Type Here to Get Search Results !

பேரினப் பொருளாதாரம் என்றால் என்ன?

பேரினப் பொருளாதாரம்
குறிப்பிட்ட ஒரு பொருளாதாரத்தின் முழு மாறிகளுக்கும் இடையிலான ஒட்டுமொத்தமான மாற்றங்களைக் கணிப்பீடு செய்தல்பேரினப் பொருளியல் எனப்படுகிறது. மேலும் ஒரு நாட்டின் முழுப் பொருளாதாரத்திலும் ஏற்படுகின்ற மாற்றங்களையே இப்பேரினப் பொருளாதாரம் ஆய்வு செய்கின்றது எனலாம். ஏனெனில் ஒரு மாறியில் ஏற்படுகின்ற மாற்றம் முழுப் பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது.


பேரினப் பொருளியல் மாறியான பணநிரம்பலில் ஏற்படுகின்ற அதிகரிப்பு நாட்டின் பொது விலை மட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது மக்களின் நுகர்வு மட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி சேமிப்பு முதலீடு என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

இதனாலேயே பேரினப் பொருளியல் ஆய்வானது முழுப் பொருளாதாரத்தையும் பற்றிய ஆய்வாகக் கருதப்படுகின்றது.

சிற்றினப் பொருளியல்
சிற்றினப் பொருளியல் என்பது ஒரு பொருளாதாரத்தின் பல்வேறு சிறிய அலகுகளுக்கிடையிலான மாற்றங்களை ஏற்கனவே குறிப்பிடப்பட்ட எடுகோள்கள்- விதிகள்- கோட்பாடுகளுக்கமைய ஒரு கட்டுக்கோப்பான வரையறைக்குள் இருந்து ஆய்வு செய்தலைக் குறிக்கின்றது. இது பொருளாதார அலகுகளான நுகர்வோன், உற்பத்தியாளன், சந்தை, அரச நடத்தை போன்றவற்றைத் தனித்தனியாக ஆய்வு செய்கிறது.
உதாரணமாக:

  •  உற்பத்திக் கோட்பாடு
  •  கேள்விக் கோட்பாடு
  •  நிரம்பல் கோட்பாடு...... போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

நுண்பாகப் பொருளியலில் குறிப்பிட்ட ஒருமாறியில் ஏற்படுகின்ற மாற்றம் முழுப் பொருளாதாரத்தையும் மாற்றியமைக்கும் என கூறமுடியாது.
உ-ம்: தனிநபர் ஒருவரின் வருமானம் அதிகரித்தல் நாட்டினது தேசிய வருமானத்தை அதிகரிக்கும் என கூறமுடியாது.


பேரின - சிற்றினப் பொருளியல்களுக்கிடையிலான ஓற்றுமைகள்

  • இரு வகைப் பொருளியல் கோட்பாடுகளும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன.
  • இரண்டு பிரிவுகளும் கோட்பாடுகளைக் கொண்டுள்ளன.
  • இரண்டும் கோட்பாடுகள், எடுகோள்களினடிப்படையில் விளக்கப்படுகின்றன.

பேரினப் பொருளியல் ஆய்வின் முக்கியத்துவம்
1. பொருளாதாரத்தின் தொழிற்பாடு, செயற்பாடு பற்றி விளங்கிக் கொள்ளல்.
2. அரசு தனது பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொள்ளல்.
3. அரசு நாட்டினது அபிவிருத்திக்கான திட்டமிடல்களை மேற்கொள்ளல்.
4. நாட்டினது நுகர்வு - சேமிப்பு - முதலீடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பினை விளங்கிக் கொள்ளல்.
5. நாட்டினது வேலையின்மையின் அளவையும் அதனை ஒழிப்பதற்கான வழி முறைகளையும் இனங்காணுதல்.


பேரினப் பொருளியல் மாறிகள்
ஒரு மாறியில் ஏற்படுகின்ற மாற்றத்தால் இன்னுமொன்றில் ஏற்படுகின்ற மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பேரினப் பொருளியல் மாறிகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1) தேசிய வருமானம்
2) வரவு செலவுத்திட்டம்
3) பொருளாதார வளர்ச்சியும் அபிவிருத்தியும்
4) பொது விலை மட்டம்
5) பணநிரம்பல்
6) பணவீக்கம்
7) சென்மதி நிலுவை….

பேரினப் பொருளாதார இலக்குகள்

1. பூரண வேலை ஃ நிறை தொழில் மட்டத்தினை அடைதல்.
2. பொருளாதார உறுதிப்பாட்டினை எய்துதல்.
3. சமூக நீதியினை ஏற்படுத்துதல்.
4. பொருளாதார வளர்ச்சியினையும் அபிவிருத்தியினையும் ஏற்படுத்துதல்.


பொருளாதாரமொன்றில் தொழிற்படும் பல்வேறு துறைகள்
1) வீட்டுத்துறை 2) நிறுவனத்துறை 3) அரச துறை 4) வெளிநாட்டுத் துறை

1) வீட்டுத்துறை
பொருளாதாரமொன்றில் காணப்படுகின்ற அனைத்து குடும்பங்களையும் உள்ளடக்கியது வீட்டுத்துறை எனப்படுகிறது. அதாவது ஒரு கூரையின் கீழ் வாழ்ந்து குடும்ப வரவு செலவு திட்டமொன்றின் கீழ் தொழிற்படுகின்ற ஒவ்வொரு மக்கள் பிரிவும் வீட்டுத்துறையாகும்.

வீட்டுத்துறையின் இயல்புகள்:
• உற்பத்திக் காரணிகளின் உடமையாளர்களாகக் காணப்படல்.
• நிறுவனத்துறைக்கு உற்பத்தி காரணிகளை வழங்குதல்.
• காரணி வருமானங்களை நிறுவனத் துறையிடமிருந்து பெற்றுக் கொள்ளல்.
• நிறுவனத்துறையால் உற்பத்தியாக்கப்பட்ட பொருட்கள் சேவைகளை நுகர்தல்.
• சேமிப்புக்கள் மூலம் முதலீட்டுக்கான நிதியினை வழங்குதல்.
• வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தினை அரசுக்கு வரியாகச் செலுத்தல்.


2) நிறுவனத்துறை
பொருளாதாரமொன்றில் மக்களுக்குத் தேவையான பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்து விநியோகிக்கின்ற பிரிவினர் நிறுவனத்துறை எனப்படுகின்றனர்.

நிறுவனத்துறையின் இயல்புகள்:


  • உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான உற்பத்திக் காரணிகளை வீட்டுத்துறையினரிடமிருந்து கொள்வனவு செய்தல்.
  • காரணி வருமானங்களான வாடகைஇ வட்டிஇ கூலிஇ இலாபம் என்பவற்றை வீட்டுத்துறையினருக்கு வழங்குதல்.
  • பொருட்கள் சேவைகளின் உற்பத்தியில் ஈடுபடல்.
  • உற்பத்திப் பொருட்களை வீட்டுத் துறையினருக்கு விநியோகித்தல்.
  • வீட்டுத் துறையினரின் சேமிப்பினை முதலீடாக மாற்றுதல்.
  • தமது வருமானங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினை அரசுக்கு வரியாகச் செலுத்தலும் அரசிடமிருந்து மானிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலும்.
  • வெளிநாட்டுத் துறைக்குப் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்தலும், வீட்டுத் துறைக்குத் தேவையான பொருட்கள் சேவைகளை இறக்குமதி செய்தலும்.
  • நாட்டினது பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்தல்........


3) அரச துறை
பொருளாதாரமொன்றில் தொழிற்படுகின்ற பல்வேறுவிதமான துறைகளையும் ஒழுங்குபடுத்தி பேரினப் பொருளாதார இலக்குகளை அடையும் வகையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுகின்ற ஒரு துறை அரச துறை எனப்படுகின்றது.

அரச துறையின் இயல்புகள்:

  • • பல்வேறு விதமான துறைகளின் நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துதல்.
  • • சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுதல்.
  • • உற்பத்திக்குத் துணை புரிகின்ற உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் (துறைமுகம், நீர், மின்சாரம், விமானத்தளம், நெடுஞ்சாலை......)
  • • சமூக உட்கட்டுமான முதலீடுகளில் ஈடுபடுதல் (கல்வி, சுகாதாரம், மருத்துவம், நீதி.......)
  • • பொதுப் பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்து வழங்குதல்.
  • • நிறுவனத்துறையிடமிருந்து குறிப்பிட்ட அளவு பொருட்கள் சேவைகளைக் கொள்வனவு செய்தல்.
  • • வீட்டுத்துறையிடமிருந்து குறிப்பிட்ட அளவு உற்பத்திக் காரணிகளைக் கொள்வனவு செய்தல்.
  • • வீட்டுத்துறையிடமிருந்தும் நிறுவனத்துறையிடமிருந்தும் வரிகளை அறவீடு செய்தலும் மானியங்களை வழங்குதலும்.
  • • வரவு செலவு திட்டப் பற்றாக்குறைக்கு பல்வேறு மூலகங்களிலிருந்து நிதியினைப் பெற்றுக் கொள்ளல்.
  • • பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து பேரினப் பொருளாதார இலக்குகளை அடைதல்.



4) வெளிநாட்டுத் துறை
ஒரு பொருளாதாரத்தின் அரசியல் எல்லைகளுக்கப்பால் செயற்படும் துறை இதுவாகும். இலாபங்கள் பங்கிலாபங்கள் கூலியும் சம்பளமும் என்பவற்றினை உழைப்பதை நோக்கமாகக் கொண்டு ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற துறை வெளிநாட்டுத் துறை எனப்படுகின்றது. இத்துறையானது அந்நியச் செலாவணிச் சந்தையூடாக ஒரு பொருளாதாரத்தின் செயற்பாடுகளுடன் தொடர்பு கொள்கிறது.

வெளிநாட்டுத் துறையின் இயல்புகள்:

  • • ஒரு நாட்டுக்குத் தேவையான பொருட்கள் சேவைகளை இறக்குமதி செய்தலும், மேலதிகமானவற்றை ஏற்றுமதி செய்தலும்.
  • • ஓரு நாட்டுக்கு மாற்றல் வருமானங்களை வழங்குதல்.
  • • அந்நிய உதவிகளையும் கடன்களையும் வழங்குதல்.
  • • வெளிநாட்டு மூலதனத்தையும் முதலீடுகளையும் வழங்குதல்.....



பொருளாதாரமொன்றில் பல்வேறு துறைகளுக்கிடையிலான இடைத்தொடர்பு
பொருளாதாரமொன்றின் பல்வேறு துறையினருக்கிடையிலான இடைத்தொடர்பினைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

  • 1. வீட்டுத்துறைக்கும் றிறுவனத்துறைக்கும் இடையிலான இடைத்தொடர்பு (எளிய மூடப்பட்ட பொருளாதார மாதிரி)
  • 2. வீட்டுத்துறை, நிறுவனத்துறை, அரசதுறை என்பவற்றுக்கிடையிலான இடைத்தொடர்பு (அரச தலையீட்டுடன் கூடிய மூடப்பட்ட பொருளாதார மாதிரி)
  • 3. வீட்டுத்துறை, நிறுவனத்துறை, அரசதுறை, வெளிநாட்டுத்துறை என்பவற்றுக்கிடையிலான இடைத்தொடர்பு (திறந்த பொருளாதார மாதிரி)

எளிய மூடப்பட்ட பொருளாதார மாதிரி
வீட்டுத்துறையும் நிறுவனத்துறையும் தொழிற்படுகின்ற பொருளாதார மாதிரி:
அரசினது தலையீடோ ழச வெளிநாட்டுத் தலையீடுகளோ இன்றி வீட்டுத்துறையும் நிறுவனத்துறையும் மாத்திரம் சுதந்திரமாக தொழிற்படுகின்ற ஒரு பொருளாதார மாதிரியே எளிய மூடப்பட்ட ஃ இரு துறைப் பொருளாதார மாதிரி எனப்படுகின்றது.
இவ்வெளிய மூடப்பட்ட பொருளாதார மாதிரியானது பின்வருமாறு 2 வகையினதாக வகைப்படுத்தப்படுகின்றது.

  • எளிய மூடப்பட்ட செலவுத் தன்மைப் பொருளாதார மாதிரி
  • எளிய மூடப்பட்ட சிக்கனத் தன்மைப் பொருளாதார மாதிரி


எளிய மூடப்பட்ட செலவுத் தன்மைப் பொருளாதார மாதிரி
(சேமிப்பும் முதலீடும் தொழிற்படாத பொருளாதார மாதிரி)

அரசினது தலையீடோ or வெளிநாட்டுத் தலையீடோ காணப்படாத வீட்டுத்துறையும் நிறுவனத்துறையும் மாத்திரம் தொழிற்படுகின்ற பொருளாதாரமொன்றில்; காரணி உடமையாளர்களாக வீட்டுத்துறையினர் காணப்படுகின்றனர். இவர்கள் தமது காரணிகளை நிறுவனத்துறைக்கு வழங்க நிறுவனத்துறை அவற்றுக்கான கொடுப்பனவுகளான வாடகைஇ வட்டிஇ கூலிஇ இலாபம் என்பவற்றினை வீட்டுத்துறைக்கு வழங்குவர். பின்னர் நிறுவனத்துறை பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்து அவற்றை வீட்டுத்துறைக்கு வழங்க வீட்டுத்துறையினர் அவற்றுக்கான பணப் பெறுமதியினை நிறுவனத்துறைக்கு வழங்குவர். இவ்வாறு இரு துறைகளுக்குமிடையிலான கிரமமான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை முறையாகக் காட்டுவதே வருமான வட்டப்பாய்ச்சல் மாதிரி எனப்படுகின்றது.

இவ்வாறு இரண்டு துறைகள் மாத்திரம் தொழிற்படுகின்ற பொருளாதாரத்தில் வீட்டுத்துறை பெற்றுக் கொள்கின்ற காரணி வருமானங்கள் அனைத்தும் நுகர்வுக்காக செலவு செய்யப்படுமாயின் அத்தகைய பொருளாதாரமே மூடப்பட்ட செலவுத்தன்மைப் பொருளாதார மாதிரி எனப்படுகின்றது.

சேமிப்பும் முதலீடும் தொழிற்படாத பொருளாதார மாதிரிக்கான எடுகோள்கள்:
1. காரணி உடமையாளர்களான வீட்டுத்துறையினர் தமது காரணிகளை நிறுவனத்துறைக்கு வழங்குவர்.
2. காரணிகளும் - காரணி வருமானங்களும் ஒன்றுக்கொன்று சமனாகக் காணப்படும்
3. வீட்டுத்துறையினது காரணி வருமானங்கள் அனைத்தும் நுகர்வுக்காகச் செலவு செய்யப்படும்
4. நிறுவனத்துறையினது உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் நுகர்வுப் பொருட்களாகும்.
5. அரச - வெளிநாட்டுத் தலையீடுகள் இல்லை.


பண ஓட்டமும் - மெய் ஓட்டமும் (பணப்பாய்ச்சலும் - மெய்ப்பாய்ச்சலும்)
வீட்டுத்துறையால் நிறுவனத்துறைக்கு உற்பத்திக் காரணிகள் வழங்கப்படுகின்ற செயற்பாடும் நிறுவனத்துறையால் வீட்டுத்துறைக்கு பொருட்கள் சேவைகள் வழங்கப்படுகின்ற செயற்பாடும் பொருளாதாரத்தின் மெய்யோட்டம் எனப்படுகிறது.

நிறுவனத்துறையிடமிருந்து வீட்டுத் துறைக்கு உற்பத்திக் காரணிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதும் பின்னர் வீட்டுத் துறை கொள்வனவு செய்த பொருட்கள் சேவைகளுக்காக நிறுவனத் துறைக்கு பணப் பெறுமதியை வழங்குவதும் பொருளாதாரத்தின் பணவோட்டம் எனப்படும்.

உற்பத்தி - வருமானம் - செலவு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு
ஒரு எளிய மூடப்பட்ட பொருளாதாரமொன்றில் பொருளாதாரத்தின் உற்பத்தி - மொத்த வருமானம் - மொத்தச் செலவு என்பன ஒன்றுக்கொன்று சமனாகக் காணப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad