Type Here to Get Search Results !

குழந்தை உளவியல் (முன்பிள்ளைப் பருவம்) Child psychology -2023

 குழந்தை உளவியல் (முன்பிள்ளைப் பருவம்)


முன்பிள்ளைப் பருவம்



குழந்தை பிறந்தது முதல் இருவருடங்கள் முடியும் வரையுள்ள காலப்பகுதியை உளவியலாளர்கள் முன்குழந்தைப் பருவம் என்கின்றனர். குழந்தைகள் சில தெறிவினைகளுடனேயே பிறக்கின்றது. தெறிவினையென்பது அதி சிறப்பான தூண்டல்களுக்காகக் காட்டப்படும் தன்னிச்சையான அதாவது இச்சையின்றிய உடற் செயற்பாடாகும். தலையைத் திருப்புதல் விழுங்குதல், மொரோ தெறிவினை, பவின்ஸி தெறிவனை, பற்றுதல் பிடித்தல் என்பன முக்கிய தெறிவினைகளாகும். முக்கியமான ஒன்றாக காணப்படினும் இது நிலையற்ற ஒன்றாகவே காணப்படுகிறது. 

இக்காலப் பகுதியில் கண்களால் பார்ப்பவற்றை ஞாபகம் வைத்திருத்தல் விளங்கல் ஒழித்து வைத்த பொருளைத் தேடல் நிரப்புத்தன்மையடைவதே காரணமாகும். இதனால் மனப்பாடம் தோன்றும் என்கிறார் பியாஜே. இதனால் உளவிருத்தி ஏற்படுவதோடு குடும்ப அங்கத்தவர் உறவினருடன் தொடர்பை ஏற்படுத்துவதால் குழந்தை சமூக ரீதியான விருத்தியும் அடைகிறது.


இப்பருவத்தினைப் பின்வரும் விருத்தியின்கீழ்ச் சிறப்பாக ஆராயலாம்.


உடலியக்க வளர்ச்சி

இயக்கத்திறன்களின் வளர்ச்சி

புலனுணர்ச்சிகளின் வளர்ச்சி

சமூகமனவெழுச்சி வளர்ச்சி

மொழி வளர்ச்சி

ஆரம்ப அறிவு வளர்ச்சி

உடலியக்க வளர்ச்சியென்பது வயது அதிகரிப்பதுடன் ஒருவரின் உடல் உறுப்புக்களில் ஏற்படுகின்ற மாற்றங்களையே குறித்து நிற்கிறது. அதாவது குழந்தையின் முதலிரு வருடத்திலும் உயரத்திலும் நிறையிலும் விரைவான வளர்ச்சியை அடைவதோடு குழந்தை ஐந்து மாத நிறைவில் இருமடங்காகவும் 12 மாதத்தில் மூன்று மடங்காகவும் விருத்தியடையடைவதோடு முதல் வயதில் 10-12 அங்குல உயரத்தையும் இருவயது முடிவில் தளர்நடைபகுதியினராகத் தமது வளர்ச்சியின் மறுபகுதி உயரத்தையும் பூர்த்தி செய்வர். 

முதல் இருவருடமும் வளர்ச்சியும் கற்றலும் மிக விரைவாக இருக்கும். குழந்தையின் உருவவியல் மாற்றம் உடலியல் ரீதியாகவும் விகிதாசார அடிப்படையில்  நிகழும். அத்தோடு தசைகள், ஓமோன்கள் ஆகியவற்றில் மாற்றம் நிகழ்வதோடு எலும்பு, மூளை வளர்ச்சியைப் போலன்றி சகல தசைநார்களையும் குழந்தை ஆரம்பத்திலேயே பெறுவதோடு தசைஇழையங்களின் அதிகரிப்பினால் தசைநார்கள் நீளத்திலும் தடிப்பிலும் வலுவிலும் மாற்றம் நிகழ்கிறது. இது கட்டிளமைப்பருவம் வரை இடம்பெறுவதனால் உடலியக்க வளர்ச்சி சிறப்பாக அமையும். இயக்கத்திறன்களில் மாற்றம் ஏற்படும். உயரம், நிறை போன்ற அளவு ரீதியான அளவைகள் மூலம் இதனையறியலாம்.  இவ்வாறு பிள்ளைகளின் ஆரம்பநிலை உடலியக்க வளர்ச்சி பற்றி ஆசிரியர் அறிந்திருப்பதானது அவசியமாகும்.


