உளவியல் கோட்பாடுகளின் பார்வையில் சமூகமயமாக்கல்
1. அறிமுகம்
நாம், தனித்து வாழாமல் சமூகமாக வாழ்ந்து வருகிறோம். எம்முடன் நேரடியாக, மறைமுகமாக இடைவினை புரியும் மக்கள் கூட்டத்துடன் சமூக அங்கத்தவர் என்ற வகையில் எம்மை நாம் பிணைத்துக் கொண்டுள்ளோம். சமூகம் என்பது தாம் வாழும் பிரதேசம், கொண்டுள்ள இடைவினைகள் மற்றும் தமது கலாசாரம் என்பனவற்றின் அடிப்படையில் கட்டையெழுப்பப்படுவதாகும். இச்சமூகங்கள் தமக்கிடையில் பொதுவான நியமங்கள், விழுமியங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இச் சமூகங்களில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் (பாடசாலை, வணக்கஸ்தலங்கள்..) நாம் யார், இந்த சமூகத்தில் நாம் வாழ்வதற்கு எவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்பவற்றைக் கற்றுத் தருகின்றன. இதன்போது, சமூக அங்கத்தவர்க்களுக்கிடையில் சமூக நியமங்கள், விழுமியங்கள், நம்பிக்கைகள் என்பன கடத்தப்படுகின்றன. இச்செயன்முறையின் காரணமாக ஒருவர் நான் (I) எனும் நிலையில் இருந்து நாம் (We) எனும் நிலையினை அனுபவிக்கத் தொடங்குகிறார். இதனையே நாம் சமூகமயமாக்கல் என்கிறோம். ஒருவரின் நிகழும் சமூகமயமாக்கல் தொடர்பாக பல்வேறு கோட்பாடுகளும் உருவாகியுள்ளன. எனவே, சமூகமயமாக்கலை சில உளவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள இக்கட்டுரை முற்படுகிறது.
2. சமூகமயமாக்கல்- வரைவிலக்கணம்
சமூகமயமாக்கல் என்பது தனிநபர்கள் தங்கள் சமூகத்தின் நியமங்கள்விழுமியங்கள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்ளும் செயன்முறையாகும். சமூகமயமாக்கல் மூலம் மக்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் பங்கேற்க தேவையான திறன்களையும் இயலளவுகளையும் விருத்தி செய்து கொள்கிறார்கள். சமூகமயமாக்கல் குழந்தை பருவத்தில் இருந்து தொடங்கி வாழ்நாள் முழுதும் நிகழும் ஓர் செயன்முறையாக விளங்குகிறது. ஜோர்ச் ஹெர்பர்ட் மீட் (Mead 1934) என்ற சமூகவியலாளரின் கருத்துப்படி, சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தனது சமூகத்தின் வகிபங்குகள் மற்றும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும், அவர்களின் கலாச்சாரத்தின் நியமங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் இணங்குவதற்கும் கற்றுக் கொள்ளும் ஒரு செயல்முறையாகும். மற்றொரு சமூகவியலாளர், சார்லஸ் கூலி (Cooley, 1902), சமூகமயமாக்கலை மற்றவர்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் சுயஉணர்வு அல்லது ஒருவரின் சொந்த அடையாளத்தை வளர்ப்பதற்கான செயன்முறை என வரையறுக்கிறார். சமூகமயமாக்கல் என்பது குழந்தைகள் தங்கள் சமூகத்தின் வழிகளைக் கற்றுக்கொள்வது மற்றும் குறித்த வழிகளை தனிப்பட்ட முறையில் தங்கள் சொந்தமாக மற்றும் செயன்முறையாகும் என Hovighurst & Newgarton என்போர் கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக, சமூகமயமாக்கல் என்பது தனிநபர்கள் தங்கள் சமூகத்தின் நியமங்கள், விழுமியங்கள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்வது மற்றும் அவர்களின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் பங்கேற்கத் தேவையான திறன்கள் மற்றும் இயலளவுகளை வளர்த்துக் கொள்ளும் செயன்முறையாக வரையறுக்கப்படுகிறது. சமூகமயமாக்கல் தொடர்பாக நோக்கும் போது, சமூகமயமாதல் (Socializing) மற்றும் சமூகமயமாக்கல் (Socialization) என்பனவற்றுக்கு இடையிலான நுண்ணிய வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்கள், சமூகத்தின் பிற நபர்களுடன்; இடைவினை புரிவது சமூகமயமாதல் ஆகும். இச்சமூகமயமாதல் ஊடாக சமூகத்தின் நம்பிக்கைகள், விழுமியங்கள், பண்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் சமூகவியல் செயல்முறையே சமூகமயமாக்கல் ஆகும். இதனை வலியுறுத்தும் வகையில் சமூகமயமாக்கல் தொடர்பான வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன.
