இலங்கை ஒரு பாரம்பரிய விவசாய நாடு ஆகும். வரலாற்று ஆதாரங்களின்படி பார்க்குமிடத்து எமது நாடு சுமார் 2500 வருட கால வரலாற்றுப் பெருமையைக் கொண்டதாகும். இலங்கை அக்காலம் தொடக்கம் இன்று வரை விவசாயப் பொருளாதாரத்திலேயே தங்கியிருக்கின்றது. இலங்கை மக்களின் பிரதான உணவு அரிசிச் சோறு என்பதனால் எமது நாடு அக்காலத்தில் இருந்து நெற் செய்கையிலேயே பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றது.
இலங்கையின் நீர்வள நாகரிகத்தை எடுத்துக் கொள்வோமானால், அக்கால மன்னர்கள் நெற்செய்கைக்கு முன்னுரிமை அளித்த உண்மையை நன்கு அறிந்து கொள்ளலாம். அக்கால மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. அக்கால இலங்கை மன்னர்கள் அமைத்த நீர்ப்பாசனக் குளங்களிலேயே எமது நாட்டின் நெற்செய்கை இன்றும் தங்கியிருக்கின்றது. அன்றைய மன்னர்கள் அமைத்த பாரிய குளங்களை நாட்டின் ஆட்சியாளர்களால் புனரமைக்க முடிகின்றதே தவிர, அது போன்ற பாரிய குளங்களை இன்னும்தான் புதிதாக அமைத்துக் கொள்ள முடியாதிருக்கின்றது.
இலங்கை முன்னொரு காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங்கியது. புராதன மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் போது இலங்கையில் இருந்து நட்பு நாடுகள் சிலவற்றுக்கு நெல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக எமது வரலாற்று இலக்கிய ஆதாரங்களில் கூறப்பட்டிருக்கிறது.
அதேசமயம், வட இந்தியாவின் சில பகுதிகளை ஆட்சி செய்த அன்றைய மன்னர்கள் நீர்ப்பாசனக் குளங்களை அங்கு அமைத்துக் கொள்வதற்காக இலங்கையிடமிருந்து தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டதாக வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கும் நெற்செய்கைக்கும் இவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்ததன் காரணமாகவே இலங்கையில் எக்காலமும் பஞ்சம் தலைவிரித்தாடியதில்லை.
விவசாயம் என்பது உண்மையிலேயே புனிதமானதொரு தொழில் ஆகும். நாட்டு மக்களுக்கே உணவு அளிப்பவர்கள் விவசாயிகள். மற்றையோரிடம் கையேந்துவதற்கு அவசியமில்லாத உன்னதமானதொரு தொழில் விவசாயம்.
அதேசமயம் நெற்செய்கைக்கு ஏற்றபடியாக நிலவளமும் நீர்வளமும் கொண்ட நாடாக இலங்கை விளங்குகின்றது. மலையிலிருந்து உற்பத்தியாகி வருடம் முழுக்க வற்றாமல் பாய்கின்ற நதிகள், நீர்ப்பாசனத்துக்கு ஏதுவாக இயற்கையாகவே காணப்படுகின்ற களியும் சேறும் கலந்த வளமான நிலம் என்றெல்லாம் பல்வேறு வளங்களைக் கொண்ட எமது நாடு இப்போது விவசாயத் துறையில் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்றது.
விவசாயம் மீதான ஆர்வம் எமது மக்களிடையே வேகமாகக் குறைந்து கொண்டு வருகின்றது என்பதே அந்த அபாயம்!
பாரம்பரிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தோரின் புதிய தலைமுறையினர் படிப்படியாக விவசாயச் செய்கையைக் கைவிட்டு வேறு துறைகளை நாடி வருகின்றனர். அவர்கள் அரசாங்க உத்தியோகங்களை நாடிச் செல்வது ஒருபுறமிருக்க, வேறு பல சுயதொழில் முயற்சிகளிலும் நாட்டம் கொள்கின்றனர். ஆகவே விவசாயம் என்பது படிப்படியாக அருகிக் கொண்டு செல்லும் ஆபத்து தொடர்ந்து கொண்டு செல்கின்றது.
விவசாயம் மீதான நாட்டம் மக்கள் மத்தியில் குறைந்து கொண்டு செல்வதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்த கருத்தையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
விவசாயம் மீதான நாட்டமின்மைக்கு பலவிதமான காரணங்களை இங்கு குறிப்பிட முடியும். ஆனாலும் விவசாயிகள் அனுபவிக்கின்ற கடும் உழைப்புக்கு ஏற்றபடியான வருமானம் அத்தொழிலில் ஈட்டப்படுவதில்லை என்பதே பிரதான காரணமாக இருக்கின்றது.
நெல் விதைப்புக்காக வயலை தயார் செய்வது தொடக்கம் அறுவடை முடியும் வரையிலான காலப் பகுதியில் விவசாயிகள் எதிர்கொள்கின்ற துன்பங்களும் செலவினங்களும் அளவிட முடியாதவையாகும். அதேசமயம் விவசாயச் செய்கைக்கு சவாலாக வெள்ளம், வரட்சி, நோய்த் தாக்கம் என்பவையெல்லாம் எதிர்கொள்ளப்படுகின்றன.
இவையெல்லாம் சாதகமாக அமைந்தாலேயே எதிர்பார்த்த வருமானத்தை விவசாயிகளால் ஈட்ட முடியும். இயற்கை வஞ்சித்துக் கொண்டதன் காரணமாக முற்றாகவே அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.
இத்தனை இடைஞ்சல்களை எதிர்கொள்ளும் விவசாயியின் விளைச்சலுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஆனால் விவசாயிகளிடம் இருந்து உற்பத்தியைப் பெற்றுக் கொள்ளும் வியாபாரிகள் பெரும் வருமானம் ஈட்டி செல்வந்தர்களாக வாழ்கின்றனர். விவசாயிகளுக்கு இழைக்கப்படுகின்ற பெரும் அநீதி இதுதான்.
போதிய வருமானமில்லாததன் காரணமாகவே விவசாயத்துறை மீதான நாட்டம் மக்கள் மத்தியில் குறைந்து கொண்டு செல்கின்றது. இந்த அறிகுறி ஆபத்தானது. நாட்டின் உணவுத் தேவைக்கு வெளிநாடுகளை முழுமையாக நம்பியிருக்கும் நிலைமைக்கு ஒருபோதும் இடமளிக்கலாகாது. விவசாயிகளின் மனக்குறைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் மாத்திரமன்றி அனைத்துத் தரப்பினரும் ஆவன செய்வது இன்றியமையாததாகும்.
இலங்கையின் விவசாயத்துறை எதிர்கொண்டுள்ள ஆபத்து - 2019 கட்டுரை
Wednesday, January 08, 2020
0
Tags