உலகின் வலிமை மிக்க நாடுகள் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களுக்கென்று பிரம்மாண்ட விண்வெளி நிலையங்களை வானில் நிலைநிறுத்தி இருக்கின்றன. இவர்களது விண்வெளி நிலையங்களை மற்ற நாடுகள் பயன்படுத்த முடியாதல்லவா?
அப்போதுதான் 15 நாடுகள் இணைந்து தங்களுக்கென சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்க முடிவு செய்தன.
விண்வெளிக் கப்பல்கள் (ஸ்பேஸ் ஷிப்ஸ்) மூலம், பத்து ஆண்டுகள் தொடர்ந்து இதற்கான பாகங்கள் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. 1998-ம் ஆண்டில் பூமியில் சுற்றுவட்டப் பாதையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இவை மிதக்கவிடப்பட்டன. பிறகு விண்வெளி வீரர்கள் முப்பது முறை விண்வெளிக்குச் சென்று இந்தப் பாகங்களை மெல்ல மெல்ல வெற்றிகரமாக ஒன்றிணைத்தார்கள். இப்படி உருவாக்கப்பட்டதுதான்
‘ஐ.எஸ்.எஸ்.’ என்றழைக்கப்படும் (International Space Station) சர்வதேச விண்வெளி நிலையம். இதன் மொத்த எடை 460 டன் (1 டன் என்றால் ஆயிரம் கிலோ), ஒரு கால்பந்து மைதானம் அளவு பரப்பளவு கொண்டது என்றால் இதன் பிரம்மாண்டத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பூமியிருந்து 240 மைல் உயரத்தில் மிதந்தபடி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இது வலம் வருகிறது.
என்ன செய்கிறார்கள் இங்கே?
இந்த விண்வெளி நிலையத்துக்குச் செலவிட்ட நாடுகள் விண் கப்பல்கள் மூலம் இங்கே பயணம் செய்து பூமியின் இயக்கம், அதன் சுற்றுச்சூழல் மாற்றங்கள், கடலில் உருவாகும் புயல்களின் நகர்வுகளைக் கண்காணித்தல், பால்வெளியை நோக்குதல் எனத் தொடர்ச்சியாக வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கிறார்கள்.
இங்கே தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை மட்டும்தான் உண்கிறார்கள். இந்த உணவுகளையும் மாத்திரை வடிவில் எடுத்துச் செல்வதும் உண்டு. சூரிய ஒளி மூலம் நிலையத்துக்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறது.
சுவாசிக்கத் தேவையான அளவு ஆக்ஸிஜன் இங்கே சேமிக்கப்பட்டுள்ளது. குடிக்கத் தண்ணீரும்தான்.
அப்புறமென்ன? ஆராய்ச்சிகள் ஜாம் ஜாமென்று நடைபெற்று வருகின்றன.