புத்தரின் வருகை இலங்கை மற்றும் தென்இந்தியா
முனைவர் பிக்கு போதிபால அவர்கள் புத்த வேட்டிலும் மேலும் பல இடங்களிலும் அடிக்கடி அவர் கூறியது. காஞ்சிவரம் மற்றும் புத்தவேடு ஆகிய இவ்விரு இடங்களுக்கு பகவன் புத்தர் வந்து தங்கிருந்து பின் இலங்கைக்கு சென்றார் என்று. ஆனால் அவர் மொழியாக்கம் செய்த தீப வம்சம் என்ற நூலில் அதற்கான எந்த குறிப்பும் இல்லை.
இலங்கை வரலாற்றை கூறும் முதல் பாலி நூல் தீபவம்சம் என்பதால் மகாவம்சம் தீபவம்சத்தில் பகவன் புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை புரிந்ததாக குறிப்பிடுவதை அப்படியே வழிமொழிகிறது. மூன்று முறையும் பகவன் புத்தர் வான்வழியாக இலங்கை சென்றதாக குறிப்பிடுகிறது.
முதல் வருகை - புத்த நிலையை அடைந்த ஒன்பதாவது மாதம் இரண்டாவது வருகை -புத்த நிலையை அடைந்த ஐந்தாவது ஆண்டு மூன்றாவது வருகை -புத்த நிலையை அடைந்த எட்டாவது ஆண்டு.
தீபவம்சம் நூல் குறிப்பு
01. நிப்பான பேற்றை அடைந்த புத்தர் ஞானக் கண்களால் இலங்கையை கண்டார் (தீப வம்சம் இயல் ஒன்று செய்யுள் 45).
02. புத்தர் பெருமான் தனது இருத்தி (சித்தி) ஆற்றலால் வானில் மேலேழும்பி ஜம்பு தீபம் என்ற இந்திய நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தார் (தீப வம்சம் இயல் ஒன்று செய்யுள் 49).
ஆனால் பெருபான்மையான பௌத்த அறிஞர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் இக்கருத்தை ஏற்கவில்லை. காரணம்
01. பகவன் புத்தர் இலங்கைக்கு மூன்று முறை சென்றதாக தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ஆகிய இலங்கை நூல்கள் மட்டுமே கூறுகின்றன. தீபவம்சம் மற்றும் மகாவம்சம்களை தவிர வேறு சான்றுகள் ஏதுமில்லை.
02. பகவன் புத்தர் வெறும் காலோடு பல மைல்கள் நடந்தே சென்று இருக்கிறார். மாட்டு வண்டியை கூட பயன்படுத்தியதில்லை. (அறிவர் அண்ணல் அம்பேத்கர்)
தென்இந்தியா / காஞ்சிவரம்
01. கி பி 642ல் பல்லவர் காலத்தில் தமிழகம் வந்த சீன அறிஞர் யுவான் சுவாங் தாதகர் (புத்தர்) காஞ்சிக்கு அடிக்கடி வந்ததாக குறிப்பிடுகிறார். காஞ்சியில் 100 அடி உயரம் கொண்ட பௌத்த இஸ்துபம் இருப்பதை குறிப்பிடுகிறார். அசோகர் பகவன் புத்தர் சென்ற இடங்களில் எல்லாம் இஸ்துபங்களை நிறுவியதால், பகவன் புத்தர் காஞ்சி வருகை புரிந்ததாக குறிப்பு எழுதியிருக்கலாம். ஏனெனில் பகவன் புத்தர் காஞ்சிபுரத்திற்கு வந்ததற்கு யுவாங் சுவாங் குறிப்பை தவிர வேறு சான்றுகள் ஏதும் இல்லை. ஆனால் தொல்லியல் துறையினால் இஸ்துபம் கண்டறியப்பட்டது (பார்க்க காமாட்சியம்மன் கோவில் கட்டுரை)
02. பகவன் புத்தர் காஞ்சிக்கு வந்ததற்கு எந்த மொழி நூல்களிலும் சான்றுகள் இல்லை. 01. திரிபீடகம் 02. பாலி இலக்கிய நூல்கள் 03. தமிழ் இலக்கிய நூல்கள், 04. வடமொழி நூல்கள் 05. சிங்கள நூல்கள்.
03. பகவன் புத்தர் வட இந்தியா முழுவதும் சென்றிருக்கிறார். ஆனால் தென்னிந்தியாவிற்கு வந்ததில்லை .என்பதே பலரின் கருத்து
04. D.C. அகீர் அவர்களால் பகவான் புத்தர் தென்னிந்தியாவிற்கு வந்ததற்கு ஆதாரம் ஏதும் அளிக்க முடியவில்லை. ஆனால் பகவன் புத்தர் அவர் வாழ்நாளிலேயே அவரின் போதனைகள் தென்னிந்தியாவிலுள்ள ஆந்திரா வரை வந்து சேர்ந்து இருக்கிறது என்பதற்க்கு ஆதாரம் ஒன்றை அளிக்கிறார்.
ஆந்திரவை சேர்ந்த பாவரி (Bavari) மற்றும் அவரை பின்பற்றும் 16 நபர்களை பற்றிய குறிப்புகள் திரிபிடகத்தில் காணப்படுகிறது. பாவரி இவர் ஒரு பிராமணர் அவருக்கும் பிறிதொரு பிரமணருக்கும் ஒரு கருத்து வேறுபாடு வருகிறது எனவே தம் சீடர்களை பகவன் புத்தரை சந்தித்து வரும் படி அனுப்பிவைக்கிறார். அவர்களும் பகவன் புத்தரை சந்திக்கின்றனர். குறிப்பு The Sutta Nipata - Sutta of Parayanavagga.(தென்னிந்தியாவில் பௌத்தம் பக்கம் 19)
மணிமேகலையின் வான்வழி
மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றதாகக் மணிமேகலைக் காவியம் கூறுகிறது. ஆகாய வழியே மணிமேகலை பறந்து சென்ற இடங்கள்.
01. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மணிபல்லவத் தீவுக்கு (யாழ்பாணத்துக்கு வடக்கே உள்ள தீவு)
02. சாவக நாட்டுக்கு (கிழக்கந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஜாவா தீவு) அங்கிருந்து மணிபல்லவத்துக்கு
03. மணிபல்லவத்திருந்து சேரநாட்டு வஞ்சிமாநகரத்துக்கு
ஆகவே மணிமேகலை உண்மையில் இருந்தவள் அல்லள் என்றும் அவள் கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்றும் கருதத் தோன்றுகிறது. மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றாள் என்பது வெறுங்கற்பனைதான். ஏன் இப்படிக் கற்பித்தார் என்பதனை விளக்குகிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி.
மணிமேகலைக் காவியம் சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல். சங்ககாலத்தில் தமிழ்மகளிர் கடலில் பிராயாணம் செய்யக்கூடாது என்னும் மரபு இருந்தது. அந்த மரபை அக்காலத்துத் தமிழரும் தமிழ்ப்புலவர்களும் கடைப் பிடித்துக் கையாண்டார்கள். அவ்வாறே இலக்கணமும் எழுதி வைத்தார்கள். முந்நீர் வழக்கம் மகடூ உவோடில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது.
ஆனால், பௌத்த மதத்துப் பெண்மணிகளுக்கு இந்தத் தடை இல்லை. பௌத்த மதத்தைச் சேர்ந்த மணிமேகலை, கடல் கடந்த நாடுகளுக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தபடியால் அவள் கடலில் கப்பற்பிராயணம் செய்தாள். கடல் யாத்திரை செய்தது பௌத்தமதத்தவருக்கு குற்றம் அன்று. ஆனால், இந்த வரலாற்றைக் காவியமாக எழுதிய சாத்தனார், பௌத்தருக்காக மட்டும் காவியம் எழுதவில்லை. பௌத்தரல்லாத தமிழருக்காகவும் மணிமேகலை காவியத்தை எழுதினார். ஆனால், பௌத்தரல்லாத தமிழருக்கு மகளிர் கடற்பிரயாணம் செய்வது உடன்பாடன்று. அஃது அவர்களுடைய மரபுக்கும் பண்பாட்டுக்கும் மாறுபட்டது. ஆகவே சங்கப் புலவரான சாத்தனார் தம்முடைய காவியத்தில் கற்பனையைப் புகுத்த வேண்டியவரானார்.
மணிமேகலை கடற்பிரயாணஞ் செய்தாள் என்னும் உண்மையைக் கூறினால் அக்காலத்துத் தமிழுலகம் இந்த நூலை ஏற்காது. ஆகவே அவர்களும் ஏற்கத்தக்க விதத்தில் மணிமேகலை ஆகாயவழியாக அயல் நாடுகளுக்குப் பறந்து சென்றாள் என்று கற்பனை செய்து காவியத்தை முடித்தார்.
அந்தக் காலத்துத் தமிழரின் பழக்கவழக்கப் பண்பாடுகளுக்கு முரண்படாமல் கற்பனை செய்தபடியால் மணிமேகலைக் காவியத்தை அக்காலத்துத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த உண்மையை ஆராய்ந்தவர் மணிமேகலையைக் கற்பனை உருவம் என்று கருதமாட்டார்கள். மணிமேகலை உண்மையில் வாழ்ந்து இருந்த ஒரு பெண்மணி என்றே கொள்வார்கள்.