யாழ்ப்பாண பாரம்பரிய பண்பாடு
யாழ்ப்பாணம் மிக நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள ஒரு பிரதேசமாகும். இப் பிரதேசப் பாரம்பரிய பண்பாட்டம்சங்கள் மிக நீண்ட வரலாற்று பாரம்பரியத்தை உடையதுடன் தனித்துவமானவையாகவும் காணப்படுகிறது.
அவையாவன மொழி,மதம்,சடங்கு சம்பிரதாயங்கள், விவசாயம் தொழில்நுட்ப முறைகள்,நாட்டுப்புற இலக்கியங்கள், கட்டிடஅமைப்பு முறை,மடம் ,சுமைதாங்கி, ஆவுரஞ்சி ,ஆலயங்கள் போன்றனவாகும்.
மொழி
யாழ்ப்பாணத்தில் காணப்படும் தமிழ் மொழி ஏனைய மொழிக் கலப்புக்கள் குறைந்த தூய மொழியாக காணப்படுகிறது. சங்ககாலந் தொட்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி பயன்பாட்டில் காணப்படுகிறது. ஏனைய பிரதேசங்களை விட பேச்சு வழக்கிலும் எழுத்தாக்கங்களிலும் தூய தமிழே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
மதம்
இந்து மதம் இப்பிரதேசத்தில் தனித்துவமான வகையில் வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது. ஆரம்பகாலங்களில் இயற்கை வழிபாட்டோடு இணைந்த வகையில் பல மதம் சார் சடங்குகள் இடம் பெற்றதுடன் சில பிரதேசங்களில் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. வரலாற்று பெருமை மிக்க நகுலேஸ்வரம் சந்நிதி நல்லூர் முதலிய ஆலயங்களுடன் வைஸ்ணவ ஆலயமான வல்லிபுரமும் சிறப்பான ஆலயமாக காணப்படுகிறது.
அத்துடன் காவடி பாற்செம்பு தீமிதித்தல் முதலிய பல்வேறுபட்ட சடங்குகளும் மதத்துடன் இணைந்த வகையில் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது.
சடங்குகளும் சம்பிரதாயங்களும்
யாழ்ப்பாண பண்பாட்டில் ஓர் மனித பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் இணைந்த வகையிலேயே காணப்படுகிறது. உதாரணமாக காதுகுத்தல் சோறூட்டுதல் திருமணம் என பல்வேறுபட்ட சடங்குகள் காணப்படுகிறது.
அத்துடன் சமய நம்பிக்கையான குழந்தையினை விற்றுவாங்குதல் முதலிய பல சடங்கு முறைகள் அன்று தொட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளன. அத்துடன் விழாக்கள் என்ற வகையில் தைப்பொங்கல் கார்த்திகை விளக்கீடு சித்திராப் பௌர்ணமி போன்ற பல விழாக்களும் மக்கள் வாழ்வோடு இணைந்து காணப்படுகின்றது.
இவ் விழாக்களோடு இணைந்த வகையில் ஊஞ்சல் போர்த்தேங்காய் அடித்தல் கிளித்தட்டு முதலிய பல விளையாட்டுக்கள் மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்து காணப்படுகிறது.
விவசாயம்
யாழ்ப்பாண மக்களது முக்கிய தொழிலாக மழை கிணற்று நீரினை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் காணப்படுகிறது. பாரம்பரியமாக நெற்செய்கை வெங்காயம் புகையிலை மிளகாய் மற்றும் காய்கறிகளே பெருமளவுக்கு பயிரிடப்படுகின்றன.
இவ் தொழில் முறையில் உழுதல் சூடடித்தல் புகையிலையை பதனிடுதல் பொருட்களை பழுதடையாது நீண்ட நேரம் பாதுகாத்தல் என்பவற்றுக்கு பல்வேறுபட்ட நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதேச மக்களது தனித்துவமான உணவுகளாக நெல் அரிசிச்சோறு ஒடியற்கூழ் பிட்டு கொழுக்கட்டை பனை பதார்த்தங்கள் என்பன காணப்படுகின்றன.
தொழில்நுட்பமுறைகள்
ஆரம்பகாலந்தொட்டு வேலையினை இலகுவாக்கும் வகையில் பல்வேறுபட்ட தொழில்நுட்பங்கள் உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக நீர் ஊற்றுதல் எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தல் மா அரைத்தல் போன்றவற்றிற்கு எளிய வகையிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டுப்புற இலக்கியங்கள்
பாமரமக்களால் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலான இலகுவான மொழி நடையிலான பாடல்கள் நாடகங்கள் இலக்கியங்கள் என்பன பரம்பரை பரம்பரையாக செவிவழியாகப் பேணப்பட்டு வந்துள்ளன.
