Type Here to Get Search Results !

இலங்கை மத்திய வங்கி / Central Bank of Sri Lanka / 2023

 பொதுநோக்கு

இலங்கையின் நிதியியல் துறையில் உச்ச மட்ட நிறுவனமாக இலங்கை மத்திய வங்கி விளங்குகின்றது. 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின்கீழ் 1950ஆம் ஆண்டு அரைவாசியளவு சுயநிர்ணயம் கொண்டதொரு நிறுவனமாக இது நிறுவப்பட்டதுடன் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நாணயச் சபையினால் நிருவகிக்கப்படுகிறது.


ஆரோக்கியமானதும் உறுதியானதுமான பொருளாதாரத்தினையும் நிதியியல் முறைமையினையும் பேணுவதற்காக இரண்டு மையக் குறிக்கோள்களை அடையவும் பேணவும் இலங்கை மத்திய வங்கி நாடுகின்ற அதேவேளையில் மூலவளங்களின் பயன்பாட்டினைக் காத்திரமான முறையில் உச்சப்படுத்தவும் எதிர்பார்க்கிறது. இக்குறிக்கோள்களாவன:


      1.    பொருளாதாரத்தையும் விலை உறுதிப்பாட்டினைப் பேணுதல்

      2.    நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுதல்


நாணய விதிச் சட்டம் பொதுமக்களுக்கு நாணயத் தாள்களையும் குற்றிகளையும் வெளியிடுகின்ற ஏக அதிகாரத்தினை மத்திய வங்கிக்கு வழங்கியிருக்கிறது. ஆகவே, வங்கி நாணய வெளியீட்டிற்கும் அதன் முகாமைத்துவத்திற்கும் பொறுப்பாக இருக்கின்றது.


இலங்கை மத்திய வங்கி, இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார விடயங்கள் தொடர்பான மதியுரையாளராகவும் வங்கியாளராகவும் விளங்குகிறது. இலங்கை அரசாங்கத்தின் முகவர் என்ற ரீதியில் ஊழியர் சேம நிதியத்தினை முகாமைப்படுத்தல், நாட்டின் பொதுப் படுகடனை முகாமைப்படுத்தல், செலாவணிக் கட்டுப்பாட்டுப் பணிகளை வழங்குதல் மற்றும் பிரதேச அபிவிருத்திக்கான நிதிகள் கிடைப்பதனை அதிகரிக்கும் விதத்தில் வெளிநாட்டு மற்றும் அரச நிதியிடல் கொடுகடன் திட்டங்களை நிருவகித்தல் ஆகிய பணிகள் அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், முதன்மை நிறைவேற்று அலுவலராக தொழிற்படுகின்ற அதேவேளை, மூத்த முகாமைத்துவமானது ஆளுநருக்கு மேலதிகமாக  துணை ஆளுநர்கள், உதவி ஆளுநர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது. வங்கியானது 29 திணைக்களங்களையும் 6 பிரதேச அலுவலகங்களையும்; உள்ளடக்கியுள்ளது. திணைக்களங்களுக்கு பணிப்பாளர்கள் (அல்லது அவர்களுக்குச் சமமானவர்கள்) தலைவர்களாகத் தலைமை வகிப்பதுடன், அவர்கள்  உதவி ஆளுநரினூடாக ஆளுநருக்கு அல்லது துணை ஆளுநருக்கு அறிக்கையிடுகின்றனர்.


வங்கியின் வரலாறு

இப்பிரிவில் நீங்கள் கடந்தகால ஆளுநர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றினை வாசிக்கவும் வங்கியினதும் அதன் தலைமை அலுவலகத்தினதும் வரலாற்றினை கண்டறியவும் முடியும். நீங்கள் எமது வரலாற்றுப் புகைப்படங்களை பார்க்கவும் எமது ஞாபகார்த்த நூல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும். 


வங்கியின் ஆரம்பம்

1948இல் சுதந்திரமடைந்தமையினைத் தொடர்ந்து இயக்கவாற்றல் வாய்ந்த பொருளாதார மற்றும் நிதியியல் முறைமைக்கு வசதியளிப்பதற்காக, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசாங்கம், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்து அதனை ஊக்குவிப்பதற்காக தீவிரமான நாணயக் கொள்கை அமைப்பையும் இயக்கவாற்றல் வாய்ந்த நிதியியல் துறையினையும் பேணுவதற்காக இலங்கை மத்திய வங்கியினை நிறுவியது.



இலங்கை மத்திய வங்கி நிறுவப்படுவதற்கு முன்னர், 1884ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க தாள் நாணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பணச் சபை முறைமையானது நாட்டின் நாணய அதிகாரசபையாகத் தொழிற்பட்டது. எனினும் இதன் இயலாற்றல் மிகக் குறுகியதாகும். அரசியல் சுதந்திரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு இம்முறைமை போதுமானதல்ல என உணரப்பட்டது.


இலங்கை மத்திய வங்கியை நிறுவுவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தினை ஐக்கிய அமெரிக்காவிலிருந்து வழங்குமாறு 1948 யூலையில் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அமெரிக்கப் பொருளியலாளரான திரு. ஜோன் எக்ஸ்ரர், இப்பணியினை மேற்கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் பெடரல் றிசேர்வ்விலிருந்து நியமிக்கப்பட்டார்.


மத்திய வங்கிக்கான நியாயபூர்வமான தன்மை மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பு என்பன தொடர்பான எக்ஸ்ரர் அறிக்கை 1949ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் மக்கள் பிரதிநிதித்துவச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையுடன் சேர்த்து, அறிக்கையின் II ஆவது பகுதியாக, விளக்கக் கருத்துக்களுடன் சேர்த்து வரைவு மசோதாவும் சமர்ப்பிக்கப்பட்டது. 

1949ஆம் ஆண்டு நவெம்பர் 25ஆம் நாளன்று இம்மசோதாவானது சபையினால் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டம் என நிறைவேற்றப்பட்டமையானது இலங்கை மத்திய வங்கியை நிறுவுவதற்கும் பணச் சபை முறைமையினை முடிவுறுத்துவதற்கும் வழியமைத்தது. 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கை மத்திய வங்கி 1950 ஓகத்து 28ஆம் நாள் தொழிற்படத் தொடங்கியது. இது, இலங்கை (சிறிலங்கா) மத்திய வங்கி என 1985 இல் மீளப் பெயரிடப்பட்டது. 


நாட்டின் பணம், வங்கித்தொழில், மற்றும் கொடுகடன் முறைமை என்பனவற்றை முழுமையாக நிருவகித்து ஒழுங்குபடுத்துவதற்கான பரந்தளவு அதிகாரம் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது. மத்திய வங்கிக்கு நாணயத்தை வெளியிடும் ஏக உரிமையும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளதோடு, அது நாட்டின் பன்னாட்டு ஒதுக்குகளின் காவலனாகவும் மாறியுள்ளது. 1949 இன் நாணயச் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மத்திய வங்கியின் முக்கிய குறிக்கோள்கள் பின்வருமாறு:


(1)  உள்நாட்டு நாணயப் பெறுமதியினை உறுதிப்படுத்தல் (விலை உறுதிப்பாட்டினைப் பேணுதல்).  


(2)  இலங்கை ரூபாவின் நாணய மாற்று வீதத்தின் முகப்புப் பெறுமதியினை அல்லது உறுதிப்பாட்டைப் பாதுகாத்தல் (செலாவணி வீத உறுதிப்பாட்டைப் பேணுதல்).


(3)  இலங்கையில் உயர்மட்டத்திலான உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் உண்மை வருமானம் என்பவற்றை மேம்படுத்தி அதனைப் பேணுதல்.


(4)  இலங்கையின் உற்பத்தியாக்க மூல வளங்களின் முழுமையான அபிவிருத்திக்கு ஊக்கமளித்து முன்னேற்றுதல்.


எனினும், மத்திய வங்கித்தொழிலின் உலகளாவிய போக்கினையும், பொருளாதாரத்தின் தாராளமயமாக்கலின் விளைவாக, பன்னாட்டு நிதியியல் சந்தைகளில் ஏற்பட்ட விரைவான மாற்றங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் கணிசமான முக்கியத்துவத்தையும் கருத்திற்கொண்டு 2000 ஆண்டில் மத்திய வங்கி நவீன மயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தினை மேற்கொள்ள நேரிட்டது. இதன்படி குறிக்கோள்கள் சீராக்கப்பட்டு இரண்டு மையக் குறிக்கோள்கள் உருவாக்கப்பட்டன. அவையாவன:

(1)   பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டைப் பேணுதல்

(2)   நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டைப் பேணுதல்


இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள்கள்

இலங்கை மத்திய வங்கி மாற்றமடைந்துவரும் பொருளாதார சூழலுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் அது உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் கவனத்தையும் தொழிற்பாடுகளையும் விருத்திசெய்து வருகிறது. மத்திய வங்கித் தொழிலின் போக்குகளுடன் ஒத்துச்செல்லும் விதத்தில் ஆரம்பத்தில் அதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பல்வேறு குறிக்கோள்களிலிருந்தும் அதனை விடுத்து இரண்டு மையக் குறிக்கோள்களை அது பின்பற்றுவதனை இயலச்செய்யும் விதத்தில் 2002இல் நாணய விதிச் சட்டத்திற்கு திருத்தங்களை மேற்கொண்டதன் மூலம் மத்திய வங்கியின் குறிக்கோள்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.


மத்திய வங்கி இரண்டு மையக் குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறது:


"பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாட்டினைப் பேணுதல்"

"நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுதல்"

இலங்கையின் உற்பத்தியாக்க மூலவளங்களின் அபிவிருத்தியை ஊக்குவித்து மேம்படுத்துகின்ற நோக்குடன் மத்திய வங்கி இவ்விரண்டு குறிக்கோள்களையும் கொண்டிருக்கிறது.


சட்டம் திருத்தப்படுவதற்கு முன்னர் மத்திய வங்கி பல குறிக்கோள்களைக் கொண்டிருந்தது. இவை சில சமயங்களில் முரண்பாடுகளைக் கொண்டனவாக அல்லது ஒன்றுடன் மற்றொன்று ஒத்துப்போகாததாகக் காணப்பட்டது.


அதேவேளை, மத்திய வங்கியின் முக்கிய குறிக்கோளாக விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதாக இருத்தல் வேண்டும் என்ற உடன்பாடு பன்னாட்டு ரீதியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்களிளொன்றான விலை உறுதிப்பாடு உறுதியான பேரண்டப் பொருளாதார நிலைமைகளில் முக்கியமாக தங்கியிருப்பதனால் '' பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு '' என குறித்துரைக்கப்படுகிறது. மேலும், மற்றைய நாடுகளின் அனுபவங்கள் பொருளாதாரத்தின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேம்படுத்துவதற்கு நிதியியல் முறைமை உறுதிப்பாடு இன்றியமையாதது என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. எனவே நிதியியல் முறைமை உறுதிப்பாடும் இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோளொன்றாக அடையாளம் காணப்பட்டது. இவ்விரண்டு குறிக்கோள்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாகவும் ஒன்றினை ஒன்று பூர்த்தி செய்வதாகவும் காணப்படுகின்றன. விலை உறுதிப்பாட்டினை எய்துவதற்கு, நாணயக் கொள்கை நிதியியல் இடையேற்பாட்டாளர்களினூடாக (நிறுவனங்கள்) பரிமாற்றப்பட்டு வருவதனால் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானதாகும். எனவே இரண்டு குறிக்கோள்களும் இணங்குவிப்புத் தன்மை கொண்டனவாக இருப்பதுடன் இது மத்திய வங்கி அதன் முக்கிய தொழிற்பாடுகளை மிகக் காத்திரமான முறையில் ஆற்றுவதனையும் இயலுமைப்படுத்துகின்றது. மத்திய வங்கி அதன் குறிக்கோள்களை எய்துவதற்காக அதற்கு அதிகளவு சுயநிர்ணயமும் வழங்கப்பட்டிருக்கிறது. இப்பணியில் மத்திய வங்கி கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதில் நிதியமைச்சுடன் நெருக்கமாக தொடர்புகளைப் பேணிவருவதுடன் நிதியமைச்சின் செயலாளர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபையாக விளங்கும் நாணயச் சபையின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.


பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு

விலை உறுதிப்பாடானது, உள்நாட்டின் நாணயத்தின் நியதிகளிலும் வெளிநாட்டு நாணயங்களின் நியதிகளிலும் இது எவற்றைக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்குமென்ற நாணயத்தின் பெறுமதியினைப் பாதுகாக்கிறது. விலை உறுதிப்பாடு அல்லது விலைகளின் உறுதித்தன்மை என்பதன் பொருள் குறைந்த பணவீக்கமாகும். பணவீக்கம் குறைவாக இருக்கும் பொழுதும் குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படும் பொழுதும் பொருளாதாரம் நன்கு செயலாற்றும் என்பதனை அனுபவம் காட்டுகின்றது. இந்நிலைமைகளில் வட்டி வீதங்களும் குறைவாகவே இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையானது, பொருளாதாரம் அதன் வளர்ச்சி வாய்ப்புக்களை அடைவதற்கும் உயர் தொழில்வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கும் அனுமதிக்கிறது. உயர்வானதும் அடிக்கடி மாறுபடுவதுமான பணவீக்கத்தின் இடையூறு விளைவிக்கும் தாக்கம் இல்லாமையால் நுகர்வோரும் உற்பத்தியாளர்களும் நம்பிக்கையுடன் பொருளாதார தீர்மானங்களை மேற்கொள்ளமுடிகிறது. குறைந்த பணவீக்கம் அல்லது விலை உறுதிப்பாடானது உறுதித்தன்மை, நீண்ட கால பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நிலை என்பவற்றை ஊக்குவிக்கின்றது.  மத்திய வங்கி பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு நாணயக் கொள்கை வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றது.


நிதியியல் முறைமை உறுதிப்பாடு

உறுதியான நிதியியல் முறைமையானது வைப்பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சாதகமான சூழலொன்றினை உருவாக்குவதன் மூலம் வினைத்திறன் மிக்க நிதியியல் இடையீடுகளையும் சந்தைகளின் காத்திரமான தொழிற்பாடுகளையும் ஊக்குவிக்கிறது, இதன்மூலம் முதலீட்டினையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது. நிதியியல் முறைமை உறுதிப்பாடென்பது நிதியியல் முறைமையின் காத்திரமான தொழிற்பாடு எனவும் (நிதியியல் நிறுவனங்கள் மற்றும் சந்தைகள்) வங்கித்தொழில், நாணயம் மற்றும் சென்மதி நிலுவை நெருக்கடிகள் இல்லாததொரு தன்மை எனவும் பொருள்படுகிறது. வங்கி முறிவடைதல், மிகையான சொத்து விலைத்தளம்பல்  மற்றும் சந்தைத் திரவத்தன்மை சிதைவடைதல் அல்லது கொடுப்பனவு முறைமைக்கான தடங்கல் என்பனவற்றின் காரணமாக நிதியியல் உறுதிப்பாடற்ற தன்மை ஏற்படுகிறது. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு உறுதியான பேரண்டப் பொருளாதார சூழல், காத்திரமான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு, நன்கமைக்கப்பட்ட நிதியியல் சந்தைகள், ஆற்றல் வாய்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பானதும் உத்வேகம் நிறைந்ததுமான கொடுப்பனவு உட்கட்டமைப்பு என்பன தேவைப்படுத்தப்படுகின்றன. சந்தைகளையும் நிதியியல் நிறுவனங்களையும் கண்காணித்தல், கொடுப்பனவு முறைமைகளை மேற்பார்வை செய்தல் மற்றும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணுதல் என்பனவூடாக நிதியியல் முறைமைக்குப் பொதுவாக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடைசெய்தல், கண்டுபிடித்தல் மற்றும் குறைத்தல் என்பனவற்றின் மூலம் நிதியியல் உறுதிப்பாடு பேணப்படுகின்றது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad