இலங்கையின் பொருளாதாரம்
இலங்கையின் பொருளாதாரம் (Economy of SriLanka) பெருந்தோட்டப் பயிர்செய்கைகளான தேயிலை, இரப்பர், கொக்கோ, கிராம்பு போன்றவையே பிரதான வருவாயாக விளங்கியது. அண்மைக் காலங்களில் பெருந்தோட்டங்கள் சிங்கள மக்களுக்கு குடியேற்ற கிராமங்களாக பிரித்துக்கொடுக்கப்பட்டதனால், அவ்வருமானம் வீழ்ச்சியடைந்ததுடன், தற்போது இலங்கையின் பிரதான வருமானமாக வெளிநாட்டு பணியாளர்கள் ஊடாகவே கிட்டப்படுகின்றது.
குறிப்பாக மத்திய கிழக்காசிய நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக பணிப்புரிவோரின் ஊடாகவே பெறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தவிர சுற்றுலா, தேயிலை, புடவை போன்றவற்றில் இருந்து கணிசமான வருவாய் கிட்டுகின்றன. தற்போது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் தமது குடும்பத்தாருக்கு உதவி வரும் நிதி போன்றனவும் இலங்கைக்கான ஒரு வருவாய் மார்க்கமாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் பொருளாதாரத்தில் செழிப்பான நிலையில் இருப்பதனால், மீண்டும் இலங்கைத் திரும்பி தமது வணிக நடவடிக்கைகளைத் தொடரவும் அழைப்பு விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பொருளாதார வரலாறு
பழங்காலம் முதலே ஒன்பது இரத்தினங்கள், யானைத் தந்தம், முத்துகள் போன்ற பொருட்களுக்குப் புகழ்பெற்ற இலங்கை, குடியேற்ற காலத்தில் கறுவா, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வர்த்தகப் பயிர்களுக்கு பெயர் பெற்று விளங்கியது.
இலங்கைக்கு 1948யில் விடுதலை பெற்ற பின்னர், முதலாளித்துவ பொருளாதாரத்தைப் சிறிது காலமே பின்பற்றிய போதிலும் அது ஆசியாவிலே மிக முன்னேற்றகரமான பற்பல சமூகநல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால் 1956 ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முழுக்க முழுக்க சமவுடமை பொருளாதாரத்தையே கைக்கொள்ளத்தொடங்கியது. 1977மாம் ஆண்டுக்குப் பின்னர், தனியார்மயப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும், ஏற்றுமதி சார்ந்த வர்த்தகத்தையும் நோக்கி நகர்ந்துள்ளது.
தற்போது மிகை இயங்குநிலையிலுள்ள துறைகளாவன, உணவுப்பொருள் உற்பத்தி, ஆடை உற்பத்தி, உணவும் குடிவகைகளும், தொலைத் தொடர்பு, காப்புறுதி, வங்கித் துறைகளாகும். 1996 அளவில், பெருந்தோட்டப் பயிர்கள் எற்றுமதியில் 20% ஐ மட்டுமே கொண்டிருந்தன (1970 இல் 93%), அதே நேரம் ஆடைகள் ஏற்றுமதியின் 63% ஆக இருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 1990களில் சராசரியாக 5.5% ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது. வறட்சியும், சீர்கெட்டுவந்த பாதுகாப்பு நிலையும், 1996இல் வளர்ச்சியை 3.8% க்குத் தாழ்த்தும் வரை இது நீடித்தது. 1997-2000 காலப்பகுதியில், சராசரி 5.3% வளர்ச்சியோடு கூடிய பொருளாதார மீட்சி காணப்பட்டதெனினும், மின்சாரப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பிரச்சினைகள், உலகப் பொருளாதார மந்த நிலை, மற்றும் தொடர்ந்து வந்த உள்நாட்டுக் குழப்பங்கள் என்பவற்றால், 2001ல் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ஒரு பொருளாதார ஒடுக்கத்தைக் காண நேர்ந்தது.
எனினும் 2001 ல், கையெழுத்து இடப்பட்ட, இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பொருளாதாரம் தேறி வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கொழும்பு பங்குச் சந்தை 2003ல் ஆசியாவிலேயே ஆகக் கூடிய வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது, தென்னாசியாவிலுள்ள முக்கிய நாடுகளிடையே அதிக தனி நபர் வருமானத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்.
வெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாய்
தற்போது வெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாயே இலங்கை பொருளாதாரத்தின் பிரதான அங்கமாகியுள்ளது. கல்வி கற்காதோர் முதல், உயர் தரம் கற்றோர் வரை ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் எளிதாக தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு துறையாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைந்துள்ளப் படியால், பெரும்பாலானோரின் தெரிவு வெளிநாட்டு வேலை வாய்ப்பாகவே மாறி வருகின்றது.
உள்நாட்டில் தொழில் புரிவோரும் அத்தொழில்கள் ஊடாக போதிய வருவாயை ஈட்ட முடியாத நிலையும், இலங்கையில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் விலைவாசி அதிகரிப்பிற்கு முகம் கொடுக்க முடியாத நிலையும் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுகமாக இலங்கை சமூகம் மாற்றமாகி வருகிறது. இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பில் பெரும்பாலானோர் வீட்டுப் பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர். மத்தியக் கிழக்காசிய நாடுகளில் இலட்சக் கணக்காணோர் வீட்டு பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர்.
மத்திய கிழக்காசிய நாடுகளைத் தவிர உலகின் பலவேறு நாடுகளிலும் வீட்டுப் பணியாளர்களாக இலங்கையர் தொழில் புரிகின்றனர். இவ்வாறான வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடாகவே தற்போதைய இலங்கையின் பிரதான பொருளாதாரம் ஈட்டப்படுகின்றது.
வடகிழக்கு மக்கள்
2009ம் ஆண்டுக்கு முன்பு இலங்கையின் உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்த வடக்கிழக்கு பகுதிகளைத் தவிர்ந்த ஏனையப் பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமே வெளிநாட்டு பணியாளர்களாக அதிகம் இருந்தனர்.
தற்போது வட கிழக்கு மக்களும் இலங்கையின் வருவாயை ஈட்ட போதுமான தொழில் வாய்ப்பு இல்லாமையாலும், இலங்கையில் செலவீனங்களுக்கு முகம் கொடுக்க முடியாமையினாலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
அரசாங்கமும் வெளிநாடுகளுக்கு சென்று பணிப்புரிவதன் ஊடாக கிட்டும் வருவாயை கவனத்தில் கொண்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்பையே ஊக்குவித்து பொருளாதாரத்தை ஈட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.