நீர்வீழ்ச்சி என்பது ஆறு போன்ற ஒரு நீரோட்டம் சடுதியான நிலமட்ட வேறுபாட்டை கொண்ட அரிப்புக்கு உட்படாத பாறை அமைப்புகளில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்துக்கு விழுவதால் உண்டாகும் நிலவியல் அமைப்பு ஆகும்.
பம்பரகந்தை நீர்வீழ்ச்சி
இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது 263 மீட்டர் பாய்ச்சலை உடையது. இது இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இது கொழும்பு -பண்டாரவளை சாலையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் காட்டில் அமைந்துள்ளது. உல்லாச பிரயாணிகளின் வருகை குறைவாகவே காணப்படுகின்றது. பம்பரகந்தை நீர்வீழ்ச்சி குதிரை வால் வகையினை சேந்ததாகும். இது உலகிலே 297வது நீர்வீழ்ச்சியாக விளங்குகின்றது.
துன்கிந்தை நீர்வீழ்ச்சி
இது இலங்கையின் பதுளை நகரில் இருந்து 5 கிலோமீட்டருக்கு அப்பால் அமைந்துள்ளது. இது இலங்கையின் அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். இதன் உயரம் 64 மீட்டர் ஆகும். இது பதுளை நகரத்தின் ஊடாக செல்லும் பதுளை ஓயா என்று அழைக்கப்படும் ஆற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.கால்நடையாக சென்று இவ் நீர்வீழ்ச்சியினை பார்வையிட வேண்டும் எனில் 1 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
தியலும நீர்வீழ்ச்சி
இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் கிளையாறான புங்கள ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாக இது விளங்குகின்றது. இது 220 மீட்டர் பாய்ச்சலினை கொண்டுள்ளது. இது கொழும்பு-கல்முனை பெருந்தெருவில் கொஸ்லாந்தைக்கும் வெல்லவாயாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இலங்கையின் 2வது உயரமான நீர்வீழ்ச்சியாக இது விளங்குகின்றது. இது உலர் வலயத்தில் அமைந்தாலும் இதன் நீரூற்றுக்கள் ஈர வலயத்தில் இருந்தே தோன்றுவதால் ஆண்டு தோறும் நீர் பாய்கின்றது. இது உலகில் 360வது நீர்வீழ்ச்சியாக திகழ்கின்றது.
மதுரட்டை நீர்வீழ்ச்சி
இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். நுவரெலியா கந்தப்பளை பெருந்தெருவில் 29 கிலோமீட்டர் சென்ற நிலையில் பாதையிலிருந்து 2 கிலோமீட்டர் உள்ளாக தேயிலை தோட்டமொன்றின் நடுவில் அமைந்துள்ளது. இதன் உயரம் 189 மீட்டர் ஆகும்.இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் மைலபிட்டி நகரம் உள்ளது.
லக்சபான நீர்வீழ்ச்சி
இது இலங்கையில் உள்ள 8வது பெரியதும் 126 மீட்டர் உயரத்தினை கொண்டும் காணப்படுகின்றது. இது உலகில் 625வது பெரிய அருவிகளில் ஒன்றாகும். இது மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன் நகரில் அமைந்துள்ளது. மஸ்கெலியா ஓயா, கெஹெல்கமுவை ஓயா சங்கமிக்கும் இடத்துக்கு அருகே மஸ்கெலியா ஓயா பெருக்கெடுத்து பள்ளத்தாக்கை நோக்கி பாய்வதினுடாக இந்த அருவி தோன்றியுள்ளது.
மஸ்கெலியா வீதியில் அமைந்துள்ள லக்சபான நீர் மின் நிலையம் 50 மெகாவாட் மின்சாரத்தையும் புதிய லக்சபான நீர் மின் நிலையம் 100 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்கின்றன.
இராவணன் நீர்வீழ்ச்சி
இது ராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகின்றது. நீர்வீழ்ச்சிக்கு பின்னல் குகையில் இராவணன் சீதையை வைத்திருந்தார் என புராண கதைகள் கூறுகின்றன. இதன் உயரம் 49 மீட்டர் ஆகும். இங்குள்ள வீழ்ச்சிகளின் எண்ணிக்கை 3 ஆகும். இந்த நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பாறையில் அமைந்துள்ளது. எனவே பாறை அரிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.
அலுபொல நீர்வீழ்ச்சி
இது இலங்கையின் சப்ரகமுவா மாகாணத்தில் இரத்தினபுரி நகரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது அருகில் உள்ள தேயிலை தோட்டத்தின் பெயரினால் அழைக்கப்படுகின்றது. அலுபொல நீர்வீழ்ச்சி வளைவை ஆற்றின் கிளையாறான வேவல் ஆற்றில் அமைந்துள்ளது.இவ் நீர்வீழ்ச்சி உலர் பருவத்திலும் ன்னேர் கொண்டு பாய்வதனை காணலாம். இவ் நீர்வீழ்ச்சி மூலம் அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ் நீர்வீழ்ச்சி 80 மீட்டர் உயரத்தினை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.