ஆப்கானிஸ்தான் பற்றி தெரிந்து கொள்ளலாம்!
ஆப்கானித்தான் அல்லது ஆப்கனிசுத்தான், Afganistan தெற்கு ஆசியாவிற்கும் நடு ஆசியாவிற்கும் குறுக்கே அமைந்துள்ள நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஓர் ஆசிய நாடாகும். இதன் கிழக்கிலும், தெற்கிலும் பாக்கித்தான், மேற்கில் ஈரான், வடக்கில் துருக்மெனித்தான், உசுபெக்கிசுத்தான், வடகிழக்கில் தசிகித்தான், சீனா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. பாக்கித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரூடாகச் செல்கிறது. 652,864 சதுர கிலோமீட்டர்கள் (252,072 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்ட இந்நாடு, பெரும்பாலும் மலைத்தொடர்களையும், வடக்கிலும், தென்மேற்கிலும் சமவெளிகளையும் கொண்டுள்ளது. 2020 கணக்கெடுப்பின் படி, இங்கு 31.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பசுதூன், தசிக்கு, கசாரா, உசுபெக் இனத்தவராவர். காபுல் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.
ஆப்கானித்தானில் மனிதக் குடியேற்றம் இடைக்காலப் பழைய கற்காலத்திற்கு முந்தையது. அத்துடன் பட்டுப் பாதையில் இந்நாடு அமைந்திருந்ததால், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுடனான தொடர்புகளுக்கு மூலோபாய இடமாக அமைந்துள்ளது. இந்நிலம் வரலாற்று ரீதியாக பல்வேறு மக்களுக்கு தாயகமாக இருந்து வருகிறது. பேரரசர் அலெக்சாந்தர், மௌரியர், முசுலிம் அராபியர்கள், மங்கோலியர்கள், பிரித்தானிய, சோவியத், மற்றும் 2001 இல் நேட்டோ-நட்பு நாடுகளுடன் அமெரிக்கா உட்படப் பல இராணுவ நடவடிக்கைகளை இந்நாடு கண்டது. வரலாற்றின் பல்வேறு காலங்களில் இது ஆக்கிரமிக்கப்பட்டு வந்திருந்தாலும், இது "வெல்ல முடியாதது" என்றும் ] "பேரரசுகளின் கல்லறை" என்றும் அழைக்கப்படுகிறது. கிரேக்க பாக்திரியர், குசான்கள், எப்தலைட்டுகள், சமானிதுகள், சஃபாரிதுகள், காசுனவிதுகள், கோரி, கில்சி, முகலாயர், ஓட்டாக்கு, துரானி போன்றோர் பெரிய பேரரசுகளை உருவாக்குவதற்கு இந்த நிலம் ஆதாரமாக இருந்து வந்தது.
இன்றைய ஆப்கானித்தான் 18-ஆம் நூற்றாண்டில் ஒட்டாக்கு, துரானி வம்சங்களுடன் தொடங்கியது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆப்கானித்தான் பிரித்தானிய இந்தியாவிற்கும் உருசியப் பேரரசிற்கும் இடையிலான "பெரும் போட்டியில்" ஒரு இடையக மாநிலமாக மாறியது. 1919 இல் நடந்த மூன்றாம் ஆங்கிலோ-ஆப்கானியப் போரைத் தொடர்ந்து, அந்நாடு வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, இறுதியில் 1926 சூன் மாதம் மன்னர் அமானுல்லாவின் கீழ் ஆப்கானித்தான் இராச்சியமாக மாறியது. இந்த இராச்சியம் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் வரை நீடித்தது. 1973 சூலையில் மன்னர் முகம்மது சாகிர் சா பதவியில் இருந்து அகற்றப்பட்டு ஒரு குடியரசு நிறுவப்பட்டது. 1978 இல், இரண்டாவது இராணுவப் புரட்சிக்குப் பிறகு, ஆப்கானித்தான் ஒரு சோசலிச நாடாக மாறியது, 1980 களில் முசாகிதீன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சோவியத்–ஆப்கான் போரைத் தூண்டியது. 1996 ஆம் ஆண்டிற்குள் ஆப்கானித்தானின் பெரும்பகுதி இசுலாமிய அடிப்படைவாதக் குழுவான தாலிபான்களால் கைப்பற்றப்பட்டது, அவர்கள் நாட்டின் பெரும்பகுதியை ஒரு சர்வாதிகார ஆட்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். 2001-இல் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு தலிபான்கள் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டாலும், நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். 2021 தாலிபான் தாக்குதல், அதன் விளைவாகக் காபூலின் வீழ்ச்சி ஆகியவற்றுடன் தாலிபான்கள் மீண்டும் நாட்டை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நாட்டில் பயங்கரவாதம், வறுமை, குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடு, ஊழல் அதிக அளவில் உள்ளது. இது ஐக்கிய நாடுகள் அவை, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு, 77 குழு, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அணிசேரா இயக்கம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஆப்கானித்தானின் பொருளாதாரம் உலகில் 96-வது நிலையில் உள்ளது. கொள்வனவு ஆற்றல் சமநிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ) 72.9 பில்லியன் டாலர்கள் ஆகும்; தனிநபர் விகிதத்தில் மொ.உ.உ அடிப்படையில் 2018 இல் 186 நாடுகளில் 169 வது இடத்தில் மிக மோசமான நிலையில் உள்ளது.
மொழிகள்
இந்தோ-ஐரோப்பிய மொழிகளினதும், பாரசீக மொழிக் குடும்பத்தின் உப பகுதியுமான பாஷ்தூ 35% விழுக்காடும், பாரசீக மொழி (தாரி) 50% விழுக்காடும் பேசப்படுவதாக சி.ஐ.ஏ தரவுப் புத்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைவிடத் துருக்கி மொழிகளான உஸ்பெக், துர்க்மெனி 9% விழுக்காடும், அவி 30 சிறுபான்மை மொழிகள் (பிரதானமாக பலோச்சி, பசானி, நுரிஸ்டானி) 4% விழுக்காடு வீதமும் பேசப்படுகின்றன. இரு மொழி பேசும் தன்மையை இங்கே பரவலாக அவதானிக்கலாம்.
மதங்கள்
மத ரீதியாக, 99% விழுக்காட்டினர் இசுலாமியர் ஆவர், கிட்டத்தட்ட 74-89 விழுக்காடு வரையானோர் 'சுன்னி' முஸ்லிம்களாகவும் 9-25 விழுக்காட்டினர் "சியா" முஸ்லிம்களாகவும் உள்ளனர். அங்குக் கிட்டத்தட்ட 150,000 இந்துக்களும், எண்ணிக்கை தெரியாத அளவில் சீக்கியர் இனத்தவரும் காபூல், கந்தகார், காஸ்சி மற்றும் ஜலாலாபாத் போன்ற நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு சிறிய அளவில் யூத இனத்தவர் வாழ்ந்து வந்த போதும், ரசிய ஆக்கரமிப்புக்குப் பின்னர் 1979 இல் நாட்டைவிட்டு வெளியேறினர். ஒரு தனி நபரான 'சப்லோன் சிமின்டோவ்' மீதமாக அந்நாட்டில் உள்ளார்.
பெரிய நகரங்கள்
ஒரு மில்லியனுக்கு அதிகமான சனத்தொகை உள்ள ஒரே நகரம் தலைநகரமான "காபூல்" ஆகும். ஏனைய முக்கிய நகரங்கள் சனத்தொகை ஒழுங்கில் பின்வருமாறு. கந்தகார், ஹெரத், மசார்-ஏ-ஷரீஃப், ஜலாலாபாத், கஸ்னி மற்றும் குந்துஸ் ஆகும்.
கல்வி
ஆப்கானித்தானின் 7000 பாடசாலைகளில் 30% விழுக்காடு பாடசாலைகள், இரண்டு பதின்ம ஆண்டுக்கால உள்நாட்டு யுத்தத்தினால் சேதமடைந்தனவாக 2003 காலப்பகுதியில் அறியப்பட்டுள்ளது. இவற்றில் அரைவாசிப் பாடசாலைகளே சுத்தமான குடிநீர் வசதி பெற்றுள்ளன. தாலிபான் காலத்தில் பெண்கள் பாடசாலைக்கு வராமல் தடுக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆப்கானியச் சிறுவரைச் சுற்றியுள்ள யுத்தம், வறுமை போன்றவற்றின் மத்தியிலும், அவர்கள் அதில் இருந்து விரைவாக மீண்டு ஆர்வமுடன் கல்வி கற்பதாக "சேவ் த சில்ரன் நிதியம்" எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
மார்ச் 2003 இல் ஆரம்பித்த பாடசாலைத் தவணையில் சுமார் நான்கு மில்லியன் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலைகளில் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது ஆப்கானித்தான் வரலாற்றில் மிக அதிகமான தொகையாகும்.
நாட்டின் எழுத்தறிவு வீதம் 36%விழுக்காடு ஆகும்; இதில் ஆண்கள் 51% விழுக்காடும், பெண்கள் 21% விழுக்காடும் ஆகும்.
உயர்கல்வி ஆப்கானினிஸ்தானில் புதிய வடிவம் எடுத்து வளர்ந்து வருகின்றது. தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர்க் "காபூல் பல்கலைக்கழகம்" மீளத் திறக்கப்பட்டதுடன் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் இங்குக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். அத்துடன 2006 இல் ஆப்கானித்தானின் "அமெரிக்கப் பல்கலைக்கழக"மும் இங்கே அதன் கதவுகளைத் திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது. இப்பல்கலைக்கழகமானது ஆங்கில மொழி மூலமாக உலகத்தரம் வாய்ந்த கற்கைநெறிகளை வழங்குவதை இங்குக் குறிப்பிட வேண்டும். பல்கலைக்கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்கிக் கொள்கின்றது. மசார்-ஏ-ஷரீப் இல் புதிதாக அமைய உள்ளதான பல்க் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பொறியியல் திணைக்களத்திற்காக 600 ஏக்கர் நிலத்தில் 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டடம் அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம்
ஆப்கானித்தான் உலகில் மிக வறுமையான, பின்தங்கிய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாகும். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு (2) அமெரிக்க டொலர் பண மதிப்புக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பொருளாதாரம் 1979 தொடக்கம் இருந்த அரசின் நிலையற்ற தன்மையால் பலமாகப் பாதிக்கப்பட்டது.
நாட்டில் பெருளாதார ரீதியாக செயலூக்கத்துடன் 11 மில்லியன் (மொத்தம் 29 மில்லியன் மக்கள் உள்ளனர்) மக்கள் உள்ளதாக 2002 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்கின்றன. ஆயினும் வேலையில்லாதோர் வீதம் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை, ஆயினும் அந்த நாட்டில் வேலையில்லாதோர் விழுக்காடு(%) மிக உயர்வு என்பதே உண்மை. தொழில்சார் பயிற்சி இல்லாத இளம் சமுதாயத்தில் கிட்டத்தட்ட மூன்று (3) மில்லியன் அளவினர் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300,000 இனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆப்கானித்தானிய மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி அபின், மோபைன், ஹாசிஸ் போன்ற போதைப்பொருள்கள் மூலமே கிடைக்கின்றது.