இலங்கையின் உயர் கல்வியில் தனியார் துறையின் செல்வாக்கு
இலங்கையின் உயர் கல்வி வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சந்தையின் கேள்விக்கேற்ப மனித முதலீட்டை (Human Capital) அதிகரிக்க முடியாத சவாலுக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு தொகை மதிப்பீட்டின்படி 25 வயதான இளைஞர்களில் நான்கு வீதமானோரே இலங்கையில் இளமானி மட்ட தகுதியைக் கொண்டுள்ளனர். நாட்டின் சனத்தொகையில் மிகக் குறைந்ததொரு பகுதியினருக்கே உயர் கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுவதே இதற்கான பிரதான காரணமாகும்.
பல்கலைக்கழக நுழைவு வாய்ப்புகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகக் கல்வி மிகுந்த போட்டித் தன்மையுள்ளதாக மாறியுள்ளது. 2014/2015 கல்வியாண்டில் உயர் தரத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களின் தொகை 149,489 ஆகும். எனினும், இத்தொகையில் 17 வீதமானோரே அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவு அனுமதி பெற்றனர்.
2016/2017 கல்வியாண்டில் உயர் தரத்தில் தேற்றிய 250,000 மாணவர்களில் 160,000 பேர் பல்கலைக்கழகக் கல்வி பெறும் தகுதி பெற்றுள்ளனர். அவர் களில் 30,000 மாணவர்களுக்கே இம்முறை பல்கலைக்கழக நுழைவு அனுமதி வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், வருடாந்தம் சராசரியாக பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறும் மாணவர்களில் 120,000 பேருக்கு பல்கலைக்கழக நுழைவு அனுமதி மறுக்கப்படுவதனால் பல்கலைக்கழகம் செல்லும் கனவை அவர்கள் கைவிட்டு விடுகின்றனர்.
இதேவேளை, சர்வதேச பாடசாலை களில் வெளிநாட்டுக் கலைத் திட்டத்தை நிறைவுசெய்யும் மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகம் நுழைவதற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் வருடாந்தம் 12,000 இலங்கை மாணவர் கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்கின்றது. விளைவாக, வருடாந்தம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையர்கள் அந்நியச் செலாவணியாக இழக்கின்றனர். வெளி நாடுகளில் சென்று கல்வி கற்பதற்கு வசதியற்றவர்கள் உள்ளூர் சந்தைகளில் மாற்றுத் தெரிவுகளை எதிர்பார்த்து நிற்கின்றனர். அவர்களின் தொகை வருடாந்தம் அதிகரித்து வருகின்றது.
இந்த இடைவெளியை கூர்ந்து அவதானித்து வந்த அரச சார்பற்ற பங்காளர்கள் உயர் கல்வித் துறையில் நுழைந்துள்ளனர். நாடு முழுவதும் உயர் கல்விக்கு நிலவும் கேள்விக்கு ஈடு கொடுக்கும் வகையில் எக்கச் சக்கமான இளமானிப் பட்டம் வழங்கும் தனியார் துறை கல்வி நிறுவனங்கள் களத்திற்கு வந்துள்ளன. தனியார் துறை ஊடாக இலங்கையின் உயர் கல்வி வாய்ப்புக் களை விஸ்தரிப்பது மாணவர்களுக்குக் கிடைக்கும் வரப் பிரசாதமாகும். இல்லையெனில், இம்மாணவர்கள் பல மடங்கு மேலதிக செலவீனங்களை மேற்கொண்டு வெளிநாடுகளில் கல்வி பயில வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
தற்போது தனியார் துறையிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். முதல் வகை, உயர் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்த நிலையில் இளமானிக் கற்கைகளை வழங்கும் (Degree – Awarding Institutes) நிறுவனங்களாகும். இரண்டாம் வகை, உயர் கல்வி அமைச் சின் கீழ் இல்லாத, அதன் கண்காணிப் பின் கீழ் பதிவு செய்யாத தனியார் துறை உயர்கல்வி நிறுவனங்களாகும்.
உயர்கல்விச் சட்டத்தின் 25 A பிரிவு, குறித்ததோர் நிறுவனம் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், அதற்கு இளமானிப் பட்டத்தை வழங்கும் நிறுவன அங்கீகாரத்தை வழங்கும் அதிகாரத்தை உயர் கல்வி அமைச்சருக்குத் தருகின்றது. 2015 ஆம் ஆண்டிலிருந்து அத்தகைய, உயர் கல்வி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப் பட்ட 16 இற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் இயங்குகின்றன. அவை அரச அங்கீகாரம் பெற்ற 64 துறைகளில் இளமானிப் பட்டங்களை வழங்குகின்றன.
தகவல் தொழில்நுட்பம், எந்திரவியல், உளவியல், முகாமை, மருத்துவம் ஆகிய துறைகளிலேயே இளமானிப் பாடநெறிகளை இந்நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றுள் NIBM (National Institute of Business Management), CINEC (Colombo International Nautical and Engineering College, Horizon Campus, SANSA Campus, SAITM (South Asia Institute of Technology and Medicine மற்றும் ICASL (Institute of Chartered Accountants of Sri Lanka) என்பன முக்கியமானவை. இவை 2017 இன் 7 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் அல்லது 1992 இன் முதலீட்டு சபை 16 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டவை.
இந்நிறுவனங்கள் கணக்கியல், சந்தைப்படுத்தல், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சான்றிதழ் மட்ட, தொழில்சார் டிப்ளோமா கற்கைநெறிகளையும் வழங்குவது குறிப்பிடத்தக் கது. அவற்றுக்கும் உயர் கல்வி அமைச்சின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2015 இன் ஆரம்பத்தில் இந்நிறுவனங்களில் இளமானிப் பட்டத்திற்காக பதிவு செய்த மாணவர்களின் தொகை 8892 ஆகும். அதேவேளை, 60,000 மாணவர்கள் டிப்ளோமா கற்கைநெறிகளில் தம்மைப் பதிவுசெய்துள்ளனர்.
உயர் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்படாத உயர் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவை கல்வி அமைச்சுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து தவிர்ந்துகொள்வதோடு, உலக அங்கீகாரம் பெற்ற ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு செயல்படுகின்றன. குறிப்பிட்ட அவ்வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் வழங்கும் அங்கீகாரமே இந்நிறுவனங்களின் நம்பகத் தன்மைக்கு அடிப்படையாக உள்ளது.
இலங்கையில் தற்போதுள்ள உயர் கல்வி ஏற்பாடுகளின்படி உயர் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யாமல் இவ்வாறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இளமானிப் பட்டத்தை (Degree) உள்ளூர் இணை நிறுவனங்கள் (Affliated Institutions) வழங்குவதற்கு சட்ட ரீதியான தடைகள் எதுவும் இல்லை.
1992 மார்ச் 13 திகதியிடப்பட்ட பொது நிருவாகச் சுற்றறிக்கை 16/92 படி சர்வதேச பல்கலைக்கழகங்களின் கையேடு (International Handbook of Universities) மற்றும் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் வருடாந்த கையேடு என்பவற்றில் குறிப்பிடப்பட் டுள்ள எந்தவொரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க வேண்டும். அதன்படியே இந் நிறுவனங்கள் இங்கு இயங்குகின்றன.
பதிவுசெய்யப்படாத தனியார் துறை நிறுவனங்களில் பெரும்பாலும் வணிகம் மற்றும் முகாமை துறைசார்ந்த கற்கை களே வழங்கப்படுகின்றன. இத்தகைய பதிவுசெய்யப்படாத தனியார் துறை உயர்கல்வி நிறுவனங்களில் 2015 இல் மாத்திரம் இளமானிப் பட்டத்திற்காக 4518 மாணவர்கள் தம்மைப் பதிவு செய்திருந்தனர். இவ்வாறு உயர் கல்வி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்டதும், பதிவுசெய்யப்படாததுமான தனியார் துறை உயர் கல்வி நிறுவனங்களில் பல்லாயிரணக்கான மாணவர்கள் இணைந்து தமது உயர் கல்வியைத் தொடர்வது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இலங்கை தொழில்வாண்மை யாளர்களிடமும் கல்வித் துறை சார்ந் தோரிடமும் பல்வேறு அபிப்பிராயங் களும் கருத்து வேற்றுமைகளும் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.