இலங்கையின் தேசிய சின்னங்கள்🇱🇰
இலங்கையின் தேசிய சின்னங்கள் என்பவை இலங்கையையும் அந்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கையர்களையும் அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, புவியியல் போன்றவற்றையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. இலங்கையின் தேசிய சின்னங்களாக தேசிய கீதம், தேசியக் கொடி, தேசிய இலச்சினை, தேசிய மலர், தேசிய மரம், தேசிய பறவை, தேசிய வண்ணத்துப்பூச்சி, தேசிய இரத்தினக்கல், தேசிய விளையாட்டு என்பன காணப்படுகின்றன. இவை பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன. மேலும் சில சின்னங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், உள்ளூரில் தேசிய சின்னங்களாகக் கருதப்படுகின்றன.
இலங்கை அரசியலமைப்புச் சட்டம் தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய தினம், தேசிய மொழி ஆகியவற்றை வரையறை செய்கின்றது. தேசிய அரசுப் பேரவையினால் அரசியலமைப்புச் சட்டம் 7 செப்டம்பர் 1978 அன்று பிரகடணம் செய்யப்பட்டது. 14 நவம்பர் 1987 அன்று இலங்கை நாடாளுமன்றம் இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் மூலம் சிங்கள, தமிழ் மொழிகளை தேசிய மொழிகளாக அறிவித்தது.
இலங்கையின் தேசிய சின்னங்கள்🇱🇰
1. இலங்கையின் தேசிய மரம் - நாகமரம்
2. இலங்கையின் தேசியப் பறவை - காட்டுக்கோழி
3. இலங்கையின் தேசிய மிருகம் - யானை
4. இலங்கையின் தேசிய மலர் - நீலஅல்லி
இலங்கையின் உத்தியோகபூர்வ தேசிய சின்னங்களாக தேசிய கீதம், தேசியக் கொடி, தேசிய இலச்சினை, தேசிய தினம், தேசிய மொழி, தேசிய மலர், தேசிய மரம், தேசியப் பறவை, தேசிய வண்ணத்துப்பூச்சி, தேசிய இரத்தினக்கல், தேசிய விளையாட்டு என்பன காணப்படுகின்றன. ஆயினும் சில சின்னங்கள் உத்தியோகபூர்வமற்ற இலங்கையின் தேசிய சின்னங்களாகக் கருதப்படுகின்றன.
தேசிய கீதம்
இலங்கையின் தேசிய கீதமாக “சிறீ லங்கா தாயே” இரவீந்திரநாத் தாகூரினால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்பு இது ஆனந்த சமரக்கோனால் 1940 ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பண்ணமைக்கப்பட்டது. பின் 1951 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய கீதமாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சிங்களத்தில் எழுதப்பட்டு பின்னர் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது. 4 பெப்ரவரி 1952 அன்று, நான்காவது சுதந்திர தின விழாவின்போது முதன்முதலாக பாடப்பட்டது.
தேசியக் கொடி
இலங்கையின் தேசியக் கொடியில் வலது முன்னங்காலில் வாள் தாங்கிய சிங்கம் சிங்களவரையும் முதலாவது சிங்கள அரசனையும் குறிக்கிறது. பின்புலத்திலுள்ள பழுப்புச் சிவப்பு / கடும் சிவப்பு நிறம் பௌத்த மதத்தைக் குறிக்கிறது. நான்கு மூலைகளிலும் உள்ள அரச இலை பௌத்தத்தின் நான்கு உயர்ந்த உண்மைகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. சுற்றியுள்ள பொன் மஞ்சள் நிற எல்லை பௌத்த துறவிகளின் சமூகத்தைக் குறிக்கிறது. கொடியின் இடது பக்கமுள்ள பச்சை, குங்குமப்பூ நிறங்களினாலான செங்குத்தான இருகோடுகள் முறையே முஸ்லிம், தமிழ் சமூகங்களைக் குறிக்கின்றன. தற்போதுள்ள கொடி 1950 இல் உள்வாங்கப்பட்டது.
தேசிய இலச்சினை
இலங்கையின் தேசிய இலச்சினை இலங்கை அரசாங்கத்தினால் நாட்டின் நிர்வாக, அரசாங்க தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய குடியரசு இலச்சினை 1972 இல் நாடு குடியரசு அரசாக அறிவிக்கப்பட்டதில் இருந்து பாவனையில் உள்ளது. இவ்விலச்சிணையில் பழுப்புச் சிவப்பு பின்புலத்தில் முன்னங்காலில் வாள் தாங்கிய சிங்கம் அமைந்திருக்க, அதனைச் சுற்றி நீல அல்லியின் பூவிதழ்கள் உள்ளன. மேலும், நெல் கொத்து, தானியக் குடுவை, தர்மசக்கரம், சூரியன், சந்திரன் ஆகியன காணப்படுகின்றன.
தேசிய தினம்
இலங்கை பிரித்தானியாவிடமிருந்து 4 பெப்ரவரி 1948 அன்று சுதந்திரமடைந்தது. இதனால், ஒவ்வொரு வருடமும் 4 பெப்ரவரி அன்று சுந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 4 பெப்ரவரி இலங்கையின் தேசிய தினமாகும்.
தேசிய மொழி
இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் உள்ளன. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காம் அத்தியாயம் 19 ஆம் சரத்தின்படி, சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய மலர்
26 பெப்ரவரி 1986 அன்று இலங்கையின் தேசிய மலராக நீலோற்பலம் பிரகடனப்படுத்தப்பட்டது. இம்மலர் இலங்கையின் பல நீரோடையிலும் பொதுவாக வளரக்கூடியது. இது நீலோற்பம், நீலாம்பல், நீல அல்லி, நீலத்தாமரை ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இப்பூ உண்மை, தூய்மை, ஒழுக்கம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதப்படுகின்றது. இது புத்தருடனும் இலங்கையின் வரலாற்றில் சடங்கு மலராக பயன்பாட்டுடனும் தொடர்புபட்டது.
தேசிய மரம்
26 பெப்ரவரி 1986 அன்று இலங்கையின் தேசிய மரமாக நாகமரம் அறிவிக்கப்பட்டது. இது இலங்கையின் வளரும் மரம், பயன்பாடு, வரலாற்றினதும் கலாச்சாரத்தினதும் முக்கியத்துவம், தனித்துவத்துவம், பரம்பல், நிறம், இயற்கை போன்ற காரணங்களினால் தெரிவு செய்யப்பட்டது. தேரவாத பௌத்தம் இம்மரத்தை ஞானத்தின் அடைதலுக்கான ஒன்றாகக் கருதுகின்றது.
தேசியப் பறவை
இலங்கைக் காட்டுக்கோழி இலங்கையின் தேசியப் பறவையாகும். இது இலங்கைக்கு உரித்தான பறவையாகும். இது பொதுவாக தேசிய பூங்காக்கள், கானகம், அடர்த்தியான குறுங்காடுகள் ஆகியவற்றில் காணப்படும்.
தேசிய வண்ணத்துப்பூச்சி
இலங்கை அழகி என்ற வண்ணத்துப்பூச்சி இலங்கைக்குரியதும் தேசிய வண்ணத்துப்பூச்சியுமாகும். மேலும், இது இலங்கையிலுள்ள பெரிய வண்ணத்துப்பூச்சியும், பரந்து காணப்படும் வண்ணத்துப்பூச்சியுமாகும். மினுமினுப்பான கருப்பு நிறத்தில் பிரகாசமான மஞ்சள் நிறத்தையும், வசிகரமான அலங்காரத்தையும் கொண்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல்
சபையர் நீலக் கல் இலங்கையின் தேசிய இரத்தினக்கல் என ஒக்டோபர் 2003 இல் பிரகடணப்படுத்தப்பட்டது. 2 ஒக்டோபர் 2003 அன்று 4.50 இலங்கை ரூபா பெறுமதியான தபால் தலை அறிவிப்பைத் தொடர்ந்து வெளியானது. இலங்கை நீலக்கற்களுக்கு புகழ்பெற்ற ஒரு இடமாகும்.
தேசிய விளையாட்டு
கைப்பந்தாட்டம் இலங்கயைின் தேசிய விளையாட்டாக 1991 இல் அறிவிக்கப்பட்டது. கைப்பந்தாட்டம் இலங்கைக்கு 1916 இல் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. அது அறிவிக்கப்படுமுன் இலங்கையின் தேசிய விளையாட்டாக எல்லே காணப்பட்டது.