3. சமூகமயமாக்கல்: இயற்கையினால் அல்லது வளர்ப்பினால் நிகழ்வதா?
விலங்குகள், பிராணிகள் என்பன இயற்கையாகவே தமக்கே உரிய நடத்தைப் பண்புகளை பிறப்பில் இருந்தே கொண்டிருப்பதை நீங்கள் அவதானித்து இருக்கக் கூடும். இத்தைய தன்மை மனிதர்களிடத்திலும் காணப்படுகிறதா? என்ற கேள்விக்கான கருத்துப் பரிமாறல்கள் நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றன. ஒருவர் கொண்டுள்ள நடத்தைப் பண்புகள் பிறப்பின் போதே கடத்தப்படுகின்றன என்ற கருத்தும், ஒருவர் வாழும் சமூகச் சூழலின் செல்வாக்குகளே ஒருவரின் நடத்தைப் பண்புகளை தீர்மானிகின்றன என்ற கருத்துகள் நிலவுகின்றன. இரட்டையர்களாக பிறக்கும் குழந்தைகளை வெவ்வேறு சூழல்களில் வளர்த்த போதிலும், இருவரிடத்திலும் பொதுவான நடத்தைப் பண்புகள் காணப்படுதல், பெற்றோர் கொண்டுள்ள கோப உணர்வு, சாந்தமான நடத்தைகள், உதவும் மனப்பாங்கு, போன்ற குணவியல்புகள் பிள்ளைகளிடத்திலும் பிறப்பில் இருந்தே காணப்படுதல், பிறப்பில் இருந்தே சில பிள்ளைகள் சிறந்த தலைமைத்துவ பண்புகளை வெளிக்காட்டுதல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி பிள்ளைகளின் நடத்தைப் பண்புகள் மரபுவழியாக கடத்தப்படுகின்றன என கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய கருத்துக்களை முற்றாக நிராகரிக்க முடிவதில்லை. அதே நேரத்தில் பிள்ளைகளின் நடத்தைதைப் பண்புகள் சுற்றுச் சூழலின் காரணமாக நிகளும் சமூகமயமாக்கலின் விளைவாகவே நிகழ்கிறது என்ற கருத்தினை சமூகவியலாளர்கள் முன்வைகின்றனர். உண்மை என்னவென்றால், சமூகமயமாக்கலில் இயற்கை மற்றும் வளர்ப்பு இரண்டும் பங்கு வகிக்கின்றன. ஒருவரின் ஆளுமைப் பண்புகள் மற்றும் மனநலக் கோளாறுகள் போன்ற நடத்தைகளில் மரபணுக்களின் செல்வாக்குகள் உள்ளன. அதேவேளை, ஒருவரின் நடத்தை மற்றும் அணுகுமுறைகளை வடிவமைப்பதில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகமயமாக்கல் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.
4. சுயமும் சமூகமயமாக்கலும்
சமூகமயமாக்கல் – ஒருவரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை நிகழும் ஒரு வாழ்நாள் தொடரான செயன்முறையாகும். நாம் பிறக்கும்போது, மரபணு அமைப்பு மற்றும் உயிரியல் பண்புகளை நாம் கொண்டிருந்த போதிலும், மனிதர்களாக நாம் யார் என்பது சமூக தொடர்பு மூலமே உருவாகிறது. நான் (I-Feeling) என்ற உணர்வில் இருந்து நாம் (We-Feeling) என்ற உணர்வுகளை பெறுவற்கு சமூகமயமாக்கல் உதவுகின்றது. அதாவது ஒருவர் தனது சுயத்தை கட்டியெழுப்புவதற்கு சமூகமயமாக்கல் உதவுகின்றது எனலாம். இதற்கு பல்வேறு சமூக நிறுவனங்கள் உதவுகின்றன. ஒருவர் தனது சுயம் என்பதனை பல்வேறு கால கட்டங்களில் வடிவமைத்து கொண்டு செல்கிறார். சமூகத்தின் இடைவினையின் ஊடாக ஒருவரின் “சுயம்”கட்டியெழுப்பட்டு அது காலப்போக்கில் மாற்றமடைந்து வளர்ந்து செல்வதாக இருக்கும். உளவியல் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் உள்ள அறிஞர்கள், சுயத்தின் விருத்தி செயன்முறையை விளக்கி உள்ளனர். அதாவது, அந்த "சுயம்" எவ்வாறு சமூகமயமாக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான விளக்கங்களை தந்துள்ளனர்.
5. சிக்மண்ட் பிராய்டின் உளப்பகுப்பு கோட்பாடு மற்றும் சமூகமயமாக்கல்
சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud 1856-1939) மக்கள் சுயம் எனும் உணர்வை எவ்வாறு விருத்தி செய்து கொள்கிறார்கள் என்பது பற்றிய கோட்பாட்டை முன்வைத்த மிகவும் செல்வாக்கு மிக்க நவீன உளவியலாளராவார் . சிக்மண்ட் பிராய்டின் ஆளுமை மற்றும் வளர்ச்சி பற்றிய உளப்பகுப்புக் கோட்பாடு சமூகமயமாக்கல் பற்றிய புரிதலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பிராய்டின் கூற்றுப்படி, சமூகமயமாக்கல் என்பது உள் மோதல்களைத் தீர்ப்பதற்கும் சுய உணர்வை அடைவதற்கும் உரிய செயன்முறையாக விளங்குகிறது. ஒருவரின் ஆளுமை மற்றும் பாலியல் வளர்ச்சி ஆகியவை நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்று சிக்மண்ட் பிராய்ட், நம்பினார், மேலும் அவர் மனிதனின் முதிர்ச்சி செயன்முறையை பல்வேறு உள-பாலியல் (psychosexual stages) நிலைகளாகப் பிரித்தார்: வாய்நிலை (Oral phase), குத, நிலை (Anal phase), பாலியலுறுப்பு நிலை (Phallic phase), மறைநிலை (Latency phase) மற்றும் பிறப்புறுப்பு (Genital Phase) என்பனவே இவரது உள-பாலியல் நிலைகளாக காணப்பட்டன. இந்நிலைகளினூடாக ஒருவரது முதிர்ச்சிநிலையினை அடையப்பெறுவதாகக் கருதினார்.
பிராய்டின் கூற்றுப்படி, வளர்ச்சியின் முதல் கட்டம் வாய்வழி நிலை ஆகும், இதன் போது குழந்தைகள் ஊட்டச்சத்துக்காக தங்கள் பராமரிப்பாளர்களை நம்பவும் அவர்களில் தங்கி இருக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். இரண்டாவது நிலை குத நிலை ஆகும், இதன் போது குழந்தைகள் தங்கள் உடல் செயற்பாடுகளை கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்கிறார்கள். மூன்றாவது நிலை பாலியலுறுப்பு நிலை. இதன் போது குழந்தைகள் தங்கள் சொந்த பாலியல் அடையாளத்தை உருவாக்குகிறார்கள். நான்காவது நிலை மறை நிலையாகும், இதன் போது குழந்தைகள் கற்றல் மற்றும் அவர்களின் சூழலை ஆராய்வதில் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் ஐந்தாவது நிலை பிறப்புறுப்பு நிலை, இதன் போது இளம் பருவத்தினர் முதிர்ந்த பாலியல் ஆசைகள் மற்றும் உறவுகளை உருவாக்குகிறார்கள். பிராய்டின் கூற்றுப்படி, தனிநபர்கள் இந்த மோதல்களின் மூலம் செயற்படுவதன் காரணமாகவே அவர்களின் ஆளுமைகள், நடத்தைகள் வடிமைக்கப்ப்டுகின்றன எனலாம். இதன் விளைவாக ஏற்படும் சுயம் எனும் உணர்வு மற்றும் சமூகத்தில் அவர்களின் இடத்தைப் பற்றிய உணர்வை வளர்த்துக் கொள்ள உதவுகிறது என விளங்கிக் கொள்ள முடிகிறது.
மேலும், ஒருவரின் ஆளுமை மற்றும் நடத்தைகளை விபரிக்க மனித மனத்தினை பின்வரும் மூன்று பகுதிகளாக பிரித்து அவற்றின் செயற்பாடுகளை விபரித்தார்.
இட்- உணர்வு உந்தும் இயல்பு (id)
அகம்/நான் என்னும் முனைப்பு (Ego)
ஆதியகம்/அதியுயர் மனக் கூறு (Super Ego)
பிறக்கும்போதே இருக்கும் மனிதன் கொண்டுள்ள உணர்வுகள் இட் எனும் மனமாக சிக்மண்ட் பிராய்ட் கருதினார். இட் (உணர்வு உந்தும் இயல்பு), நமது பழமையான, உள்ளுணர்வு ஆசைகள் மற்றும் தூண்டுதல்களின் அடிப்படை மூலமாக விளங்குகிறது. மனிதரில் ஏற்படும் சகல விதமான பசி, பாலுணர்வு போன்ற ஆசைகள், உணர்வுகள் என்பவற்றிற்குக் காரணம் இந்த உணர்வு உந்தும் இயல்புதான். இவ்வாறு உருவாகும் உணர்வுகளிற்கு வடிகாலொன்றினைத் தேடுவதுதான் இந்த உணர்வு உந்தும் இயல்பினது பிரதான செயற்பாடாகும். உணர்வு உந்தும் இயல்பானது, பாலியல் உணர்வு அல்லது பசி உணர்வு அல்லது வேறெதாவது உணர்வுகள் தோன்றும் பொழுது அதனைத் தீர்ப்பதற்கு தவிக்கின்றது. அது வெளியுலகைப் பற்றியோ வேறெதனைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அதே சமயம் அது மேற்படி உணர்வுகளிற்கு தீர்வினைத் தரக்கூடிய வடிகாலின் உண்மை வடிவினையும், உள்ளத்தே உருவாகும் அது பற்றிய விம்பத்தினையும் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையினையும் கொண்டிருப்பதில்லை. அதனால் தான் பசியால் அழும் குழந்தை கைக்குக் கிடைத்ததை வாயினுள் போட்டு விடுகின்றது. இச்சமயத்தில் தான் மனதின் ஆளுமையினை உருவாக்கும் மற்றொரு இயல்பான 'நான் என்னும் முனைப்பு' (Ego) முக்கியத்துவம் பெறுகின்றது. இது உணர்வு உந்தும் இயல்பினைப் (id) போலல்லாது உலகினைப் பற்றிய யதார்த்த நிலையினைக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றது. ஆனால் 'உணர்வு உந்தும் இயல்போ' இதற்கு மாறாக 'இன்பத்தை அடைதல்' பற்றியே கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. இந்த 'நான் என்னும் முனைப்பே' 'உணர்வு உந்தும் இயல்பினால்' உருவான ஆசைகள், அபிலாஷைகள் போன்ற உணர்வுகளிற்குத் தீர்வினை வடிகாலினைக் கூறுகின்றது. உண்மையில் 'இந்த நான் என்னும் முனைப்பு' வழிமுறைகளைத் தான் கூறுகின்றதேயொழிய அம்முறை சரியா அல்லது தவறா அல்லது நன்மை பயக்குமா தீமையினை ஏற்படுத்துமா என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையற்றதாகவே இருக்கின்றது. இத்தகையதொரு நிலையில் தான் மனம் செயற்படும் முறைகளில் மூன்றாவதான 'அதியுயர் மனக் கூறு' (Super Ego) முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்குகின்றது. குழந்தைப் பருவத்தின் பிற்பகுதியில் உருவாகும் சூப்பர் ஈகோ (அதியுயர் மனக் கூறு) நமது தார்மீக மற்றும் நெறிமுறை தரங்களின் ஆதாரமாக விளங்குகிறது. இட் மற்றும் சூப்பர் ஈகோ இடையே மத்தியஸ்தம் செய்யும் ஈகோ(நான் என்னும் முனைப்பு), மனதின் பகுத்தறிவு, முடிவெடுக்கும் பகுதியாக உள்ளது. இந்த அடிப்படையில், சமூகமயமாக்கல் என்பது குழந்தையின் இட் எனும் உணர்வு உந்தும் இயல்பினால் ஏற்படும் தூண்டுதல்களை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளாக மாற்றும் செயல்முறை என்று பிராய்ட் நம்பினார். இந்த செயல்முறை எப்போதும் எளிதானது அல்ல என்றும், தனிநபர்கள் தங்கள் ஆசைகள் மற்றும் அவர்களின் தார்மீகதரங்களுக்கு இடையே உள்ள உள் மோதல்களுடன் போராடலாம் என்றும் அவர் வாதிட்டார். சமூகமயமாக்கல் ஒரு வாழ்நாள் செயல்முறை என்றும், தனிநபர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த உள் மோதல்களுடன் தொடர்ந்து போராடலாம் என்றும் அவர் முன்மொழிந்தார். ஒட்டுமொத்தமாக, பிராய்டின் கோட்பாடு உள் மனதின் முக்கியத்துவத்தையும் சமூகமயமாக்கலுக்கான அதன் முரண்பாடுகளையும் எடுத்துக்காட்டுகிறது. இவரின் கோட்பாட்டு விளக்கங்களின் படி, சமூகமயமாக்கல் என்பது ஒரு எளிய செயல்முறை அல்ல, ஆனால் அதை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் கடினமாக இருக்கலாம் என்று கருதலாம்.
6. ஜீன் பியாஜேயின் அறிகைப்புலவிருத்திக் கோட்பாடும் சமூகமயமாக்கலும்
ஜீன் பியாஜே ஒரு சுவிஸலாந்து நர்ட்டு உளவியலாளர் ஆவார், அவர் அறிகைப்புலவிருத்திக் கோட்பாட்டை உருவாக்கினார், இது சமூகமயமாக்கல் பற்றிய புரிதலில் எத்தகைய தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பது நோக்குவோம். ஜீன் பியாஜேயின் படி பிள்ளையானது பலவேறு அறிகைப்புல விருத்திக் கட்டங்களின் ஊடாக தன்னை தகவமைத்துக் கொள்கிறது. இது பிள்ளையின் சமூகமயமாக்கல் செயன்முறையில் குறிப்பிடத்தக்க செல்வாக்குகளை கொண்டுள்ளன. ஜீன் பியாஜேயின் அறிகைப்புலவிருத்திக் கோட்பாடு சமூகமயமாக்கலில் அறிவாற்றல் விருத்தியின் பங்கை வலியுறுத்துவதனைக் காணலாம். குழந்தைகளின் அறிவாற்றல் திறன்கள் மற்றும் உலகத்தைப் பற்றிய புரிதல் அவர்கள் வளரும்போது மாறுகிறது, மேலும் இந்த மாற்றங்கள் அவர்களின் நடத்தைகளை வடிவமைக்கின்றன. அறிவாற்றல் விருத்தியில் சமூக தொடர்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, குழந்தைகள் மற்றவர்களிடமிருந்தும் மற்றும் அவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்கிறார்கள். ஜீன் பியாஜேயின் அறிகைவிருத்தி கோட்பாட்டின் படி, பிள்ளைகள் தமது அறிகைத் திறன்களை பின்வரும் நான்கு கட்டங்களின் ஊடாக விருத்தி செய்து கொள்கிறது:
புலனியக்கப்பருவம் (பிறப்பு முதல் இரண்டு வயது வரை)
தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவம் (இரண்டு வயது முதல் ஏழு வயது வரை)
தூல சிந்தனைப் பருவம் (ஏழு வயது முதல் பதினொரு வயது வரை)
நியம சிந்தனைப் பருவம் (பதினொரு வயது வயது முதல் பதினைந்து வயது வரை)
புலனியக்கப்பருவ கட்டத்தில், குழந்தைகள் தங்கள் புலன்கள் மற்றும் இயக்கத் திறன்கள் மூலம் உலகத்தைப் பற்றிய அடிப்படை புரிதலை வளர்த்துக் கொள்கிறார்கள். பார்ப்பது, தொடுவது, பிடிப்பது போன்ற செயல்களின் மூலம் பொருள்கள் மற்றும் அவற்றின் பண்புகளைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவத்தில், குழந்தைகள் குறியீட்டு சிந்தனை மற்றும் மொழியை வளர்க்கத் தொடங்குகின்றனர். பொருள்களைப் பிரதிநிதித்துவப்படுத்த சொற்களைப் பயன்படுத்துவது போன்ற பொருள்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றி அவர்கள் குறியீடாகச் சிந்திக்கத தலைப்படுகின்றனர். இப்பருவத்திலேயே, அவர்கள் பாதுகாப்பு என்ற கருத்தையும் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள், தூல சிந்தனைப் பருவத்தில், குழந்தைகள் தர்க்கரீதியாகவும் முறையாகவும் சிந்திக்கும் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் கணித செயற்பாடுகளைப் புரிந்துகொண்டு பயன்படுத்த கூடியவர்களாகவும் மற்றும் ஒரே நேரத்தில் பல மாறிகளைப் பற்றி சிந்திக்க கூடியவர்களாகவும் மாறுகின்றனர். நியம சிந்தனைப் பருவத்தில், குழந்தைகள் சுருக்கமாகவும் அனுமானமாகவும் சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் தர்க்கரீதியான காரணங்களைப் பயன்படுத்துபவர்களாகவும் மற்றும் கருதுகோள்களை உருவாக்கக் கூடியவர்களாகவும் மாறுகின்றனர். ஒழுக்க மற்றும் விழுமிய கொள்கைகள் போன்ற சிக்கலான விடயங்களைப் பற்றியும் பற்றியும் அவர்கள் சிந்திக்க்கும் திறன்களைப் பெற்றுக் கொள்ளக்டியவர்களாக இப்பருவத்திலேயே விளங்குகின்றனர். பியாஜேயின் கோட்பாட்டின்படி, சமூகமயமாக்கல் என்பது அறிவாற்றல் வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சமாகும். ஏனெனில் இது குழந்தைகள், மேற்கூறிய பருவங்களின் சிந்தனை விருத்தியின் ஊடாக தங்கள் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் கருத்துகள் மற்றும் நியமங்களைக் கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கிறது. அறிவாற்றல் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் சமூகமயமாக்கல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதன் மூலமும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தைகள் மற்றும் செயல்களைக் கவனித்து பின்பற்றுவதன் மூலமும் கற்றுக்கொள்கிறார்கள்.
7. எரிக் எரிக்சனின் உளவியல் சமூக வளர்ச்சியின் கோட்பாடும் சமூகமயமாக்கலும்
எரிக்சன் படிநிலைக் கோட்பாடு, தனி நபரின் உயிரியல் வலிமை மற்றும் சமூக கலாச்சார வலிமை ஏற்பாட்டுச் செயல்பாடாக எட்டு வாழ்க்கைப் படிநிலைகள் மூலம் முன்னெடுத்து அந்நபரின் முன்னேற்றம் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு படிநிலையும் இந்த இரண்டு முரண்பட்ட வலிமைகளின் ஒரு உளவியல் சமூக நெருக்கடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு படிநிலையிலும், மனிதன் தாக்குப்பிடித்து, அதில் முதிர்ச்சியடைந்து புதிய சவால்களை எதிர்நோக்க வேண்டும். ஒவ்வொரு படிநிலையும் முன்னைய படிநிலையின் வெற்றிகரமான நிறைவில்தான் கட்டப்படுகிறது. வெற்றிகரமான நிறைவேறாத படிநிலைகளின் சவால்கள் எதிர்காலத்தில் பிரச்சனைகளாக மீண்டும் தோன்ற வாய்ப்புள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், ஒரு படிநிலையின் தேர்ச்சியானது அடுத்த படிநிலைக்கு முன்னேற தேவைப்படுவதில்லை. எரிக்சனின் கூற்றுப்படி, முதல் நிலை நம்பிக்கை மற்றும் அவநம்பிக்கையின் நிலை ஆகும், இதன் போது குழந்தைகள் தங்கள் பராமரிப்பாளர்களை நம்ப அல்லது அவநம்பிக்கை கொள்ளக் கற்றுக்கொள்கிறார்கள். இரண்டாவது கட்டம் தன்னாட்சிக்கு எதிராக அவமானம் மற்றும் சந்தேகம் ஆகும், இதன் போது குழந்தைகள் தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் தங்கள் சொந்த செயல்களைக் கட்டுப்படுத்தவும் கற்றுக்கொள்கிறார்கள். மூன்றாம் நிலை முன்முயற்சி மற்றும் குற்ற உணர்ச்சியின் கட்டமாகும், இதன் போது குழந்தைகள் தங்கள் சொந்த செயல்களைத் தொடங்கவும் திட்டமிடவும் கற்றுக்கொள்கிறார்கள். நான்காவது கட்டமானது தொழில்துறைக்கு எதிராக தாழ்வு மனப்பான்மையின் கட்டமாகும், இதன் போது குழந்தைகள் தங்கள் சாதனைகளில் பெருமை கொள்ள கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அவர்களின் திறன்களில் திறமையானவர்களாக உணருகிறார்கள். ஐந்தாவது நிலை என்பது அடையாளம் மற்றும் பாத்திரக் குழப்பம் ஆகியவற்றின் கட்டமாகும், இதன் போது இளம் பருவத்தினர் சுய உணர்வு மற்றும் சமூகத்தில் தங்கள் இடத்தைப் பெறுகிறார்கள். ஆறாவது நிலை என்பது நெருக்கம் மற்றும் தனிமைப்படுத்துதலின் கட்டமாகும், இதன் போது இளைஞர்கள் நெருங்கிய உறவுகளை உருவாக்க கற்றுக்கொள்கிறார்கள். ஏழாவது நிலை உற்பத்தித்திறன் மற்றும் தேக்க நிலை ஆகும், இதன் போது பெரியவர்கள் உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் எட்டாவது நிலை ஒருமைப்பாடு மற்றும் விரக்தியின் கட்டமாகும், இதன் போது வயதானவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கிறார்கள் மற்றும் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கண்டுபிடிப்பார்கள். எரிக்சனின் கூற்றுப்படி, தனிநபர்கள் இந்த மோதல்களின் மூலம் செயற்படுவதால் சமூகமயமாக்கல் ஏற்படுகிறது மற்றும் சமூகத்தில் சுய உணர்வு மற்றும் அவர்களின் இடத்தை வளர்த்துக் கொள்கிறது.
சிக்மண்ட் பிராய்டின் உளப் பகுப்புக் கோட்பாடு நடத்தை மற்றும் ஆளுமையை வடிவமைப்பதில் நனவிலி மனதின் பங்கின் மீது கவனம் செலுத்துகிறது. நனவு மற்றும் நனவிலி மனதுக்கு இடையிலான மோதல்கள் உளநல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பினார். ஜீன் பியாஜேயின் அறிகைப்புல விருத்திக் கோட்பாடு குழந்தைகளின் சிந்தனை மற்றும் உலகத்தைப் பற்றிய புரிதல் காலப்போக்கில் எவ்வாறு உருவாகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது. குழந்தைகள் தங்கள் அனுபவங்களின் மூலம் உலகத்தைப் பற்றிய அவர்களின் புரிதலை தீவிரமாக உருவாக்குகிறார்கள் என்று அவர் நம்பினார், மேலும் குழந்தைகள் புலனுணர்வு விருத்தியின் நான்கு வெவ்வேறு நிலைகளைக் கடக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்: எரிக் எரிக்சனின் உளவிருத்தி கோட்பாடு, உள-சமூக விருத்திக் கோட்பாடு என்றும் அழைக்கப்படுகிறது, சமூக தொடர்புகள் மற்றும் அனுபவங்கள் எவ்வாறு ஆளுமை மற்றும் நடத்தையை வாழ்நாள் முழுவதும் வடிவமைக்கின்றன என்பதில் கவனம் செலுத்துகிறது. மனிதர்கள் தமது விருத்தியில், எட்டு வெவ்வேறு நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார், ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான உளவியல் நெருக்கடியுடன் ஆரோக்கியமான விருத்தியை வேண்டுவதாக உள்ளன.
8. முடிவுரை
சிக்மண்ட் பிராய்டின் கோட்பாடு ஆழ் மனது மற்றும் உளநல கோளாறுகள் மீது கவனம் செலுத்துகிறது, பியாஜெயின் கோட்பாடு குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது, எரிக்சனின் கோட்பாடு வாழ்நாள் முழுவதும் சமூக மற்றும் உளவியல் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. இக்கோட்பாடுகள் குழந்தைகளின் சமூகமயமாக்கலுடன் வெவ்வேறு வழிகளில் தொடர்புடையவை எனலாம். சிக்மண்ட் பிராய்டின் உள பகுப்பாய்வு கோட்பாட்டின்படி, குழந்தைகளின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் ஆரம்ப ஆண்டுகளில் மற்றவர்களுடனான தொடர்புகள் உள்வாங்கி, அவர்களின் நனவிலி மனதை உருவாக்குகின்றன. இதன் பொருள் குழந்தை பருவத்தில் சமூகமயமாக்கல் குழந்தையின் மனம் மற்றும் நடத்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜீன் பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் சிந்தனை மற்றும் உலகத்தைப் பற்றிய புரிதல் காலப்போக்கில் எவ்வாறு உருவாகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது. குழந்தைகள் தங்கள் அனுபவங்களின் மூலம் உலகத்தைப் பற்றிய அவர்களின் புரிதலை தீவிரமாக உருவாக்குகிறார்கள் என்றும், இந்த செயல்பாட்டில் சமூக தொடர்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் இங்கு நாம் கருதலாம். உதாரணமாக, குழந்தைகள் மற்றவர்களை அவதானிப்பது, பின்பற்றுவது மற்றும் தொடர்புகொள்வதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். எரிக் எரிக்சனின் கோட்பாட்டின் படி, சமூக தொடர்புகள் மற்றும் அனுபவங்கள் எவ்வாறு ஆளுமை மற்றும் நடத்தையை வாழ்நாள் முழுவதும் வடிவமைக்கின்றன என்பதில் கவனம் செலுத்துகிறது. மனித விருத்தியின் எட்டு வெவ்வேறு நிலைகள் ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட உளவியல் நெருக்கடியுடன் ஆரோக்கியமான விருத்தி தொடரும் வகையில் தீர்க்கப்பட வேண்டும். இந்த ஒவ்வொரு கட்டத்திலும் சமூகமயமாக்கல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் குழந்தைகள் தங்கள் கலாச்சாரத்தின் சமூக நியமங்களையும் விழுமியங்களையும் கற்றுக்கொள்கிறார்கள், மேலும் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் அவர்களின் சுயம் மற்றும் அடையாளத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.
இம்மூன்று கோட்பாடுகளும் குழந்தைகளின் நிகழும் சமூகமயமாக்கலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன, ஆனால் அவை வெவ்வேறு கண்ணோட்டங்களில் அணுகுகின்றன: பிராய்ட் நனவிலி மற்றும் மனநல கோளாறுகளின் பங்கை வலியுறுத்துகிறார், பியாஜே அறிகைத்திறன் விருத்தியை வலியுறுத்துகிறார் மற்றும் எரிக்சன் வாழ்நாள் முழுவதும் சமூக மற்றும் உளவியல் வளர்ச்சியை வலியுறுத்துகிறார். சமூகமயமாக்கல் என்பது ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் நிகழும் ஒரு சிக்கலான செயல்முறையாகும், இதன் போது அவர்கள் தங்கள் கலாச்சாரம் அல்லது சமூகத்தில் பொருத்தமானதாகக் கருதப்படும் நியமங்கள், விழுமியங்கள்;, நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளைக் கற்றுக்கொள்கிறார்கள். சமூகமயமாக்கல் எப்படி, ஏன் நிகழ்கிறது என்பதை விளக்க முயற்சிக்கும் பல உளவியல் கோட்பாடுகள் உள்ளன, இதில் பிராய்டின் உளப் பகுப்பு கோட்பாடு, ஜீன் பியாஜேயின் அறிகைதிறன் விருத்திக் கோட்பாடு, எரிக்சனின் உளவியல் சமூக வளர்ச்சிக் கோட்பாடு என்பன சிலவாகும். இவற்றின் விளக்கங்களின் அடிப்படையில் மனிதன் தனது சமூகமயமாக்கல் திறன்களை எவ்வாறு விருத்தி செய்து கொள்கிறான் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
குறிப்பு: இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடத்தின் வருடாந்த சஞ்சிகையான "பார்வை - 11" (2023) இல் வெளிவந்த கட்டுரையாகும்