சந்திரயான்-1 Chandrayaan-1
சந்திரயான்-1 (Chandrayaan-1) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் சந்திரயான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலாப் பயணக்கலம் ஆகும்.
இது 2009 ஆகத்து வரை இயக்கத்தில் இருந்தது. இத்திட்டத்தில் ஒரு நிலா வட்டணைக்கலமும் ஒரு தரையிறக்க நிலா மொத்தல் கலமும் அடங்கியிருந்தன . இந்தியா இந்த விண்கலத்தினை முனைய ஏவூர்தி(PSLV-XL) ஐப் பயன்படுத்தி 2008 அக்தோபர், 22 இல் ஆந்திரப் பிரதேசம் சிறி அரிகோட்டா, சத்தீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது. இது இந்திய விண்வெளி நிகழ்ச்சிநிரலில் பேருந்தாற்றலை அளித்தது. ஏனெனில் இதன் வழி இந்தியா நிலாத் தேட்டத்துக்கான தொழில்நுட்பத்தை ஆய்வுவழி தானே தனித்து உருவாக்கியது. சந்திரயான்-1 விண்கலம் 2008 நவம்பர் 8 இல் நிலா வட்டணையில் செலுத்தப்பட்டது.
நிலா மொத்தல் கலம் சந்திரயான் வட்டணைக்கலத்தில் இருந்து பிரிந்து கட்டுப்பாடான பாணியில் இறங்கி, 2008 நவம்பர் 14 இல் நிலாவின் தென் முனையில் குதித்து மொத்தியது. எனவே இந்தியா நிலாவில் ஒரு பொருளை வைத்து வெற்றிகண்ட நான்காம் நாடாகியது. மொத்தல் கலம் சேக்கிள்டன் குழிப்பள்ளத்தில் 15.01 ஒபொநே நேரத்தில் மோதியது.மொத்திய இடம் சவகர் புள்ளி எனப்பெயரிடபட்டது.
இதன் முதன்மையான நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு கனிமங்கள், தனிமங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பருமான வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முனையச் செயற்கைக்கோள் ஏவுகலமான முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவி வட்டணையில் செலுத்தும். பின்னர் விண்கலம் தன்னகத்துள்ள முற்செலுத்த அமைப்பின் துணைகொண்டு 100 கி.மீ முனைய வட்டணையில் நிலவைச்சுற்றிவரும்படி நிலைநிறுத்தவும் திட்டமிடப்பட்டது.
இப்பணித்திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.திட்ட மதிப்பீட்டுத் தொகை 386 கோடி உரூபா ஆகும்.
இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.
இரண்டாண்டுகளுக்குள் நிலா மேற்பரப்பு முழுவதும் அளக்கையிட்டு மேற்பரப்பில் அமையும் வேதிம உட்கூற்களின் முழு தரைப்படத்தையும் அதன் நிலப்பொதிவியல் முப்பருமான உருவரையையும் பதிவு செய்ய கருதப்பட்டது. நிலா முனனை வட்டாரங்களில் பனிவடிவில் நீர் உறைய வாய்ப்புள்ளதால் அவை ஆர்வத்தோடு அலசப்பட்டன.
ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர், திறன்குன்றிய வெப்பக் கவசம், விண்மீன் தடங்காணி உட்பட பல தொழில்நுட்பக் கோளாறுகளை வட்டணைக்கலம் உணரத் தொடங்கியது; சந்திரயான்-1 தன் தகவல் பரிமாற்றத்தினை 2009 ஆகத்து 28 அன்று 20:00 ஒபொநே மணி நேரத்தில் நிறுத்தியது. உடனே இந்திய விண்வேளி ஆய்வு நிறுவனம் சந்திரயான்-1 இன் பணி நிறைவுற்றதாக அறிவித்தது. சந்திரயான்-1 இரண்டாண்டுகளுக்குப் பதிலாக 312 நாட்களே இயங்கியது; என்றாலும், இத்திட்டம் நிலாத் தண்ணீர் உட்பட பெரும்பாலான தன் அறிவியல் நோக்கங்களை வென்றெடுத்தது.
இந்த தேட்ட முனைவின் பல்வேறு சாதனைகளில் நிலா மண்ணில் பரவலாக நீர்மூலக்கூறுகள் பொதிந்துள்ளதைக் கண்டறிந்தமை சிறப்பானதாகும்.
இயக்கத்தை நிறுத்திய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, நாசா தன் தரை வீவாணி அமைப்புகளைக் கொண்டு 2016 ஜூலை 2 இல் சந்திரயான்-1 இன் இருப்பை நிலா வட்டணையில் நிலாவைச் சுற்றிக்கொண்டிருப்பதை மீளக் கண்டறிந்தது. தொடர்ந்து மும்மாத நோக்கிடுகளுக்குப் பின்னர் துல்லியமாக இரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை குத்துயரத்தில் 150 கிமீ முதல் 270 கிமீ வரை மாறும் அதன்வட்டணை இயக்கத்தை நாசா கண்டறிந்தது.
சந்திரயான்-1 வரலாறு
அன்றைய இந்திய முதன்மை அமைச்சரான அடல் பிகாரி வாஜ்பாய் 2003 ஆகத்து 15 இல் விடுதலை நாளன்றைய பேச்சில் சந்திரயான்-1 திட்டத்தை அறிவித்தார்.இந்தத் திட்டம் இந்திய விண்வெளி நிகழ்நிரலுக்கு ஓரு மாபெரும் உந்துதலை அளித்தது.[9] நிலாவுக்கான இந்திய அறிவியல் திட்டம் சார்ந்த எண்ணக்கரு 1999 ஆம்ஆண்டு இந்திய அறிவியல் கல்விக்கழகக் கூட்டத்தில் முதலில் எழுப்பப்பட்டது.
இந்திய விண்ணியக்கக் கழகம் இந்த எண்ணக்கருவை 2000 ஆம் ஆண்டுக்குக் கொண்டுசென்றது. விரைவிலேயே தேசிய நிலாத் திட்டச் செயலாண்மைக் குழு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை அமைத்தது. மேலும் அது இசுரோ இந்திய விண்வெளித் திட்டங்களுக்கான, குறிப்பாக நிலாப் பயணத்துக்கான தொழில்நுட்ப வலுவுள்ளதெனவும் முடிவெடுத்து அறிவித்தது.
2003 ஆம் ஆண்டு ஏப்பிரலில் 100 பெயர்பெற்ற கோள் அறிவியல், விண்வெளி அறிவியல், புவி அறிவியல், இயற்பியல், வேதியியல், வானியல், வானியற்பியல், பொறியியல், தொடர்பியல் புலங்களைச் சார்ந்த இந்திய அறிவியலாளர்கள் ஒன்றுகூடி விவாதித்து, செயலாண்மைக் குழுவின் நிலாவுக்கு விண்கலத்தை அனுப்பும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தன. ஆறு மாதங்களுக்குப் பிறகு, நவம்பரில் இந்திய அரசு நிலாப் பயணத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது