இலங்கையின் கல்வி வளர்ச்சி
கி.மு. 3ம் நூற்றாண்டில் அர்கத் மகிந்தர் இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியமை அப்போதைய சிங்கள இராச்சியத்தில் நிகழ்நத சிறப்பாகக் குறிப்பிடத்ததொரு சம்பவமாகும். இவ்வகையில் பௌத்தத்தின் வரவையடுத்து விகாரைகள் பௌத்த மதகுருமாருக்குத் தானமாக வழங்கப்பட்டன. இவ்விகாரைகள் பிக்குமார்கள் வதிவிடங்களாகவும், கல்வி பயிலும் இடங்களாகவும் படிப்படியாக வளர்ந்து பௌத்தக் கல்வி அளிக்கும் நிலையங்களாக மாறின.
பௌத்த கல்வியின் பிரதான நோக்கம் பௌத்த சமயத்தை வளர்ச்சி அடையச் செய்வதனுடாக நல்லொழுக்க நற்பண்புகளை வளர்த்தலும் சமய வாழ்க்கைக்கு வழிகாட்டுவதுமாகும். அதாவது, இலங்கை சமுதாயத்தை படிப்படியாக பௌத்த கலாச்சாரத்திற்கு வழிப்படுத்தி அரசர்கள், தலைவர்கள், விவசாயிகள், கைவினை முற்றியோர், தொழிலாளர் முதலியோரை வழிகாட்டலுமாகக் காணப்பட்டது. இந்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள தேரவாத, மகாயன சிந்தனைகளின் மூலம் கல்வி புகட்டப்பட்டது.
பௌத்த கல்விக் கலைத்திட்டத்தில்; சுயமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இங்கு பிக்குகட்கும், பொதுமக்களுக்கும் என்று பாடங்கள் வகுக்கப்பட்டன. நிக்காய சங்கராவில் கூறிய பொது மக்களுக்கான சில பாடங்கள் பிக்குகள் கற்கத் தடை விதிக்கப்பட்டது. பாடவிதானமானது 18 சாஷ்திரங்கள் 64 கலைப் பாடங்களை உள்ளடக்கி இருந்தாக பூஜாவலியின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஆரம்பக் கல்வியளித்த சிற்றூர் பள்ளிகளில் வாசிப்பு, எழுத்து, என்னும் பாடங்கள் சார்பான அடிப்படைப் போதனை மட்டும் அளிக்கப்பட்டது. உதாரணமாக வடங்கவி பொத்த என்னும் செய்யுள் தொகுதி கண்டி இராச்சிய சிற்றூர் பள்ளிகளில் பயில்விக்கப்பட்டது. அங்கு போதித்த வாசிப்பு நூல்களாவன நம்பொத்த, மகுல்லக்குன, கணதேவிஹெல்லா, பத்தினிஹெல்ல, புத்த கஜ்ஜாய, சகஸ்கடய எழுத்துப் பயிற்சிக்கு கோயிற் பள்ளியின் கலைத்திட்டத்திலே ஏட்டுக்கல்விக்குரிய பாடங்களும் தொழில் கல்விக்குரிய பாடங்களும் இடம் பெற்றன. இதில் பௌத்த சமயப் போதனை இன்றியமையாத அங்கமாக இடம்பெற்றது. மேலும், சோதிடம், மருத்துவம் போன்ற உயர் பாடங்களும், பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழித்துறைப்பாடங்களும் அங்கு முக்கியத்துவம் பெற்றன.
உச்சநிலைக் கல்வி வழங்கிய பிரிவேனாக்களின் விரிந்த, பரந்த கலைத்திட்டதிலே அடங்கிய பாடங்களாவன சமயத்துறை அறிவு, வேதங்கள், சமய ஒப்பீட்டுக் கல்வி, சிங்கள, பாளி, சமஸ்கிரத மொழிகள், வரலாறு, இலக்கணம், தர்க்கம் போன்ற பண்பாட்டுதுறையறிவுப் பாடங்களுடன் உயர் சிறப்புத் தொழிற் பாடங்களான சட்டம், வானவியல், மருத்துவம், கட்டடக் கலை, ஓவியம் போன்றனவும் இடம் பெற்றன.
பௌத்த கல்வி அமைப்பின் கற்றல், கற்பித்தல் முறைகளாக வாய்மொழி மரபு முறைகள்; பயன்படுத்தப்பட்டன. இவற்றிக்கு உதாரணங்களாக வாய்மொழிப் பாரம்பரியத்தின் அங்கங்களான கலந்துரையாடல், சொல்லாடல், ஓதல், உச்சாடனம், விவாதம், சொற்போர், வினாவிடை, ஒப்புவித்தல் போன்ற முறைகள் அனுசரிக்கப்பட்டன. இதன் பயனாகப் பொருள் அறியாத மனனம் அல்லது உருப் போடுதல் நேரிட்டது.
இக்கல்வி முறைமையின் ஆசிரியர்களின் பெரும்பாலானோர் பௌத்த துறவியர் ஆவர். காலப்போக்கிலே துறவியர்; அல்லாத கல்விமான்களும் பிரிவேனாக்களிள் ஆசிரியர்களாகச் சேர்ந்து கொண்டனர்.
இலங்கையின் பண்டைய உள்நாட்டுக் காலக் கல்வியின் முறையின் ஒழுங்கமைப்பு கட்டமைப்பானது தெளிவாய் ஆராயக்கூடிய மூன்று கல்வி நிலைகள் உள்ளன. ஆவையாவன :
i. ஆரம்ப நிலை கல்வியளித்த சிற்றூர்பள்ளி – கிராமப் பாடசாலை (குருகெதர)
ii. இடைநிலை கல்விபுகட்டிய கோயிற்பள்ளி
iii. உயர்நிலை கல்வியளித்த பிரிவேனா
குருவின் வீடே சிற்றூர் பள்ளியாக விளங்கியது. சிற்றுர்களில் வசித்த பெரும்பாலன பிள்ளைகள் இவ்வாறான வீட்டுமையச் சிற்றூர் பள்ளிகளில் ஆரம்ப நிலை கல்வி பெற விரும்பின. இப்பள்ளிகள் மேலை நாட்டுப் பாடசாலைக் கல்வி இலங்கையில் அறிமுகமாகும் வரை தொடர்ந்து இயங்கியது.
இடைநிலைக் கல்வி பெற விரும்பியோர் இக்கோவிற் பள்ளிகளில் சேர்ந்து கொண்டனர். இத்தகைய பள்ளிகள் தமது பாராமரிப்புக்காக புரவலர்களான மன்னர்கள் வழங்கிய மானிய நிலம் போன்ற நன்கொடைகளைப் பெரிதும் சார்ந்திருந்தனர். துறவிகள், துறவியர் அல்லாதோர் ஆகிய இரு சாராரும் கல்வி பயில அனுமதிக்கப்பட்டட பிரிவேனாக்கள் பண்டைய இலங்கைக் கல்வியமைப்பில் உச்சிநிலைக் கல்வி வழங்கப்படும்.
நிலையங்களாகத் திகழ்நதன. மகாவிகாரை, அபயகிரி, ஜேதவனராமய என்பன அனுராதபுரத்தில் இருந்த முக்கியமான கல்வி நிலையங்களாகும். மேலும், சுநேத்திரதேவி, விகாமாதேவி, பத்மாவதி, சிறிமேவன் போன்ற பிரிவேனாக்கள் கி.பி. 15 நூற்றாண்டில் சர்வதேச இலக்கியப் புகழ் பெற்ற துறவிகள் தலைமை வகித்தவையாகும்.
இக்கல்வி முறையில் மதிப்பீடானது மாணவர் மனனமிட்டு ஒப்புவித்தலை ஆசிரியர் சரி பிழை பார்ப்பதாக இருந்தது.
இக்கூற்றின் படி முறைசார் கல்வி முறையும் தன்னிறைவுப் பொருளாதாரமும் காணப்பட்டதாகவே கூறப்பட்ட போதிலும் இங்கு முழுமையான முறைசார் கல்வி முறை காணப்படவில்லை. இக்காலத்தில் பொருளாதார அமைப்புக்கு ஏற்ப முறைசாராக் கல்வி வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆரியர்கள் கொண்டுவந்த பொருளாதார முறைகள் பற்றிய அறிவு இந்நாட்டவர்களுக்கும் கற்பிக்கப்பட்டது.
அத்துடன் மானியமுறை பரிபாலன அமைப்பினுடாக மானியமுறை பொருளாதார முறையும் நடைபெற்றது. நாட்டின் நிலைப்பாட்டிற்கு அவசியமான அறிவும் பயிற்சியும் மானிய முறைச் சமுதாயத்திற்கு ஏற்ற முறையில் அவ்வவ் வகுப்பினருக்கு ஏற்ற முறையில் முறைசாராக் கல்வியினுடாக வழங்கப்படுகின்றது. உதாரணம்: யுத்த நுட்பம், வாள், ஈட்டி செய்வதற்கான நுட்பங்கள், நெசவு, உலோகத் தொழில், ஆபரண வேலைகள், குயவவேலைகள், தச்சு வேலைகள், உடை தயாரித்தல், வீடு நிர்மாணித்தல், சித்திர வேலைகள் முதலிய சகல துறைகளிலும் அறிவு திறனும் பெற்று வாழந்துள்ளார்கள்.
சகல துறைகளிலும் அறிவினை ஒரு முகமாக வழங்கப்படும் நிறுவன அமைப்புக் காணப்பட்டமைக்கான சான்றுகள் இல்லை. முறைசாராக் கல்வியினுடாகவே தமது அறிவு, திறன்களைப் பெற்றுக்கொண்டார்கள்.
பண்டைய கல்விமைப்பில் சமயத்துறைக் கல்விக்கும் அறநெறிக் கல்விக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பௌத்த குருமார்கள் உபதேசங்கள், கிரியைகள், சடங்குகள் எனும் முறைசாராக் கல்வி வழிகள் மூலம் பொதுமக்களின் உள்ளங்களில் ஒழுங்க விழுமியங்களைப் பதித்தார்கள்.
பெண்கள் கல்வி பயிலும் வாய்ப்பு தாழ்நிலையில் காணப்பட்டது. எனினும் நடனம், ஓவியம் போன்ற பாடங்களில் அவர்கள் உயர்சிறப்புத் தொழிற் கல்வி பெறும் வாய்ப்பு இருந்தது.
கல்வி முகாமை மன்னர்களின் பேராதரவில் செழுமை கண்டது. இந்த ஆதரவு சிங்கள இராச்சியங்களின் சீர்குலைவினால் கிடைக்காமல் போனதும் கல்வித்துறை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும்.
பிறநாட்டுப் படையெடுப்புக்கள் காரணமாகத் தென்மேற்குத் திசை நோக்கிய இடப்பெயர்ச்சியை அடுத்து நீரியலமைப்புச் சார்ந்த நாகரிகத்திற்கு தேவையான திறன்கள் வழக்கில் இல்லாதொழிந்தன. தொழில்துறைத் தொழில் பயிற்சியும் தேய்வுற்றது.