ஏனெனில் முன்பள்ளியிலே பல்வேறுபட்ட பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் வேறு இயல்புள்ளவர்களாகவும் உடலியக்க செயற்பாடு உடையவர்களாகவும் காணப்படுவர். உதாரணமாக அதாவது சில குழந்தை நல்ல சுறுசுறுப்பாகக் காணப்பட சில குழந்தைகள் சுறுசுறுப்பற்றுக் காணப்படலாம். இவ்வாறு ஏன் வேறுபடுகின்றது என்பதனைக் கண்டறிவதும் தீர்வுகளை வழங்குவதும் இன்றியமையாததாகும். இவ்வாறு அறிந்திருந்தால்தான் பிள்ளையின் விருத்திக்குத் தடையாக அமைந்த காரணியைக் கண்டறிந்து குழுவாகப் பிள்ளைகளைச் செயற்படச் செய்தல் விளையாட்டுக்களில் ஈடுபட வைத்தல்  என ஒவ்வொருவரின் உடலியல் வளர்ச்சிக்கேற்ப கற்பித்தலை மேற்கொள்ளலாம்.


சிறந்த எடுத்துக்காட்டாக முன்பள்ளிக் குழந்தைகளைக் குழுக்களாக்கி ஓட்டப்பந்தயம், சறுக்கல், நீச்சல், நடனம், உடற்பயிற்சி போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்களுக்கிடையேயுள்ள உடலியக்க விருத்திசார் வேறுபாடுகளை இனங்கண்டு அவற்றினை நிவர்த்தி செய்ய பிள்ளையின் உடலியல் விருத்தி தொடர்பான அறிவு இன்றியமையாததாகும். அதனை அறிந்திருந்தால்தான் பிள்ளையின் விருத்திக்கேற்றவாறு கற்பித்தலை மேற்கொண்டு முன்பள்ளிச் செயற்பாட்டில் குழந்தைகளுக்குச் சிறந்த விருத்தியை ஏற்படுத்தலாம் என்பதில் ஐயமில்லை. 

உடலியக்க விருத்திசார் அறிவு இல்லையேல் முன்பள்ளிச் செயற்பாட்டில் விருத்தியை ஏற்படுத்துவதென்பது எட்டாக்கனியாகும். மேலும் இயக்கத்திறன்களின் வளர்ச்சியானது இப்பருவம் பிறப்பில் எதிர்நோக்க வேண்டியிருக்கும் சகல சூழற்றாக்கத்திலிருந்தும் விடுபடுவதற்கான மாற்றங்களைப் பெறுகிறது. ஆரம்பநிலை சீராக்கத்தின் பின்பு அதன் வளர்ச்சி துரிதமடையும் முதிர்ச்சியுடன் கூடிய நரம்புத்தசைப் பயிற்சியும் இயக்கச் செயற்பாடுகளுடன் இயைவடைகிறது. உளவியலாளர்கள் இயக்க வளர்ச்சியென்பது பிள்ளையின் அசைவிலும் நடத்தையிலும் ஏற்படும் சிக்கலான மாற்றமே என்கினறர். குழந்தைகளின் இயக்கத்திறன் வளர்ச்சியிலே பல சிக்கலான பருவங்கள் உண்டாகின்றன.


தன்னிச்சையான அடிப்படைத் திறன்களிலே காணப்படும் ஒன்றிணைதலும் இயைபூக்கமும் காரணமாகப் படிப்படியாக ஏற்படும் சிக்கலான திறன்களுடன் வளர்ச்சியின் தொடர்ச்சியான நிகழ்வு இணைந்து செல்லும்போது இவ்வாறான பிரச்சினைக்குரிய பருவம் ஏற்படுகிறது. இதனுள் குழந்தைகள் திறன் தேர்ச்சியடையும் காலப்பகுதியுமுண்டு. பிள்ளையானது உடல், புலக்காட்சி, நுண்ணறிவு ரீதியாக தொழிற்பட போதிய முதிர்ச்சியும் ஏற்படுகின்றது. குழந்தைகளின் இயக்கத்திறனை கட்டுப்படுத்த விளையும் போது அதன் ஏனைய திறன் விருத்தியையும் இழக்க நேரிடும். இருப்பினும் பிள்ளைகளின் இயக்கத்தில் சில குறைபாடுகள் காணப்படுவது பொது நிகழ்வாகும் இதனை நிவர்த்தி செய்ய பல்வேறு வழிகள் காணப்படுகின்றன. இயக்கதிறன் விருத்தியை மேற்கொள்ள வெறுமனே பிள்ளைகளுக்கு எழுத்துப் பயிற்சிகளை மட்டும் மேற்கொள்ளாமல் பிள்ளையின் மூளை, தசைநார்கள் போன்றன சிறப்பாக செயற்படக்கூடிய வகையிலான நீந்தல், ஆடல், பாடல், கண்கட்டி விளையாடல், ஊஞ்சலாட வைத்தல், மண்ணில் விளையாட வைத்தல்  போன்ற பல்வேறு செயற்பாடுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்தி அவர்களின் இயக்கத்திறனை விருத்தியடையச் செய்தல் ஆசிரியரின் பொறுப்பாகும்.


குழந்தைகளுக்குப் புலனுணர்ச்சி சிறந்த வகையில் இடம்பெறல் இன்றியமையாததாகும். அதனடிப்படையில் குழந்தை பிறந்தவுடன் அதன் ஐம்புலன்களால் சூழலியல் மாற்றங்களை உணர முடிகிறது. அதாவது கட்புல விருத்தியில் கண்பார்வைக் கூர்மை மிக முக்கியமானது. ஏனெனில் குழந்தை கண்ணால் பார்ப்பதனையே கைவழியாக வெளிப்படும். அதாவது கண்களால் காணும் விடயங்களைப் பிள்ளை கைகளால் செயற்படுத்த முயற்சிக்கும். பிறந்த குழந்தையால் எட்டு அங்குல தூரத்திலுள்ள பொருட்களின் மீது பார்வையைச் செலுத்த முடியும். இரண்டு மாதமளவில் குழந்தையின் பார்வை துரிதகதியல் கூர்மையாவதுடன் பொருட்களை அடையாளம் காணவும் வலிமை பெறுகிறது. இது இனங்காணல் திறனில் முதல் முயற்சியாகும். ஐம்புலன்களால் அடையாளங்கண்ட யாதேனுமொன்றை உள்ளத்தால் இனங்காணல் புலக்காட்சி எனப்படும். அதாவது சூழலில் பெற்ற அனுபவத்திற்கு அர்த்தம் கற்பித்தலாகும்.


குழந்தைக்கு ஆறுமாதமாகும்போது புலக்காட்சி பற்றிய தெளிவான அறிவைப் பெறும். உதாரணமாக தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை யாருமில்லாத நேரத்தில் திடீரென விழித்தால் அதிலிருந்து தானாக வெளியேற முயற்சிக்காது. இதிலிருந்து புலக்காட்சி விருத்தியடைந்துள்ளது எனலாம். கட்புலவிருத்தியானது அப்பருவத்தில் உண்டாகும் அறிவு விருத்தியின் விளைவேயாகும். பியாஜே இரண்டு வயது வரையுள்ள இப்பருவத்தினையே அறிவு வளர்ச்சியன் புலனியக்கப் பருவம் என்கிறார். அத்தோடு கேட்டல் திறன்விருத்தியையும் பெற்றுக் கொள்கிறது. குரல், முகம், ஒலி வேறுபாடுகளை இனங்காண்பதோடு அதனூடாக நபர்களை இனங்காணல் மொழிவிருத்தி என்பன வளர்ச்சியடைகின்றன.


பிள்ளையைச் சிறந்த வகையில் வழிநடத்தி முன்பள்ளிச் செயற்பாட்டில் விருத்தியை ஏற்படுத்த ஆசிரியருக்குப் பிள்ளையின் புலனுணர்ச்சி தொடர்பான அறிவு இன்றியமையாததாகும். ஏனெனில் மீதிறன் கூடிய பிள்ளைகளும் குறைந்த பிள்ளைகளும் வகுப்பறையில் காணப்படுவர். அவரவர் திறன்களுக்கு ஏற்றாற்போல் கற்பித்தலை மேற்கொண்டு அனைத்துப் பிள்ளைகளிலும் முழுமையான விருத்தியை ஏற்படுத்துவதே ஆசிரியரது இலக்கு. அந்த வகையில் புலனுணர்வினூடாக பிள்ளைகளை விருத்தியடையச் செய்யலாமெனின் வர்ணப்படங்கள், உருக்களை இனங்காணல், வித்தியாசங்களை இனங்காணல், சிறுவர் பாடல்கள், சிறுவர் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பித்தல் இயற்கைச்சூழலுக்கு அதாவது வண்ணப் பூங்காக்கள் போன்றவற்றிற்குப் பிள்ளைகளை அழைத்துச் சென்று அதனை அங்குள்ள இயற்கைக்காட்சி ஒலிகள் போன்றவற்றை அவதானிக்கச் செய்தல் போன்றவற்றினூடாக முன்பள்ளி விருத்திச் செயற்பாட்டினை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். எனவே பிள்ளையின் புலனுணர்ச்சிசார் விருத்தி தொடர்பான அறிவினை அடிப்படையாகக் கொண்டு முன்பள்ளிச் செயற்பாட்டில் சிறந்த விருத்தியை ஏற்படுத்தலாம்.


வகுப்பறை கற்றல் கற்பித்தலைச் சிறந்த வகையில் கொண்டு செல்ல பிள்ளைகளின் சமூக-மனவளர்ச்சி பற்றிய அறிவும் ஆசிரியருக்கு இன்றியமையாத வொன்றாகும். குழந்தையின் சமூக-மனவெழுச்சி வளர்ச்சிகள் பெருமளவில் முதிர்ச்சியிலும் சூழலிலுமே தங்கியுள்ளது. பெற்றோர் பிள்ளைகளில் அன்பு செலுத்தும்போது பிள்ளைகள் அதனையொரு பாதுகாப்பான இடமாகவே உணருவர். பெற்றோரிடமிருந்து நல்ல தொடர்பைப் பெற்றுக்கொள்ள முடியாது போன குழந்தைகள் சமூகமயமாதலுக்குட்படாமல் பாடசாலையிலும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுவர். பிள்ளைகள் சில நேரங்களில் தம்மால் கட்டுப்படுத்த முடியாத கோபம், அடம்பிடிப்பு போன்றவற்றைச் செய்யும் போது பெற்றோர் அவர்களைத் தண்டிக்காமல் வேறு ஏதாவது விடயங்களினூடாக அவர்களைத் திசைதிருப்பி மனமுறிவைத் தவிர்க்க வேண்டும்.


ஏனெனின் இப்பருவத்தில் அவர்களின் மனவெழுச்சி தற்காலிகமானதாகவே இருக்கும். பெற்றோரால் மனவெழுச்சியின்போதான சந்தர்ப்பங்கள் சரியாகக் கையாளாப்படாவிட்டால் பிள்ளைகளிடையே உளவியல் பாதிப்புக்களும் ஏற்படலாம். குழந்தை பிறந்து சில வாரங்களில் தாயுடனும் அதனைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களுடனும் இன்னும் சில காலத்திற்குப் பின் ஒத்த வயதினர் ஆகியோருடனும் இணைந்து செயற்பட முயற்சிக்கும் போது சமூகமயமாதலுக்குட்பட்டு சமூகத்துடன் இணைந்து செயலாற்றும் மனநிலையைப் பெறும். இவ்வாறு சிறந்த சமூகமயமாதல் பண்பினை வளர்க்க இடமுண்டு. ஆசிரியருக்குப் பிள்ளையின் சமூக மனவெழுச்சி பற்றிய அறிவும் இன்றியமையாத ஒன்றாகவே காணப்படுகிறது. இதனை அறிந்து பிள்ளையின் முன்பள்ளிச் செயற்பாட்டினைச் சிறப்பாகத் திட்டமிட முடியும். இவ்வறிவோடு பிள்ளைகளைக் குழுச்செயற்பாடுகளில் ஈடுபடச்செய்தல் அதாவது குழு விளையாட்டு, நடனம், உரையாடல்கள் கைகுலுக்கல்கள் போன்றவற்றின் மூலம் பிள்ளைகளைச் சமூகமயமாக்கல் அதன் மூலம் பிள்ளைகளிடையே அன்பு, பாசம்,  ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு போன்ற நற்பண்புகளை விருத்தியடைச் செய்ய முடியும்.


மொழிவளர்ச்சியானது குழந்தைகள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தவும் பிறரின் கருத்துக்களைச் செவிமடுக்கவும் இன்றியமையாத ஒரு திறனாகக் காணப்படுகிறது. குழந்தையானது சூழலை அறிந்து கொள்ளவும் பொருட்கள் செயல்கள் ஆகியவற்றின் பெயரை அறியும் போதே சூழலை புதிய அமைப்பில் நோக்குகிறது. மொழி மூலம் தன்சூழலைப்பற்றி பேசவும் சிந்திக்கவும் மொழியினூடாக முனைகிறது. மொழிமூலம் பிறதொடர்புகள் விரிவடைந்து சூழல்பற்றிய விளக்கமும் கிடைக்கும்.


மொழிவளர்ச்சியடைய சமூகவகுப்பு முக்கிய காரணமாக இருக்கின்றதென பேர்ணஸ் ரீன் குறிப்பிடுகிறார். முதிர்ச்சி, பயிற்சி இரண்டும் மொழிவளர்ச்சிக்கு வேண்டியனவாகும். குழந்தைகள் ஆரம்பத்தில் பல்வேறுபட்ட ஒலிகளை எழுப்புவதுடனும் குடும்ப அங்கத்தவர்கள் மூலம் எழுப்பப்படும் ஒலிகள் மூலமும் தனது மொழிவிருத்திக்கு தேவையான அறிவைப் பெறுகிறது. எனினும் பத்துமாதமளவிலேயே பாவனை செய்யத்தொடங்கும். ஒருவருடத்தின் பின் குழந்தை கையாளும் சொற்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனினும் ஒன்றரை வருடங்களின் பின் கையாளும் சொற்களின் எண்ணிக்கை விரைவாக  அதிகரிக்கும்.


ஐந்து வயதளவில் சுமார் 5000 சொற்களைக் கையாளும் திறனைப் பெற்றுக்கொள்வர். ஒரு சொல்லிலிருந்து 6 அல்லது 8 சொற்களைக் கொண்ட வசனங்களைப் பாவிக்குமளவிற்கு மொழிவளர்ச்சியடையும். மூன்று வயதாகும் போது தன்மயமான விடயங்களைத் தவிர்த்து சூழல்சார் விடயங்களைப் பேச எத்தனிக்கும். இந்நிலையில் பேசவும் தன்கருத்தைப் பரிமாறவும் பிறர் கருத்தை ஏற்கவும் பழகும். நுண்மதியானது மொழிவிருத்தியல் அதிக பங்கு வகிக்கிறது. குறைந்த நுண்மதியுடைய குழந்தைகள் தாமதமாகவே பேசத்தொடங்குவர். குடும்பத்தில் அங்கத்தவர் கறைந்த எண்ணிக்கையில் காணப்படல் தனித்த சூழல் போன்றன பிள்ளைகள் தாமதமாகப் பேசக்காரணங்களாகவும் அமையும். தொலைத்தொடர்பு சாதனம், பத்திரிகை, சஞ்சிகை, குடும்ப அங்கத்தவர்கள் அதிகமாகக் காணப்படல் என்பன பிள்ளையின் மொழிவிருத்தியை துரிதப்படுத்தும். பெற்றோர் குழந்தைகளுடன் தொடர்ந்து மழலை மொழியில் பேசுவதனைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் இதனைக் குழந்தைகள் வழக்கமாக்கிக்கொள்வர்.


குழந்தை வளர்ச்சி தொடர்பான அனுபவத்தினூடாக எவ்வாறு மொழிவிருத்தியை ஏற்படுத்தலாமெனின் குழந்தைகளைத் தமக்கிடையே உரையாட விடலாம். ஆசிரியர் பிள்ளைகளுக்கு இடையேயான உரையாடலின் மூலம் அதிக அறிவு வளர்க்கப்படுகிறது. சமவயதுக் குழுக்களுக்கிடையே ஆசிரியர் பாடி  கதைகளைக் கூறிவிட்டு அதனைக் குழந்தைகளிடம் செய்து காட்டும் படி தூண்டுதல், சந்தைகள், பொருட்காட்சிகள் நடாத்தி பொருட்களின் பெயர்களைக் கூவி விற்கச் செய்தல், படம் பார்த்துக் கதை கூறச் செய்தல், வர்ணப்படங்களைக் காண்பித்து அதன் பெயர்களை உச்சரித்துக் காட்டல், குழந்தைகளுடன் மழலை மொழியில் பேசாமல் சிறந்த உச்சரிப்பை உச்சரித்தல்  இயற்கை ஒலிகளைக் கேட்க வைத்தலும் அதனைப் போல ஒலியெழுப்பக்  கற்றுக் கொடுத்தலும் எல்லா மொழிகளிலும் கற்பித்தல் அதாவது சிறுசிறு சொற்கள், வசனம் போன்றவற்றைக் கற்பித்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் மொழிவிருத்தி ஏற்படுத்தலாம். இவ்வாறு செய்தல் ஆசிரியரின் இன்றியமையாத பணியாகும்.


அதே போல் அறிவுசார் வளர்ச்சி பற்றிய அறிவும் வெற்றிகரமான முன்பள்ளி ஆசிரியருக்கு இன்றியமையாததாகும். அறிவுசார் எனும் சொல்லானது அறிவு, ஞாபகம், நினைவு, பிரச்சினைகளைத் தீர்த்தல்  எண்ணக்கருக்களை சிந்தித்தல் போன்ற அறிவாற்றலுக்குரிய அம்சங்களை உள்ளடக்கியிருக்கும். அதனை ஏனைய வளர்ச்சிகளை இனங்காண்பது போன்று இலகுவானதன்று. இது தொடர்பான ஆய்வுகளைச் சுவீடன் நாட்டைச்சேர்ந்த பியாஜே எனுமறிஞர்  The psychology of Intelligence (1950) எனும் நூலில் தகவல்களை முன்வைக்கிறார். தனது மூன்று பிள்ளைகளையும் முப்பது வருடங்கள் அவதானிப்பு சிகிச்சை முறைகளில் Clinic method ஆய்வுசெய்து செய்து அறிவுசார் கொள்கையை முன்வைத்தார்.


அறிவுசார் விருத்திச் செயன்முறையில் முதலிரு வருடங்களிலேயே சூழலுக்குரிய தூண்டில்கள் பெறும் முக்கியத்துவத்தை முதலில் எடுத்துக்காட்டியவராவார். 3-4 வயதுகளிலேயே ஏறக்குறைய 50% நுண்ணறிவு வளர்ச்சி பிள்ளைகளிடையே ஏற்படுகிறது என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது வேறெந்தப் பருவத்திலும் ஏற்படுவதில்லை. எனவே இக்காலப்பகுதியில் பெற்றோர் சிறந்த நுண்ணறிவு விருத்திக்கான அத்திவாரத்தைப் பிள்ளைகளுக்கிட வேண்டும். இது அவர்களின் எதிர்காலத்திற்கு பேருதவியாக அமையுமென்பது திண்ணம்.


இன்னும் ஆரம்ப அறிவுவிருத்தி தொடர்பாக ஆசிரியர் அறிந்திருப்பது முக்கியமானதாகும். குழந்தைகளின் அறிவு, நினைவாற்றல்,  ஞாபகம் எவ்வாறு வளர்ந்துள்ளது. எவ்வாறு அறிவுவிருத்திக்கு உதவலாம் போன்ற திட்டமிடல்களைக் கொண்டிருப்பர். 

முன்பள்ளி ஆசிரியரானவர் அனுபவத்தினூடாக அறிவை ஊட்டும்போது புதிர்கள், விடுகதைகள் போன்றவற்றைக் கேட்டல், விரல்கள், கட்டைகள், புளியம்விதைகள் போன்றவற்றைக் கொண்டு எண்ணுதலில் ஈடுபடுத்தல், படங்களுக்கு நிறந்தீட்டச் செய்தல், சூழலிலுள்ள கழிவுப் பொருட்களை வைத்து ஆக்கங்களைச் செய்ய வைத்தல், உதாரணமாக தேங்காய்ப்பூ, சணல், பஞ்சு, பருப்பு, மரத்தூள், போன்றவற்றைப் பயன்படுத்தி ஆக்கங்களைச் செய்ய வைத்தல். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்ய பிள்ளையைக் கடைக்கு அனுப்பிச் சில பொருட்களை வாங்கி வரச் செய்தல், குறிப்பிட்ட பொருட்களைக் கொடுத்து வித்தியாசங்களை இனங்காணச் செய்தல். அதாவது சிறிய, பெரிய வித்தியாசமான உருக்களை இனங்காணச் செய்தல் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்குச் சலிப்படையாமல் பதிலளித்தல், களிகள் மூலம் உருவங்களை வடிவமைத்தல் பிரச்சினையின்போது குழந்தையுடன் உளப்பூர்வமாக உரையாடி தீர்வைக் காண வைத்தல். இக்கருத்தையே ரூசோ வலியுறுத்துகிறார். முன்பள்ளி ஆசிரியர் பிள்ளையின் சிந்தனையைத் தூண்டும் விதமாகக் கேள்வி கேட்க வேண்டும். அதனூடாக அவர்களிடமிருந்தே பதில்களைப் பெறவேண்டும். உதாரணமாகக் கிளியின் நிறமென்ன? அது எவ்வாறு குரலெழுப்பும்? என்பன போன்ற வினாக்களைத் தொடுத்து அவர்களிடமிருந்து விடைகளைப் பெற வேண்டும். இதனூடாக நுண்ணறிவை வளர்க்கக் கூடியதாக அமையும். எனவே மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும்போது முன்பள்ளி ஆசிரியர் தன்னிடம் வரும் குழந்தைகளை அவர்களின் தன்மைகளை இனங்கண்டு அவர்களின் வளர்ச்சிக்கட்டம் பற்றிய அறிவுடன் வகுப்பறை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைச் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தல் அவசியமாகும். ஏனெனில் நிகழ்கால வகுப்பறைகளே எதிர்காலத் தலைவர்களைத் தீர்மானிக்கின்றன. இவ்வாறான அறிவு அனுபவத்துடன் கற்பித்தலில் ஈடுபடலானது பிள்ளைகளின் முன்பள்ளிச் செயற்பாட்டில் சிறந்த விருத்தியை ஏற்படுத்தலாம்.


பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளில் விருத்தியை ஏற்படுத்துவதற்காகவே இலங்கை அரசு 5E Methods, smart classes, play schools, early childhood education, pre-school courses போன்றவற்றினை ஏற்படுத்தியும் நடைடுறைப்படுத்தியும் உள்ளது. ஆசிரியர்களுக்குச் சுதந்திரமாகக் கற்கக்கூடிய சூழலை ஏற்படுத்தி இருப்பதோடு 2017ஆம் ஆண்டிண் ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருளாகக்  ‘கற்பித்தலில் சுதந்திரம், ஆசிரியர்களை வலுப்படுத்தல்’ என்பன அமைந்திருந்தது. அதன் நோக்கமாகப் பிள்ளைகளின் கல்வி விருத்தியே அடிப்படையாக்கப் பட்டுள்ளது.


எனவே பிள்ளைகளின் வளர்ச்சி பற்றிய பூரண அறிவுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடலால் சிறந்த முறையில் முன்பள்ளிப் பிள்ளைகளிடையே விருத்தியை ஏற்படுத்துவதோடு, நவீன சூழலுக்கேற்றவாறு ஆற்றலும் ஆளுமையுமுள்ள இளைய தலைமுறையினரின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட முடியுமென்பதில் சிறிதும் ஐயமில்லை

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad