கல்விக் கூடங்களில் முடிவின்றி தொடரும் காட்டுமிராண்டித்தனம்!
இலங்கையில் பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி நிறுவனங்களில் பகிடிவதை தடை செய்யப்பட்டுள்ள போதும் காலத்துக்குக் காலம் ஏதோ ஒரு விதத்தில் பகிடிவதைக்கு புதிய மாணவர்கள் உள்ளாக்கப்படுவது வழமையாகவே காணப்படுகின்றது. 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வடிவங்களிலான வன்முறைகளைத் தடை செய்யும் சட்டத்தின் பிரகாரம் பகிடிவதை ஒரு குற்றச் செயலாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பகிடிவதை தடை செய்யப்பட்டதொன்றாகக் காணப்படுகின்ற போதும் உயர்வகுப்பு மாணவர்களால் புதுமுக வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் ஏதோவொரு வழியில் துன்புறுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் கடந்த 6 ஆம் திகதி மோசமான பகிடிவதைக்குட்படுத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் செய்தி கவலை தரக் கூடியதொன்றாகவே உள்ளது. இதன் காரணமாக கல்விச் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. களியாட்ட நிகழ்வு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த பகிடிவதையின் போது பாதிக்கப்பட்ட மாணவனின் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு உயிராபத்து ஏற்படலாமென்று மருத்துவமனை வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது. பகிடிவதையின் போது இந்த மாணவன் மீது டயரொன்று தூக்கி வீசப்பட்டதால் அந்த டயர் தலையில் மோசமாகத் தாக்கியதன் காரணமாகவே இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் களியாட்ட நிகழ்வின் போது சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் இவர்களில் பலர் மது போதையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவ தினம் அதிகாலை 1.15 மணிக்கும் 1.30 மணிக்குமிடையிலான 15 நிமிட இடைவெளியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக பதில் உபவேந்தர் தெரிவித்திருக்கின்றார். மருத்துவமனையில் உள்ள மாணவனை பார்வையிடச் சென்ற உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தனது கடும் விசனத்தை வெளியிட்டதோடு இதற்கு காரணமான மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்திருக்கின்றார்.
கல்வியமைச்சரின் அறிவிப்பு குறித்து கவனம் செலுத்தும் போது மற்றொரு விடயத்தை கல்விச் சமூகம் சிந்திக்க வேண்டியுள்ளது. பகிடிவதை சட்டரீதியாக தடை செய்யப்பட்டிருக்கும் போது பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் எக்காரணம் கொண்டும் இது போன்ற நிகழ்வுகளுக்கு இடமளிக்காமல் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம்.
பல்கலைக்கழகங்கள் என்பவை மிகச் சிந்த புலமைத் தேடலுக்கான சுதந்திரமான வெளியாகும். இன்று பல்கலைக்கழகப் படிப்புக்கு தமது பிள்ளைகளை அனுப்புவது தொடர்பில் பெற்றோர் ஒன்றுக்குப் பல தடவை சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடிய இடமாக பல்கலைக்கழகங்கள் மாறி வருவதாக பெற்றோர் அச்சம் கொண்டுள்ளனர். பல்கலைக்கழகங்கள் பல சந்தர்ப்பங்களிலும் சித்திரவதைக் கூடங்களாக மாறிய வரலாற்றை நீண்ட காலமாகவே அவதானிக்க முடிகிறது.
ஒருசில மாணவர்கள் செய்கின்ற தவறால் ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களுக்குமே இழிவுநிலை ஏற்படுகின்றது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் தமக்கிடையே மனிதப் பண்புகளையும் சகோதரத்துவத்தையும் ஏனையோரை மதிப்பதையும் போன்ற நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் என்போர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் மதிக்கப்படுபவர்கள். அவர்கள் இளம் சமூகத்துக்கு முன்மாதிரியானவர்களாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் எதிர்காலத் தலைவர்களைப் பயிற்றுவித்து வளர்க்கும் மதிப்புயர் மையங்களாகும். ஆகவே அங்கு வாழும் அனைவரும் சிவில் சமுகத்தின் சகல நியமங்களையும் நடைமுறைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் பொறுப்புணர்வோடும் கௌரவத்துடனும் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அத்தோடு, பல்கலைக்கழகத்தால் இயற்றப்பட்ட விதிகளுக்கும் கட்டளைகளுக்கும் அவர்கள் இணங்கி நடக்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்கள் சகலரும் மிக உயர்வான நன்னடத்தை மற்றும் ஒழுக்க நியமங்களைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு அகௌரவத்தையும் அதேவேளை தமது எதிர்காலத்துக்கு மீட்க முடியாத சேதத்தை ஏற்படுத்தக் கூடிய ஒழுக்கக் கேடான சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பது அவசியமாகும்.
அண்மையில் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அதிர்ச்சியான தகவலொன்றை வெளியிட்டிருந்தார். அதாவது கடந்த வருடத்தில் மாத்திரம் பகிடிவதை காரணமாக சுமார் 2000 மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தியுள்ளனர் என்பதே அந்த திடுக்கிடச் செய்யும் தகவல்.
அமைச்சரின் இக்கருத்துப்படி பார்த்தால் இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களில் 10 தொக்கம் 20 வீதமானவர்கள் கல்வியை இடைநிறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இது கடந்த வருடம் மாத்திரம் நடைபெற்ற ஒன்றல்ல. காலத்துக்கு காலம் பகிடிவதைகளினால் மாணவர்கள் கல்வியை இடைநிறுத்துவதும் சிலர் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து உயிரிழப்பதும் இடம்பெற்று வந்திருக்கிறது. ஆனால் இதுவரை இதற்கு பொருத்தமான தீர்வு எட்டப்படவில்லை.
அடுத்து மற்றுமொரு பகிடிவதை வன்முறை இடம்பெறவதற்கு முன்னர் ஜனவர்தனபுர பல்கலைக்கழக மாணவனுக்கு உரிய நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டியவர்களை விட்டு வைக்கக் கூடாது. அவர்கள் எந்தத் தரத்தைச் சார்ந்தவராயினும் சட்டத்தின் முன் சமம் என்ற ரீதியல் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். அப்பாவி மாணவர்களின் உயர் கல்வியை பாதிக்கும் பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். சட்டத்தை கடுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற வேண்டியுள்ளது.