Type Here to Get Search Results !

கனடா வரலாறு - Canada Gk

 கனடா



கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.

கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.


கனடாவின் வரலாறு

கனடா 1867 ஆண்டே அரசியல் சட்டமைப்பு கொண்ட ஒரு நவீன கூட்டாட்சி நாடாக உருவானது. ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பழங்குடிமக்கள் கனடா நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர். இன்று கனடா 320 இலட்சம் பல்லின மக்களைக் கொண்ட வளர்ச்சியடைந்த இரண்டாவது பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு ஆகும்.

பழங்குடிகள்

கனடிய பழங்குடிமக்கள் அரசியல் நோக்கில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக இனங்காணப்படுகின்றனர்: 'இன்டியன்ஸ்', இனுவிட் (Inuit), மெயிற்ரீஸ் (Metis). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இனம், மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் நோக்கில் பலவகைப்படுவார்கள்.


'இண்டியன்ஸ்' என்ற சொல் இழிவானதாக கனடிய பழங்குடிகள் கருதியதால், அவர்கள் தங்களை முதற் குடிகள் (First Nations) என்று அழைத்தார்கள். இவர்கள் கனடிய செவ்விந்தியர்கள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. இம்மக்களின் வாழ்வியல் அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப்பொருத்து வேறுபடுகின்றது. வாழ்ந்த நிலப்பகுதிகளைக்கொண்டு முதற் குடிகளை ஆறாக பிரிக்கலாம். அவை பின்வருமாறு

சமவெளி மக்கள் - (Plains)

இறொக்குவா குடிகள் - Iroquoian Nations

வட வேட்டுவர் - Northern Hunters

வட மேற்கு மக்கள் - Northwest Cost

அல்கோன்கிய குடிகள் - Algonkian Nations

பீடபூமி மக்கள் (Plateau)


பழங்குடிகள் கனடாவின் மிக குளிரான மேற்பகுதிகளில் வாழ்ந்தவர்களே இனுவிட் ஆவார்கள். இவர்களை அழைக்க எஸ்கிமோ என்ற (தற்போது இழிவாகக் கருத்தப்படும்) சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கனடா என்றவுடன் விலங்குத் தோல் உடுப்புடன் பனிக் கட்டியால் கட்டப்பட்ட, மொழுகப்பட்ட இருப்பிடங்களுக்கு பக்கத்தில் நிற்கும் இனுவிட் மக்களைச் சுட்டுவது ஒரு ஊடக மரபு.


ஐரோப்பியர் வரவு

பிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608 ஆம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். 

ஆங்கில குடியேற்றங்கள் நியூ பவுண்ட்லாந்தில் 1610ம் ஆண்டு குடியமர்ந்தனர். ஐரோப்பியரின் வருகை புது நோய்களை வட அமெரிக்காவுக்கு கொண்டுவந்தது. அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்கள் பெரும்பான்மையானோர் அந்த நோய்களுக்கு இரையானார்கள்.


கனேடிய கூட்டரசு உருவாக்கம்

பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் கனேடிய கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.


பல்நாட்டவர் வருகை

பிரெஞ்சு, ஆங்கிலேயக் குடிவரவாளர்களாலும் முதற்குடிமக்களாலும் கனடா உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு தொடருந்துப் பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. 

இதற்காக 1870களில் சீனர்கள் தொடருந்து பாதை கட்டமைபில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். 1885ம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக "Chinese Exclusion Act" 1923ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.


கறுப்பின மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவில் குடியேறினார்கள். தொடக்கத்திலேயே அவர்கள் அடிமைகளாக பிரெஞ்சு மக்களுடன் கனடாவுக்கு வந்தனர். எனினும் 1793 ஆண்டில் மேல் கனடாவில் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது. 

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பல கறுப்பின மக்கள் கனடாவுக்கு விடுதலை தேடி வந்தனர். இவர்கள் வந்த பாதை நிலத்தடி இருப்புப்பாதை (Underground railroad) என அழைக்கப்பட்டது.


1920 ஆண்டளவில் கனடா இன அடிப்படையிலான குடிவரவுக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. இதன் காரணமாக ஐரோப்பியர் தவிர்ந்த ஏனைய இன மக்கள் கனடாவுக்குள் வருவது கடினமாக்கப்பட்டது. இக்கொள்கை 1967ம் ஆண்டு நீக்கப்பட்டது. எனினும், இதற்கமையவே இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பல்வேறு ஐரோப்பிய குடிவரவாளர்களை உள்வாங்கியது. வியட்நாம் போரின்போது அமெரிக்க draft dogers பலரையும் உள்வாங்கியது.


உலகில் கனடா முதன்முதலாக பல்லினப்பண்பாடு கொள்கையை அதிகாரப்பூர்வ கொள்கையாக 1971ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆப்பிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில் கணிசமான தொகையினராக இருந்தார்கள்.


புவியியல்

இட அமைவு

கனடா வட அமெரிக்காவின் தெற்கு 41% வீதத்தைத் தன்னகத்தே கொண்ட உலகின் இரண்டாவது பெரிய பரந்த நாடு ஆகும். வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாந்திக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும் மற்றும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. கிறீன்லாந்து கனடாவின் வட கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. கனடாவின் பரப்பளவு 9,984,670 கிமீ ஆகும். இதில் தரை 9,093,507 கிமீ, நீர் 991,163 கிமி ஆகும். கனடாவின் பரந்த பரப்பளவு காரணமாக அது பல்வேறு விதமான இயற்கையமைப்புகளையும் காலநிலைகளையும் கொண்டது.


இயற்கையமைப்பு

கனடாவில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு தாவர வகைகள் வளர்கின்றன. மேற்குப் பகுதி மலையும் மலை சார்ந்த ஒரு நிலப்பகுதி ஆகும். இங்கு மழைக்காடு போன்ற காலநிலையும் அதே போன்று அடர்த்தியான காடுகளும் காணப்படுகின்றன. பிரெய்ரி தாழ்நிலப்பகுதியில் புல் வெளிகள் உண்டு. அதற்கு மேலே ஊசியிலைக் காட்டுத்தாவரங்களும், அதற்கு மேலே மிகக் குளிர் நிலப்பகுதியில் thundra (low grasses, shurbs, mosses, lichens) வும் காணப்படுகின்றன. தென் ஒன்ராறியோவிலும் கிழக்குப் பகுதிகளிலும் தூந்திரத் தாவரங்கள் (deciduous trees) உண்டு.

காலநிலை

கனடா மத்திய கோட்டுக்கு மிக மேலே இருப்பதால் பெரும்பாலும் கடும் குளிரான காலநிலையை கொண்டது. இடத்துக்கு இடம் சராசரி காலநிலை மாறியமையும். மேற்கு கனடாவில் குளிர்காலத்தில் -15 செல்சியஸ் சராசரி வெப்பநிலையைக் கொண்டிருக்கும்; இது, -40 வரை தாழக்கூடியது.

 வடக்குப் பகுதிகளில் குளிர் மிக அதிகமாகவும், குளிர்காலம் 11 மாதங்கள் வரை நீடிக்கவல்லதாகவும் இருக்கும். தெற்குப் பகுதிகளில் ஏழு மாத காலம் வரை குளிர்காலம் இருக்கும். குளிர்காலத்தில் பனிமழை விழுவதும், இடங்கள் எல்லாம் விறைத்துக் காணப்படுவதும் இங்கு வழமை.


கோடை காலத்தில் கிழக்கிலும் மேற்கிலும் 20 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையையும், இடைப்பட்ட பகுதிகளில் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையையும் கொண்டிருக்கும். விதிவிலக்காக, பசிபிக் பெருங்கடல் கடற்கரை கொண்டிருக்கும் பிரிற்ரிஸ் கொலம்பியா மிதவெப்பக் (temperate) காலநிலையுடன், மழை பெறும் நிலப்பகுதியாகவும் இருக்கின்றது.


பொருளாதாரம்


கனடா ஒரு வளர்ச்சியடைந்த நாடு ஆகும். பொதுவாக ஒரு நடுநிலை பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. திறந்த சந்தை பொருளாதாரத்தை ஏற்றும் அதே வேளை பொருளாதாரத்தை வளப்படுத்துவதில், சமூக நீதியை பேணுவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதும் கனடாவின் அணுகுமுறையாக இருக்கின்றது. திறந்த சந்தையால் வழங்க முடியாத சேவைகளை வழங்குதல், பொதுநலனை பாதுகாத்தல், சமவாய்ப்புச் சூழலைப் பேணல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்ற செயல்பாடுகளில் அரசு முக்கியப் பங்கு வகிக்கின்றது.

போக்குவரத்து


கனடாவின் விரிந்த நிலப்பரப்பு காரணமாக எல்லைக்கு எல்லை அதனை இணைக்கும் ஒரு சிறந்த போக்குவரத்து வழி அதன் இருப்பிற்கு முக்கியமாக அமைகின்றது. மனிதர்களையும் பொருட்களையும் ஏற்றி இறக்கும் வழிமுறைகள் சிறப்பாக அமைவது பொருளாதரத்திற்கு அவசியமாகவும், இதன் காரணமாக, அரசியலில் முக்கிய அம்சமாகவும் கனடாவில் இருக்கின்றது. ஆகையால், சாலைகள், தொடருந்துப் பாதைகள், வான்வழி, கடல்வழி மற்றும் குழாய்வழி போக்குவரத்துக்கள் விரிவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.


கனடாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு


கனேடிய போக்குவரத்து கட்டமைப்பு (Canadian transportation infrastructure) கனடாவின் சாலைகள், தொடருந்துப் பாதைகள், ஆகாய, கடல்வழி மற்றும் குழாய்வழிக் கட்டமைப்பைக் குறிக்கின்றது. கனடாவின் பரந்த பிரதேசம் காரணமாக எல்லைக்கு எல்லை அதனை இணைக்கும் ஒரு சிறந்த போக்குவரத்து மார்க்கம் அதன் இருப்பிற்கு முக்கியமாக அமைகின்றது. மனிதர்களையும் பொருட்களையும் ஏற்றி இறக்கும் வழிமுறைகள் சிறப்பாக அமைவது பொருளாதரத்திற்கு அவசியமாகவும், அரசியலில் முக்கிய அம்சமாகவும் இருக்கின்றது.

நெடுஞ்சாலைகள்

டிரான்ஸ் கனடா நெடுஞ்சாலை

தொடரூந்து

கனடா பசுபிக் தொடருந்துப் பாதை

கனடா தேசிய தொடருந்துப் பாதை

கடல்வழி

செயின்ற் லோரன்ஸ் கடல்வழி


பொருள் உற்பத்தி

தென் ஒன்ராறியோவில் வளர்ச்சி அடைந்த உற்பத்தித்துறை உண்டு. கூடிய அளவு கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கியூபெக் மாகாணம் உலகின் ஆறாவது பெரிய விமான உற்பத்தி இடமாகும். இவற்றைத் தவிர பலதரப்பட்ட பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.


சேவைத் துறை

கனடாவின் பொருளாதாரத்தில் பெரிய துறை சேவைத்துறையாகும். இத்துறை சில்லறை வணிகம், நிலம்/மனை வணிகம், நிதி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம், கேளிக்கை மற்றும் சுற்றுலாத் துறைகளை உளளடக்கியது. இத்துறையிலேயே 75 விழுக்காடு மக்கள் வேலை செய்கின்றார்கள்.


அறிவியலும் தொழில்நுட்பமும்

கனடா, ஓர் உயர்ந்த, தொழில்மயமாக்கப்பட்ட, அறிவு அடிப்படை பொருளாதரக் கட்டமைப்பை உருவாக்கிப் பேண முயல்கின்றது. அதற்கு தேவையான தகவல், தொடர்பாடல் உள்கட்டமைப்பை ஏற்படுத்தி, கனடாவின் ஆராய்ச்சி வடிவமைப்புக் கட்டமைப்பையும் முனைப்புடன் வழிநடத்தி வருகின்றது. இயல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் (Natural Sciences and Engineering Research Council) இப்பணியை மேற்கொண்டு வருகின்றது. CANDU reactor, Canada Arm, Maple (software) ஆகியவை கனடாவின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் சிறப்புக்குச் சில எடுத்துகாட்டுக்கள் ஆகும்.


ஏற்றுமதி / இறக்குமதி

கனடாவின் ஏற்றுமதி / இறக்குமதியில் அமெரிக்கா முதன்மைப் பங்கு வகிக்கிறது. கனடாவின் 81% ஏற்றுமதியும் 67% இறக்குமதியும் அமெரிக்காவுடனே அமைந்திருக்கிறது. இது அமெரிக்காவின் 23% ஏற்றுமதியையும் 17% இறக்குமதியையும் சுட்டுகின்றது.


கனடா அடிப்படையில் ஒரு மக்களாட்சிக் கூட்டரசு ஆகும். அத்தோடு, அரசியலைமைப்புச்சட்ட முடியாட்சியும் ஆகும். பெயரளவில், எலிசெபெத் II கனடாவின் அரசி ஆவார். நடைமுறையில் நாடாளுமன்ற மக்களாட்சியும் மரபுமே முக்கியத்துவம் பெறுகின்றன.


கனடாவின் மிகு உயர் சட்ட அமைப்பு கனடா அரசியலமைப்பு சட்டம் ஆகும். இது அரசாளும் முறைகளையும் மக்களின் உரிமைகளையும் விபரிக்கின்றது. இது உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனத்தை (Canadian Charter of Rights and Freedoms) உள்ளடக்கியது. இந்தச் சாசனத்தின் பகுதி 12 கனடாவின் பல்லினப்பண்பாடுக் கொள்கையை அதன் அரசியலமைப்புச் சட்டத்திலேயே உறுதி செய்கின்றது.[15]


உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனத்தில் விவரிக்கப்பட்ட மனித உரிமைகள் பிற அரச சட்டங்களினால் மறுதலிக்கவோ முரண்படவோ முடியாதவையாகும். எனினும், கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தில் தரப்பட்ட "notwithstanding clause", கொண்டு மத்திய அரசோ, மாகாண சட்டசபையோ இடைக்காலமாக ஐந்து வருடங்களுக்குக் கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தின் சில அம்சங்களை மீறி ஆணை செய்யலாம். நடைமுறையில் "notwithstanding clause" மிக அரிதாக, கவனமாக, கடைசி வழிமுறையாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.


கனடா மூன்று நிலை அரசுகளைக் கொண்டது. அவை நடுவண் அரசு, மாகாண/ஆட்சிப் நிலப்பரப்பு அரசுகள், நகராட்சி/ஊர் அரசுகள் ஆகும். கனடாவின் நடுவண் அரசே கனடாவை நாடு என்ற வகையில் முன்னிறுத்துகின்றது. குறிப்பாகக் கூட்டரசு நிர்வாகம், பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை நடுவண் அரசு கவனிக்கின்றது.


கனடாவின் மத்திய பாராளுமன்றம் ஆளுனர், மக்களவை, செனற் ஆகியவற்றால் ஆனது. கனாடவின் முடிக்குரியவரின் சார்பாக, மரபு ரீதியான சில முக்கிய கடமைகளை ஆளுனர் ஆற்றுவார். கனடா பிரதமரின் பரிந்துரைக்கமைய கனடாவின் முடியுரிமைக்குரியவரால் ஆளுனர் நியமிக்கப்படுகின்றார்.


மக்களால் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் 308 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையே கனடாப் பாராளுமன்றத்தின் முக்கிய பிரிவு ஆகும். ஒவ்வொரு உறுப்பினரும் கனடாவின் ஒரு தேர்தல் தொகுதிக்கும், அத்தொகுதியின் மக்களுக்கும் சார்பாகச் செயல்படுகின்றார். தேர்தல் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும்.


செனட், 112 சார்பாளர்கள் வரை கொண்டிருக்கலாம். செனட் பிரதிநிதித்துவம் நிலப்பகுதி அடிப்படையில் அமைகின்றது. செனற் உறுப்பினர்கள் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு ஆளுனரால் நியமிக்கப்படுகின்றார்கள்.


கனடா அரசின் தலைவராகப் பிரதமர் விளங்குகின்றார். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியின் தலைவர் பிரதமர் ஆகும் தகுதி பெறுகின்றார். பிரதமரையும் அவர் தெரிவு செய்யும் அமைச்சரவையையும் அதிகாரப்பூர்வமாக ஆளுனர் நியமிக்கின்றார். மரபுரீதியாக, அமைச்சரவை, பிரதமரின் கட்சியிலிருந்து பிரதமரால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களால் ஆனது. அரச செயல் அதிகாரம் பிரதமராலும் அமைச்சரவையாலும் வெளிப்படுத்தப்படுகின்றது.


அரசியல் கட்சிகள்

முக்கிய நடுவண் அரசியல் கட்சிகள்:


கனடா பழமைவாதக் கட்சி

கனடா நடுநிலைமைக் கட்சி

க்குயூபெக்கா கட்சி

கனடா புதிய ஜனநாயகக் கட்சி

கனடா பசுமைக் கட்சி


சட்டம்

கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் அதன் நடுவண், மாகாண அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்து, சட்ட உருவாக்க வழிமுறைகளையும் விபரிக்கின்றது. மாகாண அரசுகள் உள்ளூர் அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்கின்றன. அரசுகள் தகுந்த வழிமுறைகளுக்கமைய சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துகின்றன.


கனடாவின் நீதியமைப்பு சட்டங்களைப் புரிந்து நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் சட்டங்களைச் செல்லுபடியாகாமல் செய்யும் அதிகாரம் நீதியமைப்புக்கு உண்டு. கனடாவின் உச்ச நீதி மன்றமே நீதிக் கட்டமைப்பின் அதி உயர் அதிகாரம் கொண்டது

நிர்வாகம்

கனடாவின் ஆட்சி நிர்வாகத் துறை அரசை நிர்வகித்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மக்களுக்குச் சேவைகள் வழங்கல் என பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. அரசியல் இடையூறுகளை மட்டுப்படுத்தி, ஊழலற்ற, வெளிப்படையான திறன் வாய்ந்த நிர்வாகத்தைத் தருவது வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அவசியமாகின்றது. ஒப்பீட்டளவில் கனடாவின் நிர்வாகத்துறை சிறப்பாகச் செயல்படுகின்றது.

கல்வி

கனடாவில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் 95%க்கும் கூடுதலாக உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது

இங்கு 42.5% மக்கள் மேல்நிலைக் கல்வியை (some form of post secondary education) பெற்றுள்ளார்கள்.


கனடாவில் கல்வியை


அடிப்படைக் கல்வி (elementary (Kindergarden – Grade 8)),

உயர்கல்வி (secondary (Grade 9-12)),

மேல்நிலைக்கல்வி (post secondary: undergraduate, trade, post graduates)

என்று பிரிக்கலாம்.


அடிப்படைக்கல்வியும் உயர்கல்வியும் அரச, தனியார் துறைகளால் வழங்கப்படலாம். ஆனால், மேல்நிலைப் பல்கலைக்கழக படிப்புக்களை அரசே வடிவமைத்துச் செயல்படுத்துகின்றது. அடிப்படைக் கல்வியும் உயர் கல்வியும் அனைவருக்கும் பொது அரச பாடசாலைகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. பெரும்பான்மையான மாணவர்கள் அரச பாடசாலைகளுக்கே செல்கின்றார்கள், தரமும் நன்றாக அமைகின்றது. உயர் பொருளாதார வசதி படைத்தோரும், சமய சார்பினர் சிலரும் தனியார் பாடசாலைகளை நடத்துக்கின்றார்கள். மேல்நிலைக் கல்வி அரசே நடத்தினாலும் மாணவர்களும் குறிப்பிடத்தக்க செலவைக் கல்விப் பயிற்சிக் கட்டணமாகப் பங்களிக்கவேண்டும். இவை தவிர நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தில் பாதுகாப்பு துறைக்கென முற்றிலும் இலவசமான மேல்நிலைக் கல்விக்கூடங்கள் உண்டு. அரசு கல்வியை சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கும் நீதிக்கும் சமத்துவத்துக்கும் முக்கியமான ஒரு கருவியாகக் கருதி வழங்கி வருகின்றது.


வெளியுறவுக் கொள்கைகள்


கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் அதன் அண்டை நாடான அமெரிக்காவுடனான உறவே அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. கனடாவும் அமெரிக்காவும் உலகின் நீண்ட மதில்கள் அற்ற எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் பெரிய அளவில் வணிக உறவு உள்ளவையாக இருக்கின்றன. மேலும், வடஅமெரிக்க திறந்த வணிக வலய ஒப்பந்தம் ஊடாகக் கனடா அமெரிக்கா மெச்சிக்கோ ஆகிய நாடுகளுடன் ஒரு நெருக்கமான நட்பான தொடர்பைப் பேணி வருகின்றது.


கனடா தென் அமெரிக்காவுடன் மேலும் வலுவான உறவை விரும்புகின்றது. அமெரிக்க கொள்கைகளில் இருந்து விலகி கியூபாவுடன் கனடா நட்புறவு வைத்திருக்கின்றது. மேலும், அமெரிக்க நாடுகள் அமைப்பில் (Organization of American States – OAS) 1990ஆம் ஆண்டு கனடா இணைந்தது. ஜூன் 2000ல் விண்ட்சரில் அமெரிக்க நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தை நடத்தியது.


கனடாவுக்கும் பிரட்டன் பிரான்ஸ் நாடுகளுக்குமிடையான வரலாற்றுப் பிணைப்பு இன்றும் வலுவாக நீடித்து வருகின்றது. கனடா, பொதுநலவாய நாடுகள் மற்றும் பிரான்கோபோனி உறுப்பு நாடாகும். மேலும், கனடாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையான தொடர்பு NATO, G8 ஊடாக வலுவானது.


கனடாவின் மேற்கு எல்லை பசிபிக் பெருங்கடல் ஆகும். அதனால் கனேடிய பசிபிக் நாடுகளுடான தொடர்பும் நீண்ட வரலாற்றைக் கொண்டது. கனடா ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒரு உறுப்பு நாடாகும். கனடாவுக்கும் சீனாவுக்குமிடையான வணிகமும் அதிகரித்து வருகின்றது.


இன்று, கனடாவின் பல்நாட்டு குடிவரவாளர்களின் உதவியுடன் தெற்கு ஆசிய, மத்திய ஆசிய, மேற்கு ஆசிய, ஆபிரிக்க நாடுகளுடான தொடர்பை மேம்படுத்த முனைகின்றது. ஆழிப் பேரலைக்கு உதவிய நாடுகளிலும், ஆபிரிக்காவுக்கும் உதவும் நாடுகளிலும் கனடா முன்னிற்பது குறிப்பிடத்தக்கது.


பாதுகாப்புக் கட்டமைப்பு


கனடாவின் பாதுகாப்புப் படை தரை, கடல், வான், சிறப்புப் படையணிகளை கொண்டுள்ளது. இவையனைத்தும் ஒரு கூட்டுக் கட்டமைப்புக்குள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. படைகளின் அதி உயர் இராணுவ அதிகாரி பாதுகாப்புப் பணியாளர்களின் தளபதி ஆவார். இவர் பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரதம அமைச்சருக்கும் கட்டுப்பட்டவர்.


கனடா கூட்டமைப்பு பின்பு பொர் யுத்தம், முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், கொரியப் போர், குவைத் போர் ஆகியவற்றில் பங்கெடுத்தது. 1960 களின் பின்பு கனேடியப் படைகள் பெரும்பாலும் அமைதிப் படைகளாகப் பல நாடுகளுடன் கூட்டமைப்புகளிலோ அல்லது ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடாகவோ பணியாற்றி வருகின்றன. தற்போது கனேடிய படையணிகள் கொசாவிலும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் 35 கனேடிய வீரர்களுக்கு மேல் இதுவரை இறந்துள்ளார்கள்.


கனடா இரண்டாம் உலகப்போர் முடிவில் உலகின் வலு மிக்க படைகளின் ஒன்றாக இருந்தது. இன்று ஒப்பீட்டளவில் கனடாவின் பாதுகாப்புப் படை மிகவும் சிறியது. கனடா, அமெரிக்காவின் நட்புறவு நாடாக அதற்கு அருகாமையில் இருப்பதாலும், NATO NORAD ஆகியவற்றின் உறுப்பினராக இருப்பதாலும் அதன் பாதுகாப்புப் படை பெரிதாக இருக்கவேண்டிய தேவை இல்லை எனலாம். இன்று, கனடா பொதுவாகப் பல்நாட்டு கூட்டமைப்பின் அங்கமாகவே போரில் ஈடுபடும் கொள்கையைப் பெரும்பாலும் கொண்டிருக்கின்றது. எனினும் வியட்நாம் போரிலும் இராக் போரிலும் அமெரிக்க படைக் கூட்டமைப்பில் சேர மறுத்தது குறிப்பிடத்தக்கது.


சமூகம்

மக்கள் வகைப்பாடு

கனடா இரண்டாவது பெரிய நாடாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் சிறிய மக்கள் தொகையையே கொண்டது. கனடா புள்ளிவிபரத்திணைக்கள 2006 மக்கள் தொகைமதிப்பு அறிக்கையின் படி 31,612,897 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இத்தொகை 2001 கணிப்பீட்டில் இருந்து 5.4 வீதம் மக்கள் தொகை உயர்வைக் காட்டுகின்றது.


மக்கள் தொகை எண்ணிக்கை குடிவரவாளர்களாலேயே கூடுகின்றது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad