Type Here to Get Search Results !

ஜெர்மனி செருமன் வரலாறு என்ன?

 ஜெர்மனி செருமன்  வரலாறு என்ன?


ஜெர்மனி [Germany]அல்லது செருமன் கூட்டாட்சிக் குடியரசு (ஜெர்மானியம்: Bundesrepublik Deutschland  என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆத்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்சு, லக்சம்பேர்க், பெல்சியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. செருமனியின் பரப்பளவு 357,021 கிமீ².


82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது[2].


செருமனி கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-செருமனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-செருமனிக்கு பான் (Bonn) தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-செருமனியில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. 1989 இல் அச்சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட செருமனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது.


செருமனி இப்போது 16 மாநிலங்களை (Länder) கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.


செருமானியா என அறியப்பட்ட பிரதேசத்தில் கி.பி. 100க்கு முன்னரே செருமானிக் மக்கள் குடியேறியமைக்கு ஆதாரங்கள் உள்ளன. குடிப்பெயர்வுக் காலப்பகுதியில், செருமானிக் குழுக்கள் மேலும் தென்பகுதிக்குப் பரவியதோடு ஐரோப்பாவெங்கும் வெற்றிகரமான ராச்சியங்களை ஏற்படுத்தினர். 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், செருமனிப் பகுதிகள் புனித உரோமப் பேரரசின் மையப்பகுதிகளாக இருந்தன.


 16ம் நூற்றாண்டில் வடக்கு செருமன் பகுதிகள் புரட்டசுதாந்து சீர்திருத்தத்தின் மத்திய நிலையமாக விளங்கியது. எனினும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் உரோமன் கத்தோலிக்கப் பகுதிகளாகவே இருந்தன. இதன் காரணமாக முப்பதாண்டுப் போர் ஏற்பட்டதோடு, கத்தோலிக்க்- புரட்டசுதாந்து பிரிவினையின் ஆரம்பமாகவும் அமைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, செருமானிய சமுதாயத்தின் பண்பைத் தீர்மானிப்பதாகவும் இது இருந்து வருகிறது.


 நெப்போலியப் போர்களின் போது, செருமானியப் பகுதிகளில் நாட்டுப் பற்று எழுச்சிபெற்றது. இதன் மூலம்,1871இல், புருசியாவைத் தலைமையாகக் கொண்டு, பெரும்பாலான செருமானியப் பகுதிகள் செருமன் பேரரசாக எழுச்சி பெற்றன.


1918-1919 செருமானியப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரில் சரணடைவு என்பவற்றைத் தொடர்ந்து, 1918 இல், நாடாளுமன்ற வைமார் குடியரசு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அதன் சில பகுதிகள் வெர்செயில்சு உடன்படிக்கையின்படி பிரித்தெடுக்கப்பட்டன. இக்காலப்பகுதியில், விஞ்ஞான மற்றும் கலைத் துறைகளில், பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக 1933 இல் மூன்றாவது முடியாட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பின்பு நாட்டில் நாசிசக் கொள்கைகள் பரவின. இதனால் இரண்டாம் உலகப்போரும் மூண்டது. 1945 இன் பின், செருமனி நேச நாடுகளால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவை கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனி என அழைக்கப்பட்டன. 1990 இல் செருமனி மீண்டும் ஒன்றிணைந்தது.


1957ல் ஐரோப்பிய சமூகத்தை உருவாக்குவதில் செருமனியும் பங்கு கொண்டது. இது 1993ல், ஐரோப்பிய ஒன்றியமாக மாறியது. இது சென்சென் பகுதியின் ஒரு பகுதியாகவும், 1999இலிருந்து, யூரோ பகுதியின் ஒரு உறுப்பினராகவும் ஆனது. செருமனி, ஐக்கிய நாடுகள், நேட்டோ, G8, G20, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் ஐரோப்பியச் சம்மேளனம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான, 2011-2012 காலப்பகுதிக்கான தற்காலிக உறுப்பினராகவும் உள்ளது.


செருமனி, உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் நான்காவது பாரிய பொருளாதார நாடாகவும், கொள்வனவுச் சக்தி அடிப்படையில், ஐந்தாம் இடத்திலும் உள்ளது. செருமனி உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இது ஒரு உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடாகவும், சமூகப் பாதுகாப்புடைய நாடாகவும் காணப்படுகிறது. செருமனி உலகின் மிகப் பழைமை வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு முறைமையையும் கொண்டுள்ளது. செருமனியில் பல சிறந்த தத்துவஞானிகள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், இதன் கலாச்சார மற்றும் அரசியல் வரலாறும் சிறப்பானதாகும்.


சொற்பிறப்பியல்

ஜெர்மனி என்ற ஆங்கிலச் சொல் இலத்தீனிய ஜெர்மானியா என்பதிலிருந்து வந்துள்ளது; ரைன் ஆற்றுக்கு கிழக்கில் வசித்த மக்களைக் குறிப்பிட யூலியசு சீசர் இச்சொல்லைப் பயன்படுத்தினார். குறிப்பாக, கால் இனத்தவர்கள் , இவர்களை ஜெர்மனி என அழைத்து வந்தனர். இதிலிருந்தே உரோமானியர்கள் ரைன் ஆற்றுக்கு கிழக்கேயும் தானூப் ஆற்றுக்கு வடக்கேயும் வாழ்ந்த மக்களைக் குறிக்க ஜெர்மனி என்ற பெயரைப் பயன்படுத்த துவங்கினர்.


இடாய்ச்சு சொல்லான இடாய்ச்சுலாந்து, *தியொடொ என்ற தொன்மைய செருமானிய வேரிலிருந்து வந்ததாகும்; இதன் பொருள் "மக்கள், இனம், நாடு" என்பதாக அமையும். இது ஜெர்மானிய மக்களின் பொதுமொழியைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட பரந்த சொல்லாக இருந்தது. இது குறிப்பாக செருமனி மொழியையோ மக்களையோ குறிப்பிடவில்லை. முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டபோது (பிந்தைய 8-ஆம் நூற்றாண்டு) இது மெர்சியா இராச்சியத்தின் மொழியைக் குறிப்பதாயிருந்தது; உண்மையில் அந்த மொழி பண்டைய ஆங்கிலம் ஆகும்.


பிற்பாடு பல்வேறு இனங்களும் தங்களுக்கான தனி அடையாளத்தை நிலைநிறுத்த முற்பட்டனர்; பிரித்தானியத் தீவிலிருந்தவர்கள் ஆங்கிலோ-சாக்சன் மக்கள், ஆங்கில்கள் பின்னர் ஆங்கிலேயர் எனப்பட்டனர். இவர்கள் தொன்மைய செருமனியின் அறிஞர்களால் "பவேரியர்கள்", "சாக்சன்கள்" அல்லது "இசுவாபியர்கள் " எனப் பிரித்தறியப்பட்டனர். இச்சொற்கள் பெரும் நிலப்பகுதிகளை ஆண்ட உள்ளக ஆட்சியாளர்களைக் கொண்டு உருவாகின.[9]புனித உரோமைப் பேரரசு உடைபட்டபோது, இத்தகைய தனி அடையாளங்கள் மறைந்து அவரவர் பேச்சுவழக்கில் *தியுடொ என்ற சொல் அடிப்படையில் இதுவரை பெயரிடப்படாத செருமானிய இனக்குழுக்கள் அழைக்கப்பட்டன. இவ்வாறு 13-ம் நூற்றாண்டில் தியுடிக்சுலாந்து (டாய்ச்சுலாந்து, செருமனி) புழக்கத்திற்கு வந்தது.

வரலாற்றுக்கு முந்தையக் காலம்

1907இல் கண்டெடுக்கப்பட்ட மாயுவர் 1 தாடையெலும்பு செருமனியில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்மையான மக்கள் வாழ்ந்துள்ளனர் எனக் காட்டுகிறது. உலகில் மிகவும் பழைமையான முழுமையான வேட்டைக்கருவிகள் செருமனியில் இசோனின்கென் என்னுமிடத்தில் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டன; 380,000 ஆண்டுகள் பழைமையான 6-7.5 அடி நீளமுள்ள மூன்று மர எறிவேல்கள் கிடைத்தன.


 செருமனியில் உள்ள நியாண்டர் பள்ளத்தாக்கில் (பள்ளத்தாக்கு செருமானிய மொழியில் தால் எனப்படும்) முதல்மனித தொல்லுயிர் எச்சம் கிடைக்கப்பெற்றது; 1856இல் இது புதிய மனித இனமாக நியண்டர்தால் மனிதன் என அங்கீகரிக்கப்பட்டது. 


இந்த நியாண்டர்தால் தொல்லுயிர் எச்சங்கள் 40,000 ஆண்டுகள் பழைமையானதாக மதிப்பிடப்படுகின்றது. இதேயளவு பழைமையான சான்றுகள் உல்ம் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சுவாபியன் யுரா குகைகளிலும் கிடைத்துள்ளன; 42,000 ஆண்டுகள் பழைமையான பறவையின் எலும்பு, பெரும் தந்தங்களிலான புல்லாங்குழல்கள் கண்டறியப்பட்டுள்ளன; இவையே உலகின் மிகவும் தொன்மையான இசைக்கருவிகளாகும். 40,000 ஆண்டுக்கு முந்தைய பனிக்கால சிற்பமான சிங்க மனிதன் உலகின் முதல் கலைவடிவமாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad