அடையாளமாகக் கருதப்பட்டது).நெக்கர் மீண்டும் நிதி ஆலோசகர் ஆக்கப்பட்டார். ஆனால் அவர் தனக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று கோரியது அவருக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கை வெகுவாகக் குறைத்து விட்டது.

நகரங்களில் அதிகாரிகளின் கட்டுப்பாடு வேகமாகச் சீர்குலைந்து வன்முறையும் திருட்டும் அதிகரித்தன. இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்தென அஞ்சிய பிரபுக்கள் பலர் தங்கள் குடும்பங்களோடு அண்டை நாடுகளுக்குத் தப்பி ஓடினர். அங்கிருந்தபடி எதிர் புரட்சியாளர்களுக்கு நிதியுதவி செய்து வந்தனர். மேலும் அண்டை நாட்டு மன்னர்களைப் பிரெஞ்சு நிலவரத்தில் தலையிட்டு எதிர் புரட்சிக்குப் படையுதவி செய்யும்படி கோரினர்.

ஜூலை இறுதி கட்டத்தில் "மக்களின் இறையாண்மை" என்ற கருத்து பிரான்சு முழுவதும் பரவி விட்டது. அயல்நாட்டு படையெடுப்புகளை எதிர்கொள்ள ஊர்ப்புறங்களில் பொதுமக்கள் ஆயுதமேந்திய குழுக்களை உருவாக்கினர். அவர்களில் சிலர் பிரபுக்களின் மாளிகைகளையும் தாக்கினர். வேகமாகப் பரவிய வதந்திகளும் பொதுமக்களின் அச்சமும் மேலும் மேலும் கலவரங்களுக்கு வித்திட்டன. சட்டஒழுங்கின் சீர்குலைவு தொடர்ந்தது.

அரசியல் சட்டம் இயற்றும் முயற்சிகள்
ஆகஸ்ட் 4, 1789 அன்று தேசிய அரசியல் நிர்ணய மன்றம் நிலமானிய முறைமையை ஒழித்தது. பிரபுக்களின் வரிவசூலிக்கும் உரிமையையும், பாதிரியார்களின் நில உரிமைகளையும் ரத்து செய்தது. பிரபுக்கள், பாதிரியார்கள், நகரங்கள், மாகாணங்கள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன. இத்தீர்மானங்கள் "ஆகஸ்ட் தீர்மானங்கள்" என்றழைக்கப்பட்டன. ஆகஸ்ட் 26, 1789 இல் தேசிய மன்றம் "மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகளின் சாற்றல்" (Declaration of the Rights of Man and of the Citizen) அறிக்கையை வெளியிட்டது. தேசிய அரசியல் மன்றம், அரசியல் சட்டமியற்றும் மன்றமாக மட்டுமல்லாது, நாடாளுமன்றமாகவும் செயல்பட்டது.

புதிய நாடாளுமன்றம் ஈரங்க அவையாக இருக்க வேண்டுமென்ற ஆலோசனை நிராகரிக்கப்பட்டது. பிரான்சின் புதிய நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு அவை மட்டும் இருந்தது. அரசருக்கு "தாமதப்படுத்தும் தடையுரிமை" ("suspensive veto") மட்டும் வழங்கப்பட்டது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் முடிவுகளை அரசரால் தாமதப்படுத்தப்படுத்த மட்டுமே இயலும். அதனை ரத்துச் செய்ய இயலாது. அடுத்து தேசியமன்றம், அதுவரை அமலில் இருந்த மாகாண முறையை ஒழித்து அதற்குப் பதிலாக ஒரே சீரான பரப்பளவும், மக்கள் தொகையும் கொண்ட 83 டிபார்ட்மென்டுகளாக நாட்டைப் பிரித்தது. மன்றத்தின் கவனம் பெரும்பாலும் அரசியல் விசயங்களில் இருந்ததால், நாட்டின் கடன் சுமை மேலும் கூடி, நிதி நெருக்கடி தீவிரமானது. ஹானோர் மிரபியூவின் முயற்சியால் மன்றத்தின் கவனம் இச்சிக்கலின் பக்கம் திரும்பியது. நிலைமையைச் சீர் செய்ய நெக்கருக்கு முழு நிதிச் சர்வாதிகார உரிமைகள் அளிக்கப்பட்டன.

வெர்சாய் நோக்கிப் பெண்கள் அணிவகுப்பு
அக்டோபர் 1, 1789 அன்று அரசரின் மெய்க்காப்பாளர்களுக்கு நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் தேசிய மூவர்ணச் சின்னம் மிதிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதென ஒரு வதந்தி பரவியது. இதனால் கோபம் கொண்ட பாரிஸ் நகரப் பெண்கள் அக்டோபர் 5ம் நாள் பாரிசின் சந்தைகளில் கூடத் தொடங்கினர். நகர மன்றத்துக்கு அணிவகுத்துச் சென்று தங்களது பிரச்சனைகளை முறையிட்டனர். ரொட்டி பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை நகர அதிகாரிகள் தீர்க்க வேண்டுமென்று கோரினர். தேசிய மன்றத்தை முடக்க அரசவை மேற்கொள்ளும் முயற்சிகளை நிறுத்திக் கொண்டு, அரசரும் அரசவையும் பாரிசு நகருக்கு இடம் பெயர வேண்டுமென்று வேண்டினர்.நகர அதிகாரிகளின் பதில்களால் திருப்தி அடையாத 7000 பெண்கள் வெர்சாய் நோக்கி அணிவகுத்துச் சென்றனர். தங்களுடன் பீரங்கிகளையும் மற்ற பல சிறிய ஆயுதங்களையும் எடுத்துச் சென்றனர். நிலைமையைச் சமாளிக்க லஃபயாட் தலைமையில் 20,000 நகரக் காவல் படையினர் அனுப்பப்பட்டனர். எனினும் அணிவகுப்பு கட்டுக்கடங்காமல் போனது. வெர்சாய் அரண்மனையுள் புகுந்த கும்பல் அங்கு பல காவலாளிகளைக் கொன்றது. மன்னர் லூயியிடம் பேசிய லஃபயாட், மன்னரின் ஆட்சிப்பீடம் பாரிசுக்கு இடம்பெயர வேண்டுமென்ற கலவரக்காரர்களின் கோரிக்கையை எடுத்துக்கூறி அதற்கு லூயியை ஒப்புக்கொள்ளச் செய்தார்.அக்டோபர் 6, 1789 அன்று அரசரும் அரச குடும்பத்தினரும் வெர்சாயிலிருந்து பாரிசுக்கு இடம் பெயர்ந்தனர். இச்செயல் மூலம் தேசிய மன்றத்தை அரசவை முழுமையாக ஏற்றுக் கொண்டது.

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் பெருமளவு குறைந்து அரசின் நிலை பலப்பட்டது. பழைய ஆட்சியில் திருச்சபையே நாட்டின் மிகப்பெரும் நில உரிமையாளராக இருந்தது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 10% திருச்சபைக்கே சொந்தமாக இருந்தது. திருசபைக்கு அரசின் வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த அதேவேளை, அதற்கு மக்களின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை வரியாகப் பெறும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. திருச்சபையின் செல்வமும் அதிகாரமும் பல குழுக்களைக் பெருங்கோபம் கொள்ளச் செய்தன. பிரான்சில் சிறுபான்மையினராக இருந்த புரோட்டஸ்தாந்தர்கள் பலர் கத்தோலிக்கத்தை எதிர்க்கும் ஒரு அரசை விரும்பினர். வோல்ட்டயர் போன்ற அறிவொளி இயக்கச் சிந்தனையாளர்கள் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரான கருத்துகளைப் பரப்பினர்.18ம் நூற்றாண்டு பிரான்சில் அரசவையும் திருச்சபையும் மிக நெருக்கமான கூட்டணி கொண்டிருந்தன.

மே 1789 இல் பெரும் மன்றம் கூடிய போது திருச்சபைமீது பொதுமக்கள் கொண்டிருந்த கோபம் அதன் செல்வாக்கை வெகுவாகக் குறைத்து விட்டது. பெரும் மன்றம் ஒழிக்கப்பட்டு அதற்குப் பதிலாகத் தேசிய மன்றம் கூடத் தொடங்கியது திருச்சபையின் அதிகாரத்தை மேலும் குறைத்தது. ஆகஸ்ட் 4, 1789 இல் தேசிய மன்றம் திருச்சபையின் பத்தில்-ஒரு-பங்கு வரி விதிக்கும் அதிகாரத்தை ரத்து செய்தது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க திருச்சபைச் சொத்துக்களை நவம்பர் 2 அன்று நாட்டுடைமையாக்கியது. இந்தச் சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு அசைக்னாட்ஸ் (assignats) என்ற புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியது. திருச்சபையின் அதிகாரங்களும் பொறுப்புகளும் முழுமையாக அரசில் கையில் வந்தன.தேசிய மன்றம் டிசம்பர் மாதம் முதல் திருச்சபையின் சொத்துகளை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஈட்டும் முயற்சியில் இறங்கியது. அடுத்த சில மாதங்களில் துறவற மற்றும் சமய அமைப்புகள் அனைத்தும் புதிய சட்டங்கள்மூலம் ஒழிக்கப்பட்டன. துறவிகள் மீண்டும் இல்வாழ்க்கைக்குத் திரும்ப ஊக்குவிக்கப்பட்டனர். அவர்களில் சில விழுக்காட்டினர் அவ்வாறே செய்தனர்.

ஜூலை 12, 1790 அன்று இயற்றப்பட்ட பாதிரியார்களுக்கான குடிமைச் சட்ட அமைப்பு, எஞ்சியிருந்த பாதிரியார்களை அரசு ஊழியர்களாக மாற்றியது. ஆயர்களுக்கும், பங்குத் தந்தையர்களுக்கும் தேர்தல் முறையை அறிமுகம் செய்ததோடு அவர்களது ஊதியத்தையும் நிர்ணயம் செய்தது. இத்தேர்தல் முறையினை திருத்தந்தையின் அதிகாரத்தில் தலையீடாகக் கருதிய கத்தோலிக்கர்கள் பலர் அவற்றை எதிர்த்தனர். இதனால் நவம்பர் 1790 முதல் பாதிரியார்கள் அனைவரும் குடிமைச் சட்ட அமைப்பின் மீது விசுவாச உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய மன்றம் அறிவித்தது.இம்முடிவு பாதிரியார்களை இரு பிளவுகளாக்கியது - பாதிரியார்களில் 24 விழுக்காட்டினர் இம்முடிவினை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்; மற்றொரு பிரிவினர் திருத்தந்தைக்கு விசுவாசமாக இருந்தனர்.பெரும்பாலானோர் உறுதிமொழி எடுக்க மறுத்ததால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. அவர்கள் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர் அல்லது துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.திருத்தந்தை ஆறாம் பயஸ் புதிய குடிமைச் சட்ட அமைப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பிரான்சில் மேலும் கத்தோலிக்கத் திருச்சபை தனிமைப்படுத்தப்பட்டது. பின்வந்த பயங்கர ஆட்சியின் போது கிறித்தவத்தை ஒழிக்க மிகத் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சதிகளும் புரட்சி தீவிரமடைதலும்

தேசிய மன்றத்தில் கோஷ்டிகள் உருவாகி அணிசேரத் தொடங்கின. தே கசாலஸ் என்ற பிரபுவும் ஆபே மாரி என்ற பாதிரியும் புரட்சிக்கு எதிரான அணிக்குத் தலைமை தாங்கினர். மன்றத்தில் வலக்கைப் பக்கம் அவர்கள் அமர்ந்திருந்ததால் அவ்வணி "வலதுசாரிகள்" என்றழைக்கப்பட்டது. "மன்னராட்சி ஜனநாயகவாதி"கள் குழுவுக்கு நெக்கர் தலைமை தாங்கினார். பிரான்சில் பிரித்தானியாவைப் போன்று அரசியல்சட்ட முடியாட்சி ஒன்றை நிறுவ அவர்கள் விரும்பினர். மிரபியூ, லாஃபயாட், பெய்லி ஆகியோரது தலைமையில் இடதுசாரிகள் அணி செயல்பட்டது. ஏட்ரியேன் டூபோர்ட், பர்னாவே, மாக்சிமிலியன் ரோபெஸ்பியர் ஆகியோர் தீவிர இடதுசாரிகளாக விளங்கினர். சில காலம் ஆபே செயேஸ் இடதுசாரிகள், தீவிர இடதுசாரிகளின் ஒத்துழைப்போடு பல சட்டங்கள் இயற்றப்பட காரணமானார்.

புரட்சியும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையும்

தேசிய மன்றம் பழைய ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட பிரபுக்களின் சின்னங்கள் அனைத்தையும் ரத்து செய்தது. இதனால் கோபம் கொண்ட பிரபுக்கள் பலர் பிரான்சை விட்டு வெளியேறி நாடு கடந்த எதிர் புரட்சியாளர்களுடன் இணைந்து கொண்டனர். பொது மன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஓராண்டாக இருந்தாலும் டென்னிஸ் கள சூளுரையில் அரசியலமைப்புச் சட்டமொன்று உருவாகும் வரை இடைவிடாது கூடப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால் அவர்களது பதவிக்காலம் முடிவிலாது தொடரும் நிலை உருவானது. இதனை எதிர்த்த வலதுசாரிகள் புதிதாகத் தேர்தல் நடத்தக் கோரினர். ஆனால் மிரபியூ தலைமையிலான இடதுசாரிகள் அக்கோரிக்கையை ஏற்கவில்லை. 1790 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுப் படை பெருமளவு சீர்குலைந்திருந்தது. பெரும்பாலான இராணுவ அதிகாரிகள் பிரபுக்களாக இருந்தனர். அவர்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பது அரிதானது. கீழ்த்தட்டு வர்க்கத்தினரான படைவீரர்கள் பல இடங்களில் தங்களது அதிகாரிகளை எதிர்த்துக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். 

இதனால் படையில் ஒழுங்கு குலைந்து, அதிகாரிகள் வேறு நாடுகளுக்கு இடம் பெயரத் தொடங்கினர். இதனால் பிரெஞ்சுப் படையில் அனுபவமிக்க தளபதிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் பிரெஞ்சு அரசியலில் பல அரசியல் மன்றங்களின் செல்வாக்கு கூடத் தொடங்கியது. ஜேக்கபின் மன்றம், இத்தகு மன்றங்களில் முதன்மையானதாக விளங்கியது. ஆகஸ்ட் 10, 1790 அன்று 152 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இம்மன்றம் ஆரம்பத்தில் ஒரு பொது அரசியல் விவாத மன்றமாகத் தொடங்கப்பட்டது. உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து கருத்து வேறுபாடுகள் கூடக்கூடப் பல குழுக்கள் பிரிந்து தனி மன்றங்கள் அமைத்துக் கொண்டன. 89ம் ஆண்டின் மன்றம் இவ்வாறு பிரிந்து சென்றவற்றுள் ஒன்று.

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் பணியில் தேசிய மன்றம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. மன்னரின் கட்டுப்பாட்டிலிருந்து நீதித்துறை விடுவிக்கப்பட்டு, நீதிபதிகள் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கினர். அவர்களது பதவிக் காலங்கள் தற்காலிகமாக்கப்பட்டன. மன்னரைத் தவிர அனைத்து மரபுவழிப் பதவிகளும் ஒழிக்கப்பட்டன. குற்றவியல் வழக்குகளை விசாரிக்க நடுவர் குழாம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மன்னரால் பிற நாடுகள்மீது போர் தொடுக்கலாம் என்று முன்மொழிய மட்டுமே இயலும். அவரது முன்மொழிவை ஏற்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் இருந்தது. உள்ளூர் வர்த்தகத் தடை வரிகள், வர்த்தகக் குழுக்கள், தொழில் குழுக்கள் ஆகியவை ஒடுக்கப்பட்டன. தொழில் செய்ய முனையும் எந்தவொரு தனி நபரும் தகுந்த உரிமத்தைப் பெறுவதன் மூலம் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டார். வேலை நிறுத்தங்கள் சட்டவிரோதச் செயல்களாக்கப்பட்டன.

1791 குளிர்காலத்தில் முதல்முறையாக நாடு கடந்த எதிர் புரட்சியாளர்களுக்கு எதிராகச் சட்டமியற்றுவதைப் பற்றித் தேசிய மன்றத்தில் விவாதம் நடைபெற்றது. புரட்சியினைத் தக்கவைப்பதா அல்லது தனி மனித உரிமைகளை மதிப்பதா என்ற போக்கில் இவ்விவாதம் சென்றது. நாடு கடந்த எதிர் புரட்சியாளர்களுக்கு எதிராகச் சட்டமியற்றுவதை எதிர்த்த மிராபியூ, அவ்வாறான சட்டம் கொடுங்கோல் டிராக்கோ சட்டமாக இருக்கும் என்று வாதிட்டார். அவர் உயிருடன் இருந்த வரை அவ்வாறான சட்டமியற்றலைத் தடுத்து விட்டார். ஆனால் ஏப்ரல் 2, 1791 இல் அவர் இறந்த பின்னர் அதற்கு வலுவான எதிர்ப்பின்றி போனது. அவ்வருட இறுதிக்குள் அத்தகு சட்டமொன்று இயற்றப்பட்டது.

அரச குடும்பத்தின் தப்பித்தல் முயற்சி

அரசி மரீ அண்டோனெய்ட் மற்றும் பிற அரச குடும்பத்தினரின் தூண்டுதலால் மன்னர் லூயி பிரெஞ்சுப் புரட்சியினை எதிர்த்தார். ஆயினும், பிற நாட்டரசர்களின் உதவியை நாடாது அமைதி காத்தார். அதற்குப் பதிலாகப் புரட்சியாளர்களையும் நாடு கடந்த எதிர் புரட்சியாளர்களையும் ஒரு சேர வெறுத்த படைத் தளபதி பூயிலின் உதவியை நாடினார். பூயில் மோண்ட்மெடியில் இருந்த தனது பாசறையில் மன்னருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் புகலிடம் தருவதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து ஜூன் 20, 1791 இல் அரச குடும்பத்தார் வேலையாட்களைப் போல வேடமிட்டு தங்கள் அரண்மனையிலிருந்து தப்பினர். ஆனால் அதற்கு மறுநாள் வரேன் என்ற இடத்தில் அரசர் அடையாளம் காணப்பட்டதால், அரச குடும்பத்தின் தப்பித்தல் முயற்சி தோல்வியடைந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு மீண்டும் பாரிசுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தேசிய மன்றம் அரசரைத் தற்காலிகப் பதவிநீக்கம் செய்தது. அரசரும் அரசியும் சிறை வைக்கப்பட்டனர்

அரசியலமைப்புச் சிக்கல்

ஆகஸ்ட் 10, 1792 அன்று இரவு போராளிகளும் ஆயுதமேந்திய மக்கள் கும்பல்களும் புரட்சிகர பாரிஸ் கம்யூன் நிருவாக அமைப்பின் துணையுடன் அரசரின் அரண்மனையைத் தாக்கி அரசரின் மெய்க்காப்பாளர்களான சுவிஸ் காவல் படையினரைப் படுகொலை செய்தன. அரச குடும்பத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். தேசிய நாடாளுமன்றம் அவசரமாகக் கூடி முடியாட்சியை ஒழித்தது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினரே பங்கேற்றனர்; அவர்களிலும் பெரும்பான்மையானோர் ஜாகோபின்கள். எஞ்சியிருந்த தேசிய அரசுக்குப் பாரிஸ் கம்யூனின் ஆதரவு தேவையாக இருந்தது.

சிறைகளுக்கு ஆயுதமேந்திய கும்பல்களை அனுப்பிய கம்யூன் அங்கு அடைக்கப்பட்டிருந்த 1400 பேரை விசாரணையின்றிப் படுகொலை செய்ததுடன், இதனைப் பிற நகரங்களிலும் செய்யலாமெனச் சுற்றறிக்கைக் கடிதமொன்றை பிற நகரங்களுக்கு அனுப்பியது. தேசிய நாடாளுமன்றத்தால் இதனைத் தடுக்க இயலவில்லை. செப்டம்பர் 20, 1792 அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மன்றம் பதவியேற்கும் வரை இந்நிலை நீடித்தது. செப்டம்பர் 21 அன்று முடியாட்சி ஒழிக்கப்பட்டு பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பின்னாளில் இத்தேதியே பிரெஞ்சு குடியரசு நாட்காட்டியின் முதல் நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

போரும் எதிர்ப் புரட்சியும் (1792–1797)

இக்காலகட்டத்தின் ஐரோப்பிய அரசியல் நிலவரம் பிரான்சு-ஆஸ்திரியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடையே போர்மூளக் காரணமானது. அரசர் லூயியும் ஃபியூலியாண்டுகளில் பெரும்பாலானோரும், கிரோண்டின்களும் போரை விரும்பினர். அரசரும் அவரது வலதுசாரி ஆதரவாளர்களும் போர் மூண்டால் மக்களிடையே அரசரின் செல்வாக்கு உயருமெனக் கருதினர். மேலும் புரட்சி அரசு போரில் தோல்வியடைந்தால் தன நிலை உயருமெனக் கருதினார் லூயி. இடதுசாரிகள் தங்களது புரட்சிகரக் கொள்கைகளைப் பிற ஐரோப்பிய நாடுகளில் பரப்பப் போர் உதவுமெனக் கருதினர். 

இவ்வாறு இரு தரப்பிலும் போரை விரும்பியோர் இருந்தனர். போரை எதிர்த்தவர்கள் கட்சி பலவீனமாக இருந்தது. பிரான்சு தோல்வியடைந்தால் புரட்சி தீவிரமடையும் என்று கருதிய கிரோண்டின்களும், போரில் தோல்வி புரட்சியைப் பலவீனப்படுத்தும், பிற நாட்டு சாதாரண மக்களுக்குப் புரட்சிமீது வெறுப்பேற்படும் என்று கருதிய ரோபஸ்பியர் போன்ற தீவிரவாதிகளும் போரை எதிர்த்தனர். ஏப்ரல் 20, 1792 அன்று பிரான்சு ஆஸ்திரியா மீது போர் சாற்றியது. சில வாரங்களுக்குப் பின்னர் பிரஷ்யா ஆஸ்திரிய அணியில் இணைந்தது. பிரான்சு மீது படையெடுத்த பிரஷியப் படைகள் ஆரம்பத்தில் தடையின்றி முன்னேறின. செப்டம்பர் 20, 1792 அன்று வால்மி சண்டையில் அவற்றுக்கு ஏற்பட்ட தோல்வி பிரஷிய முன்னேற்றத்தைத் தடை செய்தது.

இந்த முதல் வெற்றியைத் தொடர்ந்து புதிய பிரெஞ்சுக் குடியரசுக்குப் பெல்ஜியத்திலும் ரைன்லாந்துப் பகுதியிலும் 1792 இலையுதிர்க்காலத்தில் பல தொடர் வெற்றிகள் கிட்டின. நவம்பர் 6ம் தேதி ஜெமாப்பே சண்டையில் ஆஸ்திரியர்களை வென்ற பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரிய நெதர்லாந்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தன. இதனால் பிரான்சுக்கு எதிரணியில் பிரிட்டனும், டச்சுக் குடியரசும் இணைந்தன. தெற்கு நெதர்லாந்தில் பிரெஞ்சு ஆதிக்கம் மிகுவதை அவை விரும்பவில்லை. ஜனவரி 1793 இல் லூயியின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபின்னர் இந்நாடுகள், பிரான்சுக்கு எதிராக ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் நடத்தி வந்த போரில் இணைந்தன. இதனையடுத்து பல்வேறு முனைகளில் பிரான்சு தோல்விகளைச் சந்தித்தது.

1793 வசந்த காலத்தில் தான் கைப்பற்றிய பல பகுதிகளை இழந்துவிட்டது. அதே சமயம் புரட்சிகர அரசு தன் அதிகாரத்துக்கு எதிராகத் தெற்கு மற்றும் மேற்கத்திய பிரான்சில் ஏற்பட்ட புரட்சிகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால் பிரான்சுக்கு எதிரான கூட்டணி இந்த உள்நாட்டுக் குழப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. 1793ம் ஆண்டு இலையுதிர்க் காலம் முடிவதற்குள் புரட்சிகர அரசு உள்நாட்டுக் கலகங்களை அடக்கி இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி விட்டது; எதிரிக் கூட்டணியின் முன்னேற்றத்தையும் தடுத்தி நிறுத்தி விட்டது.



அரசியலமைப்புச் சட்டத்தின் உருவாக்கம்

தேசிய மன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரான்சு குடியரசாவதற்கு பதில் அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சியாக மாற வேண்டும் என்று விரும்பினர். இதனால் மன்றத்தின் பல்வேறு குழுக்களும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இணக்க முடிவை எடுத்தன. இதன்படி மன்னர் லூயி பெயரளவில் மட்டும் நாட்டின் தலைவராக இருந்தார். அவர் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி அளிக்க வேண்டியதாகியது. அந்த உறுதிமொழியிலிருந்து பின்வாங்கினாலோ, நாட்டின் மீது போர் தொடுக்க ஒரு படைக்குத் தலைமை தாங்கினாலோ அல்லது தனது பெயரில் இச்செயல்களைப் பிறர் செய்ய அனுமதித்தாலோ உடனடியாக அவரது பதவி பறிக்கப்படும்.

ஆனால் பெயரளவில் கூட லூயி நாட்டின் தலைவராக நீடிப்பதை விரும்பாதவர்களை ஒன்று திரட்ட ஜாக் பியர் பிரிசாட் ஒரு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினார். அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட திரண்ட மக்கள் கூட்டத்துடன் நகரக் காவலர்கள் மோதியதால் ஏறத்தாழ 50 பேர் இறந்தனர். இந்நிகழ்வுக்குப் பின் பல தீவிர நாட்டுப்பற்று மன்றங்களும் இதழ்களும் மூடப்பட்டன. இதே காலகட்டத்தில் புரட்சிக்குப் புதிய ஆபத்தொன்று வெளிநாட்டில் தோன்றியது. புனித ரோமப் பேரரசர் இரண்டாம் லியபோல்டு, பிரஷ்யாவின் இரண்டாம் பிரடரிக் வில்லியம், லூயியின் சகோதரர் சார்லஸ் பிலிப் ஆகியோர் இணைந்து பில்னிட்ஸ் சாற்றலை (Declaration of Pillnitz) வெளியிட்டனர். 

இதன் மூலம் அந்நிய நாட்டு அரசர்கள் பதினாறாம் லூயியை தங்களுள் ஒருவராகக் காட்டிக் கொண்டதுடன், அவரை விடுவிக்கும்படி புரட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். தங்கள் கோரிக்கைகளை ஏற்கத் தவறினால் பிரான்சு மீது படையெடுப்போம் என்று மிரட்டல் விடுத்தனர்.பிரெஞ்சு குடிமக்களுக்கு அந்நிய அரசர்களின் எச்சரிக்கையினால் பயமேற்படவில்லை. மாறாக இந்த அச்சுறுத்தல் பிரான்சு மக்களின் போர்க்குணத்தைத் தூண்டியதுடன், பிரெஞ்சு சமூகத்தின் இராணுவமயமாக்கலை விரைவு படுத்தியது.

தேசிய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினர்கள் அரசியல் சட்டமியற்றப்பட்டவுடன் உருவாகப் போகும் புதிய நாடாளுமன்றத்தில் தாங்கள் உறுப்பினர்களாவதைத் தடை செய்தனர். பின் தாங்கள் இயற்றிய அனைத்து சட்டங்களையும் தொகுத்து ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிப் பதினாறாம் லூயியின் ஒப்புதலுக்கு அனுப்பினர். அவர் அதை ஏற்றுக் கொண்டார். செப்டம்பர் 30, 1791 இல் தேசிய அரசியல் நிர்ணய மன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் இந்த அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தேசிய நாடாளுமன்றம் (1791–1792) அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சியின் தோல்வி 1791 அரசியலமைப்புச் சட்டத்தின் படி பிரான்சு ஒரு அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சியாக வரையறுக்கப்பட்டிருந்தது. மன்னர் தனது அதிகாரங்களைத் தேசிய நாடாளுமன்றத்துடன் பகிர்ந்து கொண்டாலும், தன் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தடையாணை பிறப்பிக்கும் உரிமையும் பெற்றிருந்தார். அக்டோபர் 1, 1791 அன்று கூடிய தேசிய நாடாளுமன்றம் ஓராண்டுக்குள் குழப்பங்கள் மிகுந்து செயலிழந்தது. நாட்டை முறையாக நிர்வாகம் செய்யத் தவறியதால் அரசின் கருவூலம் காலியானதுடன், படைத்துறையில் ஒழுங்கின்மை கூடியது.நாடாளுமன்றத்தில் 165 ஃபியூலியாண்டுகள் (அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சியின் ஆதரவாளர்கள்), 330 கிரோண்டிஸ்டுகள் (தாராண்மிய குடியரசுவாதிகள்) மற்றும் ஜகோபின்கள் (தீவிர புரட்சியாளர்கள்) இருந்தனர். இவர்களைத் தவிர இரு கட்சிகளிலும் சேராத 250 உறுப்பினர்களும் இருந்தனர். மன்றத்தின் பல சட்டங்களைத் தொடக்கத்திலேயே மன்னர் தனது தடையாணை உரிமையைக் கொண்டு தடுத்ததால், வெகு விரைவில் ஒரு அரசியலமைப்புச் சிக்கல் நிலை உருவானது.

ஆகஸ்ட் 10, 1792 அன்று இரவு போராளிகளும் ஆயுதமேந்திய மக்கள் கும்பல்களும் புரட்சிகர பாரிஸ் கம்யூன் நிருவாக அமைப்பின் துணையுடன் அரசரின் அரண்மனையைத் தாக்கி அரசரின் மெய்க்காப்பாளர்களான சுவிஸ் காவல் படையினரைப் படுகொலை செய்தன. அரச குடும்பத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். தேசிய நாடாளுமன்றம் அவசரமாகக் கூடி முடியாட்சியை ஒழித்தது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினரே பங்கேற்றனர்; அவர்களிலும் பெரும்பான்மையானோர் ஜாகோபின்கள்.எஞ்சியிருந்த தேசிய அரசுக்குப் பாரிஸ் கம்யூனின் ஆதரவு தேவையாக இருந்தது. சிறைகளுக்கு ஆயுதமேந்திய கும்பல்களை அனுப்பிய கம்யூன் அங்கு அடைக்கப்பட்டிருந்த 1400 பேரை விசாரணையின்றிப் படுகொலை செய்ததுடன், இதனைப் பிற நகரங்களிலும் செய்யலாமெனச் சுற்றறிக்கைக் கடிதமொன்றை பிற நகரங்களுக்கு அனுப்பியது. தேசிய நாடாளுமன்றத்தால் இதனைத் தடுக்க இயலவில்லை. செப்டம்பர் 20, 1792 அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மன்றம் பதவியேற்கும் வரை இந்நிலை நீடித்தது. செப்டம்பர் 21 அன்று முடியாட்சி ஒழிக்கப்பட்டு பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பின்னாளில் இத்தேதியே பிரெஞ்சு குடியரசு நாட்காட்டியின் முதல் நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

போரும் எதிர்ப் புரட்சியும் (1792–1797)

இக்காலகட்டத்தின் ஐரோப்பிய அரசியல் நிலவரம் பிரான்சு-ஆஸ்திரியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடையே போர்மூளக் காரணமானது. அரசர் லூயியும் ஃபியூலியாண்டுகளில் பெரும்பாலானோரும், கிரோண்டின்களும் போரை விரும்பினர். அரசரும் அவரது வலதுசாரி ஆதரவாளர்களும் போர் மூண்டால் மக்களிடையே அரசரின் செல்வாக்கு உயருமெனக் கருதினர். மேலும் புரட்சி அரசு போரில் தோல்வியடைந்தால் தன நிலை உயருமெனக் கருதினார் லூயி. இடதுசாரிகள் தங்களது புரட்சிகரக் கொள்கைகளைப் பிற ஐரோப்பிய நாடுகளில் பரப்பப் போர் உதவுமெனக் கருதினர். இவ்வாறு இரு தரப்பிலும் போரை விரும்பியோர் இருந்தனர். போரை எதிர்த்தவர்கள் கட்சி பலவீனமாக இருந்தது. பிரான்சு தோல்வியடைந்தால் புரட்சி தீவிரமடையும் என்று கருதிய கிரோண்டின்களும், போரில் தோல்வி புரட்சியைப் பலவீனப்படுத்தும், பிற நாட்டு சாதாரண மக்களுக்குப் புரட்சிமீது வெறுப்பேற்படும் என்று கருதிய ரோபஸ்பியர் போன்ற தீவிரவாதிகளும் போரை எதிர்த்தனர். ஏப்ரல் 20, 1792 அன்று பிரான்சு ஆஸ்திரியா மீது போர் சாற்றியது. சில வாரங்களுக்குப் பின்னர் பிரஷ்யா ஆஸ்திரிய அணியில் இணைந்தது. பிரான்சு மீது படையெடுத்த பிரஷியப் படைகள் ஆரம்பத்தில் தடையின்றி முன்னேறின. செப்டம்பர் 20, 1792 அன்று வால்மி சண்டையில் அவற்றுக்கு ஏற்பட்ட தோல்வி பிரஷிய முன்னேற்றத்தைத் தடை செய்தது.

இந்த முதல் வெற்றியைத் தொடர்ந்து புதிய பிரெஞ்சுக் குடியரசுக்குப் பெல்ஜியத்திலும் ரைன்லாந்துப் பகுதியிலும் 1792 இலையுதிர்க்காலத்தில் பல தொடர் வெற்றிகள் கிட்டின. நவம்பர் 6ம் தேதி ஜெமாப்பே சண்டையில் ஆஸ்திரியர்களை வென்ற பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரிய நெதர்லாந்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தன. இதனால் பிரான்சுக்கு எதிரணியில் பிரிட்டனும், டச்சுக் குடியரசும் இணைந்தன. தெற்கு நெதர்லாந்தில் பிரெஞ்சு ஆதிக்கம் மிகுவதை அவை விரும்பவில்லை. ஜனவரி 1793 இல் லூயியின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபின்னர் இந்நாடுகள், பிரான்சுக்கு எதிராக ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் நடத்தி வந்த போரில் இணைந்தன. இதனையடுத்து பல்வேறு முனைகளில் பிரான்சு தோல்விகளைச் சந்தித்தது. 1793 வசந்த காலத்தில் தான் கைப்பற்றிய பல பகுதிகளை இழந்துவிட்டது. அதே சமயம் புரட்சிகர அரசு தன் அதிகாரத்துக்கு எதிராகத் தெற்கு மற்றும் மேற்கத்திய பிரான்சில் ஏற்பட்ட புரட்சிகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால் பிரான்சுக்கு எதிரான கூட்டணி இந்த உள்நாட்டுக் குழப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. 1793ம் ஆண்டு இலையுதிர்க் காலம் முடிவதற்குள் புரட்சிகர அரசு உள்நாட்டுக் கலகங்களை அடக்கி இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி விட்டது; எதிரிக் கூட்டணியின் முன்னேற்றத்தையும் தடுத்தி நிறுத்தி விட்டது.

போர்முனையில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவிய இழுபறி நிலை 1794 இல் முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு புரட்சி அரசுக்குப் பெரும் வெற்றிகள் கிட்டன. புளூரஸ் சண்டையில் புரட்சிகரப் பிரெஞ்சுப் படைகள் எதிர்க் கூட்டணிப் படைகளை முறியடித்ததன் விளைவாக ஆஸ்திரிய நெதர்லாந்த்திலிருந்து கூட்டணிப் படைகள் முழுமையாகப் பின்வாங்கின. பின் எதிர்க் கூட்டணிப் படைகளை ரைன் ஆற்றின் கிழக்குக் கரை வரை விரட்டிச் சென்ற பிரெஞ்சுப் படைகள், 1795 இல் நெதர்லாந்தைக் கைப்பற்றின. அங்கு ஆரஞ்சு மரபு ஆட்சி ஒழிக்கப்பட்டு புரட்சிகர பிரான்சின் தோழமை அரசாகப் படாவியக் குடியரசு நிறுவப்பட்டது. இவ்வெற்றிகளின் காரணமாகப் பிரான்சுக்கு எதிரான கூட்டணி சிதறியது. 1794 இல் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிரஷியா அதற்கு அடுத்த ஆண்டு பிரான்சுடன் முறைப்படி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது (பேசல் அமைதி ஒப்பந்தம்). இதற்கடுத்தபடியாக ஸ்பெயினும் கூட்டணியிலிருந்து விலகியது. பிரிட்டனும், ஆஸ்திரியாவும் மட்டும் தொடர்ந்து பிரான்சுடன் போரிட்டன.

இக்காலகட்டத்தில் தான் பிரெஞ்சு நாட்டுப்பண் லா மார்சே முதன் முதலில் பாடப்பட்டது. பின் 1795 ஆம் ஆண்டு புரட்சிகர பிரான்சின் அதிகாரப்பூர்வ நாட்டுப்பண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


தேசிய மாநாடு (1792–1795)பதினாறாம் லூயியின் மரண தண்டனை

புரட்சிகர பிரான்சுக்கு எதிரான முடியாட்சிக் கூட்டணி நாடுகள் வெளியிட்ட பிரன்ஸ்விக் அறிக்கையில், தங்கள் முன்னேற்றத்தை எதிர்த்தாலோ அல்லது பிரான்சில் மன்னராட்சியை மீளமைப்பதை எதிர்த்தாலோ பிரெஞ்சு குடிமக்களைப் பழிவாங்குவோமென மிரட்டியிருந்தன. இது பதினாறாம் லூயி பிரான்சின் எதிரிகளோடு சேர்ந்து சதியில் ஈடுபட்டுள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டது. ஜனவரி 17, 1793 இல் “மக்கள் விடுதலைக்கும் நாட்டின் பாதுகாவலுக்கும் எதிராகச் சதி செய்த” குற்றத்துக்காகத் தேசிய மாநாடு மன்றம் பதினாறாம் லூயிக்கு மரண தண்டனை விதித்தது. மாநாட்டு உறுப்பினர்களில் 361 பேர் மரண தண்டனைக்கு ஆதரவாகவும் 288 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மேலும் 72 பேர் பற்பல நிபந்தனைகளுடன் மரண தண்டனையை நிறைவேற்றலாமென வாக்களித்தனர். மன்னர் பதவியிழந்த லூயி ஜனவரி 21, 1793 அன்று கில்லோட்டின் எந்திரம் கொண்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இச்செயலால் ஐரோப்பாவெங்கும் மன்னர் மரபுகள் திகிலடைந்தன. அதுவரை நடுநிலை வகித்து வந்த பல முடியாட்சிகள் புரட்சிகர பிரான்சுக்கு எதிரான கூட்டணியில் இணைந்தன.

பொருளாதார நிலை

போர் நிலவரம் புரட்சிகர அரசுக்கு எதிராகத் திரும்பிய போது விலைவாசி உயர்ந்தது. இதனால் அதிருப்தியடைந்த ஏழைத் தொழிலாளர்களும் தீவிரவாத ஜாகோபின்களும் கலவரம் செய்யத் தொடங்கினர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜாகோபின் கட்சி, ஒரு நாடாளுமன்றப் புரட்சிமூலம் கிரோண்டிஸ்ட் கட்சியை முறியடித்து முழு அதிகாரத்தையும் கைப்பற்றியது. புரட்சிகர அரசின் கொள்கைகள் மேலும் தீவிரமடைந்தன. அரசில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. உணவுப் பொருட்களின் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதனை மீறிய வணிகர்களுக்கு மரண தண்டனை தரப்பட்டது.விலைவாசி உயர்வைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த ஜாகோபின்களின் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவின் ”பயங்கர ஆட்சி” காலத்தின் போது அனைத்து உணவுப் பொருட்களுக்கும் மேலும் பல பண்டங்களுக்கும் விலை உச்சவரம்பு விதிக்கப்பட்டது.உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஊர்ப்புறங்களிலிருந்து தானியங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகரங்களுக்கு அனுப்பப்பட்டன. இது பாரிசு நகரத்தில் நிலையைத் தற்காலிகமாகச் சீராக்கினாலும், நாட்டின் பிற பகுதிகள் பாதிப்புக்குள்ளாயின. 1794 ஆண்டு வசந்த காலத்தில் பாரிசு நகரத்தில் கூட உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலவில்லை. இதனால் பொதுமக்கள் பாதுகாவல் குழுவின் ஆட்சி கவிழ்ந்து அதன் தலைவர் ரோபெஸ்பியர் கில்லோட்டின் மூலம் கொல்லப்பட்டார்.

பயங்கர ஆட்சி

ஜூன் 2, 1793 இல் ஜேக்கோபின் கட்சியின் தீவிரவாதிகள், மாநகரக் காவல் படையின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினர். 31 கிரோண்டிஸ்ட் கட்சித் தலைவர்களைக் கைது செய்தனர். எதிர்க் கட்சிகள் அழிக்கப்பட்டபின், ஜூன் 10ம் தேதி பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவின் “புரட்சிகர சர்வாதிகார” ஆட்சி தொடங்கியது.ஜூலை 13ம் தேதி ஜேக்கோபின்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அதிதீவிர கட்டுரைகளை எழுதி வந்த இதழாளருமான ழான்-பால் மராட், ஷார்லோட் கோர்டே என்ற கிரோண்டின் கட்சிக்காரியால் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் ஜேக்கோபின்களின் அரசியல் செல்வாக்கு மேலும் அதிகரித்தது. அடுத்து செல்வாக்கு மிகுந்த ஜேக்கோப்பின் தலைவரான ஜார்ஜஸ் டாண்டன் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவிலிருந்து நீக்கப்பட்டார். கடும் தீவிரவாதியென அறியப்பட்ட மேக்சிமில்லியன் ரோபெஸ்பியர் குழுவின் அதி முக்கியமான உறுப்பினரானார். ”புரட்சியின் எதிரிகள்” என்று அறியப்பட்டவர்கள் ரோபெஸ்பியர் அரசின் இலக்காகினர்.

ரோபெஸ்பியரின் கட்டுப்பாட்டில் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு வந்த பின், ஜேக்கோபின்களின் “பயங்கர ஆட்சி” தொடங்கியது. ஜேக்கோபின்கள் கையில் முழு அரசு அதிகாரம் இருந்த 1793-94 காலகட்டத்தில் அவர்கள் நிகழ்த்திய கொடுங்கோல் செயல்கள் அவர்களது ஆட்சிக்கு இப்பெயரைப் பெற்றுத் தந்தது. அக்கால ஆவணங்களின் படி, பயங்கர ஆட்சி காலத்தில் குறைந்த பட்சம் 16,594 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 40,000 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையின்றி கொல்லப்பட்டிருக்கலாமெனப் பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

அரசியல் எதிரிகளை அரசு வன்முறையால் அழித்து வந்த அதே காலகட்டத்தில், பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு அரசியல் சீர்திருத்தங்களை விரைவு படுத்தியது. ஜூன் 24, 1794 இல் பிரான்சின் முதல் குடியரசு அரசியல் சட்டம் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்புதிய அரசியலமைப்பு பல புரட்சிகர மற்றும் முற்போக்கு கூறுகளைக் கொண்டிருந்தது - வயது வந்தோர் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அளித்தது. இப்புதிய அரசியலமைப்பை மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அது நடைமுறைக்கு வரும்முன் பயங்கர ஆட்சியில் மக்களின் சட்ட உரிமைகள் விலக்கப்பட்டன.

உள்நாட்டுக் கலகங்கள் பிரான்சின் வெண்டீ பகுதியில் 1793 ஆம் ஆண்டு புரட்சிகர அரசுக்கு எதிராகக் கலகம் மூண்டது. அப்பகுதி மக்கள் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் அரசு கொண்டு வந்த மாற்றங்களை விரும்பவில்லை. புரட்சிகர அரசு இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பை அறிமுகப்படுத்தியவுடன் அதற்கு எதிராக வெண்டீயில் வெளிப்படையாகக் கலகம் வெடித்தது.வெண்டி பகுதி மக்கள் கொரில்லாப் போர் முறையைக் கையாண்டனர். புரட்சிகர அரசு வெண்டி கலகத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. இரு தரப்பிலும் பல படுகொலைகளும் கொடூரங்களும் நிகழ்த்தப்பட்டன. இதில் 1,17,00 முதல் 2,50,000 பேர் வரை பலியாகினரெனக் கணக்கிடப்பட்டுள்ளது. லோயர் ஆற்றுக்கு வடக்கில் முடியாட்சிக்கு ஆதரவான எதிர்புரட்சியாளர்களும் கலகத்தில் ஈடுபட்டனர். நாட்டின் கிழக்க்லும் மேற்கிலும் இது போலவே பற்பல கலகங்கள் மூண்டன.

தெர்மிடோரிய எதிர்வினை பயங்கர ஆட்சியின் அடக்குமுறைகள் அத்துமீறியதால் ரோபெஸ்பியரின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்தது. ஜூலை 27, 1794 இல் ரோபெஸ்பியரின் எதிர்ப்பாளர்கள் அவரையும், பிற முக்கிய ஜேக்கோபின்களையும் கைது செய்து கொலை செய்தனர். இந்நிகழ்வு தெர்மிடோரிய எதிர்வினை என்றழைக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு கலைக்கப்பட்டு புதிய அரசு பதவியேற்றது. இதில் பெரும்பாலும் கிரோண்டிஸ்ட் கட்சிக்காரர்களே இடம்பெற்றிருந்ந்தனர். புதிய அரசு பயங்கர ஆட்சியின் போது ஜேக்கோபின்கள் இழைத்த கொடுமைகளுக்குப் பழிவாங்கும் வண்ணம், ஜேக்கோப்பின்கள் பலரைக் கொன்றது, ஜேக்கோபின் சங்கத்தையும் தடை செய்தது. இந்தப் பழிவாங்கல் நிகழ்வுகள் “வெள்ளை பயங்கரம்” என்றழைக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 22, 1795 அன்று புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை தேசிய மாநாடு ஏற்றுக் கொண்டுவந்தது. ”மூன்றாவது ஆண்டின் அரசியலமைப்பு” (புரட்சி தொடங்கி மூன்றாம் ஆண்டு கொண்டுவரப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது) என்றழைக்கப்பட்ட இப்புதிய சட்டத்தை மக்கள் பொது வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக் கொண்டனர். செப்டம்பர் 27 முதல் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.

அரசிலமைப்புக்குட்பட்ட குடியரசு - டைரக்டரி (1795–1799)

இப்புதிய அரசியலமைப்புச் சட்டம் "டைரக்டரி" என்ற புதிய ஆட்சி அமைப்பை உருவாக்கியது. பிரான்சின் வரலாற்றில் முதல் முறையாக ஈரங்க நாடாளுமன்றத்தை தோற்றுவித்தது.[72] நாடாளுமன்றத்தின் இரு அவைகளாவன - ஐநூறு உறுப்பினர்கள் கொண்ட ஐநூறுவர் குழு மற்றும் 250 உறுப்பினர்கள் கொண்ட மூத்தோர் குழு. நிர்வாக அதிகாரம் ஐந்து "இயக்குநர்"களின் கையில் இருந்தது. அவர்கள் ஐநூறுவர் குழு அளிக்கும் பட்டியலிலிருந்து மூத்தோர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1793 முதல் நடைமுறையிலிருந்த அனைவருக்கும் வாக்குரிமை முறைக்குப் பதிலாக, சொத்துக் கணக்கு அடிப்படையில் வாக்குரிமை வழங்கப்பட்டது.

டைரக்டரியின் உருவாக்கத்துடன் பிரெஞ்சுப் புரட்சி முடிவடையவில்லை. இடைவிடாப் போரினால் தளர்ந்திருந்த நாட்டு மக்கள் அமைதியையும், நிலையான ஆட்சி அமையவும் விரும்பினர். ஆனால் புரட்சிக்கு முந்தைய “பழைய ஆட்சி”யின் ஆதரவாளர்களும் தீவிர புரட்சியாளர்களும் எண்ணிக்கையில் குறைந்து போனாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்கவோ நம்பவோ தயாராக இல்லை. நாட்டை நிருவகிக்கும் டைரக்டரியின் செயல்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீடு அதிகமாக இருந்தது. பல பிரெஞ்சுக் குடிமக்கள் டைரக்டரி மீது நம்பிக்கை கொள்ளவில்லை. இயக்குநர்கள் பல நேரங்களில் தங்கள் முடிவுகளைச் செயல்படுத்த அரசியலமைப்பை மீறினர். தேர்தல்களை முறைகேடுகள்மூலம் வென்றனர். அவ்வாறு வெல்ல இயலவில்லையெனில் காவல் துறையின் அடக்குமுறைமூலம் எதிர்ப்பாளர்களை ஒடுக்கினர். மேலும் தங்கள் நிலையை வலுப்படுத்தப் பிரெஞ்சு இராணுவத்தின் உதவியை நாடினர். இராணுவம் போரினை விரும்பியதால், இயக்குநர்களின் கவனம் குடிமைச் சிக்கல்களிலிருந்து விலகி வெளிநாட்டுப் போர்களின் பக்கம் அதிகமாகத் திரும்பியது.

புரட்சியின் முந்தைய கட்டங்களில் ஏற்பட்ட சேதங்களால் பிரான்சின் பொருளாதாரம் வெகுவாகச் சீர்குலைந்திருந்தது. நிதிநிலையைச் சீர்செய்து செலவுகளைச் சமாளிக்க டைரக்டரி அரசு பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் கப்பத்தையும் கொள்ளையினையும் நம்பியிருந்தது. எனவே அயல்நாடுகளுடன் போர் தொடர்வதை விரும்பியது. அமைதி ஏற்பட்டு இராணுவத்தினர் நாடு திரும்பினால் அதிருப்தியடையும் போர்வீரர்களாலும், அதிகார ஆசை கொண்ட தளபதிகளாலும் டைரக்டரியின் ஆட்சிக்கு ஆபத்து நிகழ்வது உறுதியென்பதால், போர் தொடர்வதே அரசுக்கு ஏற்புடையதாக இருந்தது. இயக்குநர்களின் ஊழல்கள் டைரக்டரியின் ஆட்சியின் மீதான மக்கள் அதிருப்தியை அதிகப்படுத்தின. தீவிர புரட்சியாளர்களும் முடியாட்சியின் ஆதரவாளர்களும் டைரக்டரியினை எதிர்க்கலாயினர். தங்கள் ஆட்சிக்கு எதிரான சதிகளையும் கலகங்களையும் முறியடிக்க இயக்குநர்கள் அளவுக்கு அதிகமாக இராணுவத்தைப் பயன்படுத்தினர். இதனால் இராணுவத்தின் நிலையும் அதிக அளவில் வெற்றிகள் பெற்று புகழ்பெற்றிருந்த இராணுவ தளபதியான நெப்போலியன் பொனபார்ட்டின் நிலையும் வலுப்பெற்றன. நவம்பர் 9, 1799 இல் நெப்போலியன் டைரக்டரிக்கு எதிராகப் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். தனது முழுக்கட்டுப்பாட்டில் செயல்பட்ட “கன்சலேட்” என்ற ஆட்சிமுறையை நிறுவினார். நடைமுறையில் நெப்போலியன் பிரான்சின் சர்வாதிகாரியாகவே செயல்பட்டார். 1804 இல் வெளிப்படையாகப் பிரான்சின் பேரரசராக முடிசூடிக்கொண்டார். நெப்போலியனின் முடி சூடலுடன் பிரெஞ்சுப் புரட்சியின் குடியரசு காலம் முடிவுக்கு வந்தது.

தாக்கம்
உலக அரசியலில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய பிரெஞ்சுப் புரட்சியை வரலாற்றாளர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கொள்கையின் வழியாகவே நோக்குகினறனர். புரட்சியின் காரணிகள், போக்கு, வரலாற்றுத் தாக்கம் ஆகியவற்றை பற்றி வரலாற்றாளர்களின் கருத்துகள் மாறுபடுகின்றன. வசதி கூடிய நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சமூக நிலையின் முக்கியத்தை உணர்ந்ததால் புரட்சி நடைபெற்றதென அலெக்சிஸ் தே டோக்வில் கருதுகிறார். எட்மண்ட் பர்க் போன்ற பழமைவாத அறிஞர்கள், குறிப்பிட்ட சில சதிகாரர்கள் மக்கள் திரளை மூளைச் சலவை செய்து, பழைய ஆட்சிக்கு எதிராகத் தூண்டி விட்டதால் தான் புரட்சி ஏற்பட்டதெனக் கருதினர். புரட்சி ஏற்பட நியாயமான காரணங்கள் ஏதுமில்லை என்பது அவர்கள் வாதம். மார்க்சிய தாக்கம் உடைய வரலாற்றாளர்கள் பிரெஞ்சுப் புரட்சியை விவசாயிகளும், நகரத் தொழிலாளர்களும் நடத்திய ஒரு மாபெரும் வர்க்கப் போராட்டமாகப் பார்க்கின்றனர். எனினும் பிரெஞ்சுப் புரட்சி மனித வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அனைத்து தரப்பு வரலாற்றாளர்களாலும் கருதப்படுகிறது.வரலாற்றின் தொடக்க நவீன காலத்தின் (சுமார் கி.பி 1500 இல் தொடங்கியது) முடிவாகவும் நவீன காலத்தின் ஆரம்பமாகவும் கருதப்படுகிறது.பிரான்சில் பிரபுக்களின் ஆதிக்கத்தை முடக்கியதுடன், திருச்சபையின் செல்வ வளத்தை அழித்தது. இவ்விரு குழுக்களும் பிரெஞ்சுப் புரட்சியினால் கடும் பாதிப்புக்குள்ளாகினாலும் அறவே அழியாமல் தப்பின. 1815 இல் முதல் பிரெஞ்சுப் பேரரசு வீழ்ந்த பின், பிரெஞ்சுப் புரட்சி முதல் குடிமக்களுக்குக் கிட்டியிருந்த உரிமைகளும் சலுகைகளும் பறிக்கப்பட்டன. ஆனால் புரட்சியின் அனுபவங்களைக் குடிமைச் சமூகம் மறக்கவில்லை. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதையும், புரட்சி செய்வதையும், குடியரசுவாதத்தைப் பின்பற்றுவதையும் மக்கள் வழக்கமாகக் கொண்டனர்.புரட்சியின் விளைவாகப் பிரெஞ்சு குடிமக்களின் சுய அடையாளத்தில், அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டன எனச் சில வரலாற்றாளர்கள் வாதிடுகின்றனர். சமூகத்தில் வெவ்வேறு வர்க்கத்தினருக்கு வெவ்வேறு உரிமைகள் என்ற நிலை மாறிச் சமத்துவம், மனித உரிமைகள் போன்ற கோட்பாடுகள் தழைக்கத் தொடங்கின. பிரெஞ்சுப் புரட்சி அதுவரை வரலாற்றில் எதேச்சதிகார ஆட்சி முறைக்கு எதிராக நடைபெற்றருந்த முயற்சிகளில் மிக முக்கியமான அமைந்தது. இறுதியில் தோல்வியடைந்தாலும், ஐரோப்பாவிலும் பின்பு உலகெங்கும் மக்களாட்சிக் கருத்துகள் பரவ வித்திட்டது. 1917ம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியிலும் சீனாவில் நடைபெற்ற மா சே துங்கின் புரட்சியிலும் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் உண்டு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad