இலங்கை ஒரு விவசாய நாடு. அதிலும் யாழ்ப்பாண மண் விவசாயத்திற்கு ஏற்றது. எனவே வடபகுதி மட்டுமல்லாது முழு நாட்டினதும் பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாகவே காணப்படுகின்றது.எல்லா விவசாய நிலங்களுமே படிப்படியாக வீடுகளாக மாறிக் கொண்டே போகிறது. அவ்வாறு மாறுகிற போது அதில் ஒருவர் இருவராவது விவசாயம் செய்ய விரும்பினாலும் அது கூட சாத்தியப்படாத சூழலே காணப்படுகிறது. ஏனெனில் வீடுகளுக்கு மத்தியில் விவசாயம் செய்வது சாத்தியமில்லை. இவை எல்லாம் மேட்டு நிலப் பகுதியில் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள். இது இப்படி இருக்க, இந்த விவசாயப் பொருளாதாரத்தைத் தக்க வைக்க மிகவும் அவசியப்படுகின்ற நிலத்தடி நீர் விவசாய இராசாயனங்களால் நச்சாகின்றதென்ற நிலை ஒன்று உருவாகியுள்ளது. அதில் உண்மையும் இருக்கின்றது. ஆகவே சேதன செய்கையை வடக்கில் ஊக்குவிக்க வேண்டும். இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் சேதன உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
அந்த வகையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி சேதன விவசாயத்தில் ஈடுபட வேண்டும். அதற்கான சந்தை விலை உயர்வாக இருந்தாலும் அதுவொரு நச்சற்ற உணவு என்பதே முக்கியம். ஆகவே மக்களிடையே அது தொடர்பான வழிப்புணர்வும் ஏற்படுத்தி அந்த ஈடு செய்யும் வகையில் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மழை வீழ்ச்சி அதிகமாக இருக்கின்ற பொழுது விவசாயப் பயிர்ச்செய்கை பாதிக்கப்படும். அந்த வகையில் வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவற்றின் உற்பத்தியில் அவை நிலத்திற்கு கீழ் விளைச்சல் என்றபடியினால் பாதிப்புக்கள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அதே நேரம் நெற்பயிர்களைப் பொறுத்தவரையிலும் பாதிப்புக்கள் இருப்பதாக சொல்கின்றனர். ஏனென்றால் இங்கு மழை வீழ்ச்சி இருக்கிறது தான் ஆனால் பருவம் தப்பி பெய்கின்ற மழை வீழ்ச்சியினால் தான் இந்தப் பாதிப்பு உருக்கிறது.மேலும் வருடம் பூராகவும் பெய்யக் கூடிய மழை வீழ்ச்சியில் ஒரு குறிக்கப்பட்ட காலத்திலேயே அதாவது குறுகிய கால இடைவெளிக்குள் கூடுதலான மழை பெய்யும் ஒரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இது பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதுதான் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட விளைவு.
உலகளாவிய ரீதியில் பூமி வெப்பம் அடைவதால் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பபட்டு வருகிறது. ஆகவே இந்தக் கால நிலை மாற்றங்களுக்கு ஏற்ப பயிர்ச்செய்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். பயிரிடப்படுகின்ற பயிர்களையும் தீர்மானிக்க வேண்டும். அதே நேரத்தில் எந்தக் காலத்தில் எதைச் செய்ய வேண்டுமென்பதையும் தீர்மானிக்க வேண்டும். இந்த கால நிலை மாற்றங்களுக்கு ஏற்ப உயிரினங்கள் தம்மை மாற்றிக் கொள்கின்றன. பறவைகள் கூட இந்த பருவத்தில் தான் கூடு கட்டி குஞ்சு பொரிக்கும் என்ற நிலையிலும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதாவது கால நிலை மாற்றத்திற்கேற்ப அவை தம்மை மாற்றிக் கொள்கின்றன.
ஆகவே மனிதர்களும் தங்களுடைய பயிர்ச் செய்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென விவசாய வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கால நிலையால் பயிர்கள் பாதிக்கப்படும் போது உற்பத்திகளின் விலைகள் உயர்வதாக நுகர்வோர் குறை சொல்கிறார்கள். உண்மையில் அழிவுகள் ஏற்படும் இந்தக் காலத்தில் சந்தையில் கிடைக்கும் பெருட்களின் உற்பத்தி குறைவு என்பதால் விலை உயர்ந்துதான் இருக்கும்.
எனினும் விவசாயிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு கிடைக்கப் போகின்ற வருவாய் உயர்வாக உள்ளதாக கருத முடியாது. ஏனென்றால் இந்தக் கள நிலை மாற்றத்தால் குறிப்பாக வரட்சி, மழை வீழ்ச்சி ஆகிய இரண்டினாலும் விவசாயிகள் பெருமளவிற்கு பாதிப்புக்களையே அடைகின்றார்கள். எனினும் கால நிலை மாற்றத்தால் மாத்திரமே விவசாயம் பாதிக்கப்படுகிறது என்ற தோற்றப்பட்டை வெறுமனே ஏற்படுத்த முடியாது. உண்மையில் விசாயம் பாதிக்கப்படுவதற்கு பல காணரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே அந்தக் காரணங்கள் கண்டறியப்பட்டு அதற்கான தீர்வுகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமானது.
இதனூடாகவே விவசாயிகளை ஊக்குவித்து அவர்களை வழிப்படுத்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் விழிப்புர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கமைய விவசாய உற்பத்தியில் இருந்து விவசாயிகள் ஒதுங்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்படுமிடத்து அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக விவசாய உற்பத்தியை அதிகரித்து விவசாயத்தையும் பாதுகாக்க முடியும். அவ்வாறு செய்யப்படுமிடத்தே விவசாயிகளது வாழ்வையும் வளப்படுத்திக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமென்பதே யதார்த்தம்.