கட்டிட அமைப்பு முறை
மடம்
யாழ்ப்பாண மக்களது பாரம்பரிய கட்டிடக் கலை அம்சங்களில் மடம் முக்கியமானதாகும். எமது பண்பாட்டில் மடங்களின் தோற்றம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
ஆரம்ப காலத்தில் சன்னியாசிகளும் துறவிகளும் தங்குவதற்காக அமைக்கப்பட்ட மடங்கள் வர்த்தக விருத்தியின் விளைவாக நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தமது களைப்பினை நீக்கி பாதுகாப்பாக பொருட்களை வைத்து ஓய்வு பெறும் இடங்களாக மாற்றம் பெற்றன.
கி.பி 1ம் நூற்றாண்டு அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டு மூலம் வட இலங்கைப் பரப்பில் பல மடங்கள் காணப்பட்டதனை அறிய முடிகிறது.
ஐரோப்பியர் காலத்திற்கு முற்பட்ட மடங்களினது எச்சங்கள் கண்டறியப்படாமைக்குரிய காரணங்களாக ஆரம்ப காலத்தில் நிழல்தரு பாரிய மரங்களும் அதனைத் தொடர்ந்து அழியக்கூடிய பொருட்களால் உருவாக்கப்பட்ட மடங்களுமே காரணமாகும்.
சுமைதாங்கி
நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தமது பொருட்களை இறக்கி களைப்பாறும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஓர் அம்சமே இதுவாகும். சம்பிரதாய ரீதியாக ஓர் தாய் குழந்தையினை பிரசவிக்காமல் இறக்கும் பட்சத்தில் அவரது பாரம் குறையும் நோக்கில் ஆத்ம சாந்தி அடைய வேண்டி இவ் அமைப்பு உருவாக்கப்படுவது சம்பிரதாயம் ஆகும். தொண்டமனாற்றுப் பகுதியில் இன்றும் இறந்தவரது நினைவு நாளில் பூசை செய்து வழிபடுவதனைக் காணக்கூடியதாக உள்ளது.
ஆவுரஞ்சி
நீரினை அருந்தும் கால்நடைகளுக்கு ஏற்படும் திணைவு எனும் கடியினையே நீக்கும் முகமாக உருவாக்கப்பட்ட நீண்ட கல்லினையே இது குறிக்கும். பெரும்பாலும் இவ் 3 அம்சங்களும் ஒன்றாகவே காணப்படுகிறது. அத்துடன் நீர்நிலையும் காணப்படுவது வழமை.
ஆலயங்கள்
யாழ்ப்பாணப் பாரம்பரிய மக்களது மதமாக இந்துமதமே பெருமளவு காணப்படுகிறது. ஆரம்பகாலங்களில் இயற்கைத் தெய்வங்களினை இயற்கையாக அமைந்து காணப்படும் மர நிழல்கள் சிறிய கட்டிடங்கள் என்பவற்றில் வழிபாடுகள் இடம்பெற்று வந்தன. இவ் வழிபாட்டில் மடை பரவுதல் முதலிய பல சடங்குகள் ஒன்றிணைந்து காணப்பட்டிருந்தன.
கால ஓட்டத்தில் தென்னிந்திய திராவிடக் கலையின் செல்வாக்கு காரணமாக நிரந்தரமான கட்டுமானங்களை உடைய பல கோயில்கள் தோற்றம் பெற்றது. இவை பிரதேசத்தில் கிடைக்கும் சுண்ணாம்பு முருகைக் கற்களைப் பயன்படுத்தி தென்னிந்தியக் கலைப்பாணியில் அமைக்கப்பட்டிருந்தது.
ஊதாரணமாக மாவிட்டபுரம் நகுலேஸ்வரம் நல்லூர் வல்லிபுரம் முதலிய ஆலயங்களைக் குறிப்பிடலாம.; போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட 500 ஆலயங்களை அழித்துப் பெறப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு கோட்டைகளை அமைத்தாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றது. அத்தடன் பௌத்த மதம் சார்ந்த வழிபாட்டிடங்களும் இஸ்லாமிய சான்றாதாரங்களும் யாழ்ப்பாணப் பண்பாட்டோடு இணைந்த வகையிலே காணப்பட்டிருந்தது.