கொரோனாவை எதிர்கொள்வதற்கு வழியின்றி சில நாடுகள் திண்டாட்டம்
தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் சர்வதேச நாடுகளுக்கு அறிவுரை
உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது கொரோனா. எனவே உலக நாடுகள் அத்தனையும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.
இந்த தொற்று என்னும் பதத்தை தற்போது உலக சுகாதார நிறுவனம் மாறுபட்ட பொருளிலேயே பயன்படுத்துகிறது. Pandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விபரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.
ஒரு வைரஸ், மக்களிடமிருந்து மக்களுக்கு எளிதாக பரவினால் அது தொற்று எனப்படுகிறது.
கடைசியாக 2009இல் வந்த பன்றிக் காய்ச்சல் உலகளவில் பரவும் தொற்றாக அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்தும் இல்லை, வேறு சிகிச்சையும் இல்லை. இது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.கொரோனாவால் இப்போது 114 நாடுகளில் மொத்தம் 1,18,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவர் டெட்ரோஸ் இது பற்றிக் கூறுகையில், "சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும் ,வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன" என்கிறார்.
எனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும் உடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும், மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட்-19இனால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் ேகட்டுள்ளது.
இவ்வாறு ஒரு நோயை தொற்று என அறிவிப்பது உலகில் புதிய விடயம் அல்ல. உலகம் முழுவதும் பரவிய பல நோய்கள் பல்வேறு காலங்களில் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளன.1918இல் H1N1 வைரஸால் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக சுமார் 50 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். இது ஸ்பானீஷ் ஃப்ளூ எனப்பட்டது. குறிப்பாக 15 வயது முதல் 34 வயதுக்குட்பட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஏசியன் ஃபுளு என்ற நோய் 1957இல் சிங்கப்பூரில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. இதில் உலகம் முழுவதும் 11 இலட்சம் பேர் உயிரிழந்தனர்.
ஹொங்கொங் ஃபுளு என்ற வைரசினால் 1968இல் ெஹாங்ெகாங்கில் 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இது பின்னர் ஆசிய கண்டத்திலும் ஐரோப்பாவிலும் பரவியது. வியட்நாம் போரில் கலந்து கொண்ட அமெரிக்கப் படை வீரர்கள் வீடு திரும்பிய போது அவர்களுக்குக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. இதன் பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் இந்த தொற்று நோயால் மடிந்தனர்.
2009இல் ஏற்பட்ட பன்றிக் காய்ச்சலால் உலகில் 2 இலட்சம் பேர் வரை இறந்தனர். இந்த நோய் முதலில் மெக்சிகோவில் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சலைப் பரப்பும் வைரஸ்கள் பன்றிகளைத் தாக்கிய வைரஸ்கள் போன்று இருந்தன. இந்தக் காய்ச்சலால் தாக்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே உயிரிழந்தனர். ஆனால் பல்வேறு நாடுகளில் பரவியது.
1981இல் அமெரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது எச். ஐ. வி. இதுவரை உலகம் முழுவதும் 7.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 3 கோடி 20 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை எச். ஐ.விக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.