மனித உரிமையின் வரலாற்று வளர்ச்சி ஒரு தொகுப்பு
அறிமுகம்
உரிமைகள் என்பது ஒரு ஜனநாயக எண்ணக்கருவாகும். பல நூற்றாண்டு வளர்ச்சி தன்மையை கொண்டதாக உரிமைகள் காணப்படுகிறது. மனிதன் எது பற்றி சிந்தித்தாலோ , பேசினாலோ மனித உரிமைகள் பற்றிய உரையாடலில் ஈடுபடாமல் செல்வதில்லை. அந்த அளவுக்கு முக்கியமானது மனித உரிமையும் அதனுடனான வரலாற்று வளர்ச்சி பாதையும் ஆகும். மனித உரிமை என்பது திருப்திகரமான குடியியல் வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையும் அனுபவிப்பதற்காக மனிதர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை நிபந்தனைகள் ஆகும். இதன்படி உரிமைகளை பரந்த அடிப்படையில் குடியியல் உரிமை என்றும், அரசியல் உரிமைகள் என்றும் அரசியல் விஞ்ஞானிகள் பாகுபாடு செய்கின்றனர். குடியியல் உரிமைகளை பொருளாதார மற்றும் சமுக உரிமைகள் என மேலும் பாகுபாடு செய்கின்றனர். மேலும் விளக்கமாக கூறின் ஒருவரின் நல்வாழ்வுக்கு தேவையான சூழ்நிலையில் குறிப்பிட்ட ஓர் அரசு உருவாகுமாயின் அவ்வரசு உரிமைகளை வழங்கியுள்ள ஓர் அரசாக பிரகடனம் செய்யப்படும்.
மனித உரிமைகள் தொடர்பில் அறிஞர்களின் கருத்துக்கள்
பூரணமான சமுக வாழ்க்கையை அனுபவிக்க மனிதனுக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய சமூக கோரிக்கைகளே ஆகும். எனினும் இந்த கோரிக்கைகள் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபந்தனையாக இருக்க வேண்டும். இவ் உரிமையானது மனிதனுக்கு பிறக்கின்றமையால் இயற்கையாக கிடைக்க பெறலாம். இது இயற்கை உரிமை அல்லது ஒழுக்க உரிமை என்று கூறப்படுகிறது. சிலவேளை சட்டத்தின்பால் வரையறுக்கப்பட்ட சட்ட ரீதியான ஒழுக்க உரிமையாக இருக்கலாம். இது தொடர்பில் பல்வேறு அறிஞர்கள் தனது கருத்தினை கூறி மனித உரிமை பற்றிய தெளிவினை உருவாக்கி உள்ளனர். அந்த வகையில்
1.கோப் ஹவூஸ் - "சமுக நலனை பேணும் நிபந்தனைகளே உரிமைகள்" என்கிறார்.
2.ஹரோல்ட் லாஸ்வல்- "பிறருக்கு தொந்தரவு இன்றி ஒவ்வொரு மனிதனும் தனது ஆளுமையை வளர்த்து கொள்வதற்கான சூழலை சமூகத்தில் நிலைநிறுத்தி கொள்ளலே உரிமையாகும்.
3.ஜான் லோக்- "மனிதன் வாழ்வு ஆரம்பிக்க முதல் அதாவது மனிதன் இயற்கை நிலையில் வாழ்ந்த காலத்திலேயே இயற்கை உரிமைகளை பெற்றான் "என்றார்.
4.(ஒக்ஸ்போட் அகராதி):- "அறவகை ஆனதோ, சட்ட வகையானதோ ஒன்றை பெறுவதற்கான மனிதனுக்கு உள்ள உரித்து உரிமை" என்கிறது.
மனித உரிமைகள் என்பவை வரலாற்று ரீதியான சமயம் சார்ந்த கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டு இருந்தாலும் கூட, அவை மனிதனுடைய சமுக மாற்றத்தாலும் வரலாற்று உருவாக்கத்தாலும் வளர்ச்சி பெற்ற ஒரு துறை என்றே கூற முடியும். இன்றைய உலகில் மனித உரிமைகள் பற்றிய எண்ணக்கரு வளர்ச்சியடைந்து வருகிறது. மனித உரிமை பற்றிய நல்லெண்ண வெளிப்பாடுகள் மேற்குலக நாடுகளினாலே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. மனித உரிமைகளின் வளர்சிகளுக்கான நிதி, அதன் மேம்பாடுகளுக்கான திட்டங்கள், அதனை முன்னின்று செயற்படுத்துவது போன்றவற்றில் மேற்குலக நாடுகளே முன்னின்று செயற்பட்டு வருகின்றது.ஆனாலும் ஆசிய நாடுகளினாலேயே மனித உரிமை பற்றிய எண்ணக்கரு தோற்றம் பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன. அவற்றை பின்வருமாறு நோக்க முடியும்.
மனித உரிமைகளின் வரலாற்று அபிவிருத்தி
பண்பாடுகள் முதலியானவற்றில் உலக நாடுகள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும் கூட அந்தந்த நாடுகளில் தத்தமது குடிகளுக்கு பல காலமாகவே சில உரிமைகள் அடிப்படையாக வழங்கப்பட்டு வந்துள்ளன. மிகப் பழங்காலத்து கிரேக்க அரசு அமைப்பில் ஐரோப்பாவில் ரோமானிய சட்டங்களில் சீனாவின் கொன்பியூசியஸ் நெறிகளில், இந்தியாவின் பஞ்சாயத்து அமைப்பின் மூலம், மிக ஆரம்ப நிலைகளில் பல வகைப்பட்ட உரிமைகள் ஆங்காங்கு உறுதி செய்யப்பட்டும் பாதுகாக்கபட்டும் வந்துள்ளன. இயல்பாய் எழும் உயர்ந்த எண்ணக்கருக் கோட்பாடுகளின் அடிப்படையில் இயற்றப்படாமல் விளையும் இயற்கை சட்டம் என்னும் கோட்பாட்டுக்கு தாயகமாக இவ் அமைப்புக்கள் விளங்கின.
இனம், பால், மதம், அரசியல் அபிப்பிராயங்கள், தேசிய அல்லது சமூக அடிப்படைகள், போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாது மனிதப் பிறப்புக்கள் என்ற வகையில் சகலருக்கும் உரித்தான உரிமைகளே மனித உரிமைகள் என கூறலாம். இத்தகைய மனித உரிமைகளின் தோற்றத்தினை இலகுவாக விளங்கிக் கொள்வதற்கு உரிமைகளை காலத்தின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கலாம்.
01. 17ம் நுற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் மனித உரிமைகளின் நிலைமை
02. 17ம் நூற்றாண்டுக்கும் 20ம் நூற்றாண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் மனித உரிமைகளின் நிலைமை
03. 20ம் நூற்றாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் மனித உரிமைகளின் நிலைமை
உரிமைகளின் வளர்ச்சிப்போக்கை எடுத்து நோக்கின் நவீன காலத்தின் ஆரம்பம் வரையிலான (17ம் நூற்றாண்டு வரையிலான) காலப்பகுதியில் மனித உரிமைகளின் நிலைமை,
01. ஒழுக்கத்தின் அடிப்படையில் காணப்பட்டது
02. தத்துவார்த்த ரீதியிலான மனித உரிமைகளை விளங்கிக் கொள்ளப்படாமல் இருந்தமை.
03. எண்ணக்கருவாக மனித உரிமைகள் காணப்பட்டமை.
04. இயற்கைச் சட்டம் முக்கியமானதாக காணப்பட்டது.
ஆரம்ப காலம்:
ஆரம்ப கால சமூகங்களில் ஒழுக்க ரீதியான நடத்தைகள், நீதி மற்றும் ஒருமைப்பாட்டு போன்ற சமூக அபிவிருத்தியில் முக்கியமானவையாகக் காணப்பட்டன. எழுத்து வடிவங்களைக் கொண்டிராத போதும் மரபு வழிகளினூடாக (செவி மற்றும் வாய் வழியாக)தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டன. புராதான நாகரிகங்களான பாபிலோன், சீனா, இந்தியா போன்றவற்றில் இவை பின்பற்றப்பட்டுவந்துள்ளன. உதாரணமாக பாபிலோனியாவில் ஹமுறாவிச் சட்டங்கள் (கி.மு.1780) மிக முக்கியமானவை. இது பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது அதற்கான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் தொடர்பாகக் கூறுகின்றது. பாபிலோனியர்களின் அன்றாட மொழியான ஆக்காடியன் மொழியில் எழுதப்பட்டதாகும்.இது 282 சட்டங்களைக் கொண்டிருந்தது.
சீன தத்துவவாதியான மென்சியஸ் (கி.மு 372-289 ) மனிதத்துவத்தினைப் பற்றி குறிப்பிடுகையில் “பரிவு கொள்ளுவதே மனிதத்துவத்தின் ஆரம்பம்”, "அவமானமடைதல் மற்றும் விருப்பமின்மையும் நன்னெறியில் வழிபடுத்துவதற்கான ஆரம்பம்”, மேலோருக்கு காட்டும் வணக்கத்தோடு கூடிய நன்மதிப்பு மற்றும் கீழ்படிதல் போன்றன வெற்றிக்குக் காரணம்”,"சரி பிழை பற்றி சிந்திக்க ஆரம்பித்தலே அறிவுக்கான ஆரம்பம்” எனக் குறிப்பிடப்பட்டமை மனிதத்துவத்தின் மனிதத்துவத்தின் சிந்தனையை வெளிப்படுத்துகின்றது.
மௌரியப் பேரரசின் கீழ் அசோக மன்னன் அகிம்சையின் அரச கொள்கையாக கைக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.பிரயாணிகளை வதை செய்வதைத் தடுத்தல், குற்றவாளிகளை ஒரு வருடத்திற்கு ஒரு தடவை வெளியே வர அனுமதித்தல், இலவசக் கல்வி, பொறுமை, கீழ்பணிவு (பெற்றோருக்கு), ஆசிரியர்களையும், மதகுருமார்களையும் மதித்தல் நண்பர்களுடன் அன்பாகப் பழகுதல், தொழிலாளர்களை அன்பாக நடாத்துதல் போன்றவற்றவற்றவற்றினை ஊக்குவித்ததைக் காணலாம். பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதங்களில் மனித உரிமைகள் பாதுகாப்பதற்கான ஆவணங்கள் காணப்படுகின்றன.
ஹீபோகிரட்டீஸின் சத்தியப்பிரமாணம் வைத்தியர்களது கடமைகளையும் அவர்களது தொழில்சார் கடமைகளையும் ஒழுக்க அடிப்படையில் வற்புறுத்துகின்றது.இத்தகைய ஒழுக்க ரீதியான அம்சங்கள் கிரேக்க மற்றும் ரோம் சமூகங்களில் சட்டங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆதி கிரேக்க காலத்தில் (கி.பி 333 – 264) காணப்பட்ட தத்துவப் பள்ளியாக விளங்கிய ஸ்ரோய்க்வாதம் பின்னர் கிரேக்க உரோம பேரரசு காலத்தில் மிகவும் பிரபல்யம் அடைந்ததொன்றதாகக் காணப்பட்டது.இதன் பிரதான தூண்களாக ஒழுக்கம், பகுத்தறிவு, மற்றும் இயற்கைச் சட்டம் போன்றன காணப்பட்டன. தமது அகிலமயமான அறிவினைக் கொண்டிருக்காத நிலையில் தான் அவர்கள் கருணையில்லாமல் இருக்கின்றனர்.மகிழ்ச்சியின்மைக்கும் தீமைக்கும் இதுவே காரணமாகிறது என ஸ்ரோய்க்வாதம் குறிப்பிடுகின்றது.
கிரேக்க காலம் மற்றும் ரோம காலம்
கிரேக்க தத்துவவாதிகளான கிளிந்தஸ், கிறிசிபஸ் போன்றவர்களும் ரோம தத்துவவாதிகளான சிசரோ, மார்க்கஸ் ஆர்லியன்ஸ், எபிக்டஸ் போன்றௌர் ஸ்ரொய்க்வாதிகள். இவர்களால் ஒழுக்கம் என்பது நன்மை என்பதன் மீது கட்டியெழுப்பப்பட்டது.சகலருக்கும் நன்மை பயக்கின்ற ஒன்றே ஒழுக்கமுடையதாக இருக்கும் என்பது வலுயுறுத்தப்பட்டது. ஒழுக்கத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டதே ஸ்ரொய்க்வாதமாகும்.பின்னர் அரிஸ்டோடில் மற்றும் பல கிரேக்க தத்துவவாதிகள் பலரும் ஸ்ரொய்க்வாதத்தை ஆதரித்திருந்தமை குறுப்பிடத்தக்கதாகும்.
ரோம தத்துவவியலாளர்களான சிசரோ (கி.பி106-433) மற்றும் செனேக்கா போன்றவர் அகில ஒழுக்க சமூகமானது இறைவனுடனான தொடர்புகளுடாகவே வடிவமைக்கப்படுகின்றது என்று குறிப்பிபிட்டிருந்தமையினைக் காணலாம்.
மத்திய காலம்
மத்திய காலத்தில் அல்பாராபி (கி.பி.870-950) கருத்துக்களானது அரிஸ்டோட்டில் மற்றும் பிளேட்டோ போன்றவர்களின் சிந்தனைகளின் தாக்கத்தினைக் கொண்டிருந்தது.அரிஸ்டோட்டில் மற்றும் பிளாட்டோ போன்றவர்களினது நூல்கள் அரபு மொழயில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் அல்பாராபி கடவுளினால் படைக்கப்பட்ட அனைவரும் நன்மைக்கும் தீமைக்குமான இடைவெளியினை அல்லது வேறுபாட்டினை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள்.முறையான நகரம் என்ற சமூகத்தில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் உரிமைகளைப் பரிசாகப் பெற்றவர்கள்அன்புடனும் ஆதரவுடனும் தமது அயலவர்களுடன் வாழுதலும் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டமையினைக் காணலாம்.
12ம் நூற்றாண்டு வரைக்கும் ஆட்சியாளர் அல்லது மன்னன் கடவுளுக்கு சமமாக அல்லது அதற்கு மேலாகவோ கருதப்படக்கூடிய நிலைமை காணப்பட்டதோடு மக்கள் மீது சகல அதிகாரங்களையூம் ஆட்சியாளர்கள் கொண்டிருந்தமையைக் காண முடிகிறது. நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும் ,மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும்.
15 ஆம் நூற்றாண்டு:
1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக செருமனியில் வெளியிடப்பட்ட "கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்" என்னும் ஆவணமே ஐரோப்பாவின் முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம் என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.
16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டு
1789 ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரான்சின் தேசிய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை. 18 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும் (1776)இ பிரான்சிலும் (1789) இரண்டு முக்கிய புரட்சிகள் இடம்பெற்றன. இவற்றின் விளைவாக இரண்டு அறிக்கைகள் வெளியிடபட்டன. ஒன்று ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கைஇ மற்றது மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை. இரண்டுமே சில சட்டம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்டியிருந்தன. மேலும் 1776 ஆம் ஆண்டின் உரிமைகளுக்கான வெர்ஜீனியா அறிக்கையூம் பல அடிப்படை உரிமைகளைச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமைஇ 1864 ஆம் ஆண்டின் "லீபர் நெறிகள்" 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.
18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டு
இவற்றைத் தொடர்ந்து 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில்இ தாமசு பைன்இ ஜான் இசுட்டுவார்ட் மில்இ ஜி டபிள்யூ+. எஃப்.கேகெல் போன்றௌரால் மனித உரிமைகள் தொடர்பான மெய்யியல் வளர்ச்சி பெறலாயிற்று. 20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல குழுக்களும்இ இயக்கங்களும் மனித உரிமையின் பெயரால் பலவகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. மேற்கு ஐரோப்பாவிலும்இ வட அமெரிக்காவிலும் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யூம் உரிமைஇ மிகக்குறைந்த வேலை நிலைமைகளை நிலைநாட்டுதல் , சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பெண்ணுரிமை இயக்கங்களால் பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டு விடுதலை இயக்கங்கள் பல குடியேற்றவாத அரசுகளை வெளியேற்றி விடுதலை பெற்றுக்கொண்டன. இவற்றுள் மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமானது.
உலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன. முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வெர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் நாடுகள் சங்கம் உருவானது. இச் சங்கம், ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராசதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இச் சங்கத்தின் பட்டயத்தில் இச் சங்கத்தால் முன்னெடுக்கப்படவேண்டிய பல உரிமைகள் குறித்த ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வுரிமைகள் பின்னர், இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டன.
20 ஆம் நூற்றாண்டு:
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் முடிவானது சர்வதேச மட்டத்தில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. முதலாவதாக ஐரோப்பாவானது அரசியல் சித்தாந்த ரீதியில் இரு வேறுபட்ட முகங்களாகப் பிரிந்திருந்ததுடன் அதன் காலனித்துவ அதிகார வீழ்ச்சி அரசியல் பொருளாதார ரீதியான விடுதலை கோரிய அரசுகள் பலவற்றின் விடுதலைக்கு வழி கோலியது. இரண்டாவது மாற்றமாக ஐக்கிய நாடுகளையும் அதனோடு இணைந்த ஏனைய நிறுவனங்களினதும் தோற்றமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை நோக்கமாக சர்வதேச சமாதானம் பாதுகாப்பு என்பவற்றை நிலை நிறுத்துவதாக இருந்தாலும் அதன் நோக்கங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்ற மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தலை ஐக்கிய நாடுகளின் பட்டயத்தின் உறுப்புரை ஒன்று உறுதிப் படுத்துவதுடன் அது சர்வதேச ரீதியாக மதிக்கப்படுவதற்கான சட்டக் கடப்பாடுகளை சுமத்தி நிற்கின்றது. மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதித்தல் எனும் நோக்கில் அமைந்த தொழிற்பாடு ரீதியான அவ்விருப்பமே மனித உரிமைகள் சம்பந்தமாக பிரகடனம் ஒன்றை உருவாக்கின. இதனை உருவாக்குவதற்கு சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஆலோசனை வழங்கின.
முதன்முதலில் 26 நாடுகள் ஒன்றிணைந்து 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பிரகடனமானது 1945 யூன் மாதம் கைச்சாத்திடப் பட்டது. இதன் முதலாவது கூட்டம் இலண்டனில் 1946 இல் இடம் பெற்றது. இதன் முக்கிய குறிக்கோளாக உறுப்புரிமை நாடுகளிடையே இறைமையையும், சமத்துவத்தையும் பேணுவதுடன் பிணக்குகளை சமாதான முறையில் தீர்வு காண்பதும் எந்த அரசினதும் ஆட்புல உரிமைகளையும் அரசியல் சுதந்திரத்தை மதித்து நடப்பதுமாகும்.
அதன் பின்னர் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக சமயம், பால், மொழி வேறுபாடின்றி எல்லோருக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை வழங்குவதற்கும் அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக தனித்தும் இணைந்தும் உழைக்க வேண்டும். இந்த அடிப்படையில் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பிரகடனமானது குடியியல் அரசியல் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் பற்றிய விரிவான முறையில் அமைந்த ஏற்பாடுகளை உள்ளடக்கியிருப்பதுடன் பொதுச் சபையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இப்பிரகடனத்தை வரைந்தவர் ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதியும் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகளின் குழுவின் தலைவருமான எலியனார் ரூஸ்வெல்ட் ஆவார்.
இந்த சர்வதேச பிரகடனமானது ஆரம்பத்தில் சர்வதேச ரீதியாக மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் அவர்களால் செய்யும் செயற்பாடுகளை மதிப்பதற்கும் உறுப்பு நாடுகளினை சட்ட ரீதியாக பிணிக்கும் மனித உரிமைகளின் விரிவான பொருத்தனைக்கு ஒரு விசைப் பலகையாகவும் உபயோகப் படுத்துவதற்கே எனக் கருதப்பட்டது. எனினும் அதை வரைந்து கொண்டிருந்த காலப் பகுதியில் வல்லரசுகளுக்கு இடையில் நிலவிய கருத்தியல் முரண்பாடுகள் மற்றும் பனிப்போரின் காரணமாக இதன் உள்ளடக்கத்தில் ஏகமனதான ஒருமைப்பாடு ஒன்றுக்கு வருதல் அசாத்தியமாயிற்று. சோசலிச நாடுகளின் தொகுதி ஏனைய உரிமைகளோடு அந்நாடுகளின் கொள்கைப் படியான நிலைப்பாட்டினைப் பிரதிபலிக்கும் சமூக பொருளாதார உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் மறுபுறத்தில் ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச மனித உரிமைகள் என்ற போக்கிலமைந்த குடியியல் அரசியல் உரிமைகளை முன்னையதிற்குப் பதிலாக உள்ளடக்குமாறு மிகக் கடுமையான உந்து சக்தியைக் கொடுத்தன.
1970- 2000 கால பகுதிகளில்
இந்த இணக்கம் செயற்பட முடியாத கருத்தியல் வேறுபாடானது உலக நாடுகளை இருவேறு துருவங்களாக ஆக்கியதுடன் குடியியல் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார கலாசார உரிமைகள் எனும் இருவேறு சர்வதேச சமவாயங்களை உருவாக்கி அவை 1966 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்படவும் வழி வகுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தேவைப்பாடாக அமைந்த எண்ணிக்கையான அங்கத்துவ நாடுகளின் அமுல்படுத்துவதற்கான ஒப்புதல் அல்லது சீராக்கங்களைப் பெற்றுக் கொண்ட பின் ஒரு தசாப்தத்தின் பின்னர் அமுலுக்கு வந்தன. அதாவது 1976 ஆம் ஆண்டில்.
இது தவிர மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஐ.நா.சபையினால் வேறு பல ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டன. அவ்வகையில் சிறுவர் உரிமைகள், பெண் உரிமைகள், பெண்களுக்கு எதிரான அனைத்து ஓரங்கட்டலுக்கு எதிரான உரிமைகள், அகதிகளுக்கான உரிமைகள், சுற்றாடல் உரிமைகள், தொழிலாளர்களுக்கான உரிமைகள் போன்ற உரிமைகள் தனித்தனியாக அங்கீகரிக்கப்பட்டன. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பாகும். இது மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டது.
2000-2010 மற்றும் பிற்பட்ட கால பகுதிகளில்
இன்று அனைத்து வடிவிலான இனப்பாகுபாடுகளையும் இல்லாதொழிக்கும் சர்வதேச உடன்படிக்கை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கை, சிவில் மற்றும் அரசியல் உரிமை, பெண்களுக்கெதிரான அனைத்து வடிவங்களிலான பாகுபாடுகளையும் ஒழிக்கும் உடன்படிக்கை, பெண்களுக்கெதிரான அனைத்து வடிவங்களிலான பாகுபாடுகளையும் ஒழிக்கும் விருப்ப நெறிமுறை உடன்படிக்கை, சித்திரவதை, ஏனைய கொடூரமான, மனிதாபிமான அற்ற தண்டணைகளுக்கு எதிரான உடன்படிக்கை, சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை, ஆயத மோதலில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கு எதிராக அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விருப்ப நெறிமுறை உடன்படிக்கை, சிறுவர்களை விற்றல், சிறுவர்களை விபச்சாரத்திற்கு உட்படுத்தல் மற்றும் சிறுவர்களின் நிர்வாணப் பகைப்படங்களை வெளியிடுதல் ஆகியவற்றிற்கு எதிராக சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விருப்ப நெறிமுறை உடன்படிக்கை, புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கை, அங்கவீனர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை என பல்வேறு உடன்படிக்கை செய்து பல நாடுகள் கையொப்பம் இட்டு இன்றுவரை ஒவ்வொரு அரசுகளும் ஏற்றுக் கொண்டு மனித உரிமைகள் வளர்ச்சி பெறவும், தொடர்சியாக அது செல்வாக்கு செலுத்துவதையும் காணலாம். எனவே மனித உரிமை வளர்ச்சி என்பது சாதாரண வளர்ச்சி அல்ல. அது பல நூறாண்டுகள் பின்பற்றி வந்த எமது சொத்துக்கள். அவை சாதாரணமாக கிடைத்தவை அல்ல. பாரிய புரட்சியின் விளைவினதாகும்.