Type Here to Get Search Results !

மூன்றாம் உலக நாடுகள்: தோற்றம்… எழுச்சி! வீழ்ச்சி?

மூன்றாம் உலக நாடுகள்: தோற்றம்… எழுச்சி! வீழ்ச்சி?



மூன்றாம் உலக நாடுகள் என்பவை வரலாற்று நீதியில் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தவை. புவியியல் ரீதியில் ஆசிய, ஆப்ரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களில் அமைந்தவை. அரசியல்ரீதியில் அணிசேராக் கொள்கையின் கீழ் ஒருங்கிணைந்தவை. பொருளாதார ரீதியில் வளர்ச்சி குன்றியவையாக வகைப்படுத்தப்பட்டவை. இந்தக் கூறுகள் யாவையும் பொதுவானவையே. இவற்றில் ஒன்றிரண்டைப் பெற்றிராத நாடுகளும்கூட மூன்றாம் உலகம் என்ற அடையாளத்தைக் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு, ஈரான் காலனிய ஆட்சிக்கு ஆட்படவில்லை எனினும் அதன் எண்ணெய் வளம் முற்றிலுமாக ஆங்கில வணிகர்களால் கொள்ளையடிக்கப்பட்டு அந்நாட்டு மக்கள் வறுமையையும் பசியையும் அனுபவித்தனர். தென் அமெரிக்க நாடுகளில் சிலவும் கரீபிய தீவுகளில் சிலவும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தங்களது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டன. நேரடியாக அவை காலனியாதிக்கத்திற்கு ஆட்படவில்லை என்றபோதும் அதன் ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியத்தின் ஏவலாட்களாகவே செயல்பட்டு வந்தனர். ஆப்பிரிக்காவின் பல நாடுகளும் சீனாவும் இந்தியாவின் சில பகுதிகளும்கூட காலனி ஆதிக்கத்திற்குள் வரவில்லை.


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே நிலவிய பனிப்போரின்போது இந்த இரண்டு அணிகளிலும் இடம்பெற்றிராத நாடுகள் தமக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொண்டன. இதுவே மூன்றாம் உலக நாடுகளின் தோற்றுவாயாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில், இரண்டாம் உலகப் போருக்கு முன்னமே 1927ல் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மாநாடே இந்த ஒருங்கிணைப்புக்கு வித்திட்டது. முப்பத்தேழு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டை சர்வதேச கம்யூனிஸ்ட்கள் ஒருங்கிணைத்தனர். இம்மாநாட்டுக்குரிய செலவுகளை இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டின் ஏற்றுக்கொண்டார். இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் ஜவஹர்லால் நேரு கலந்துகொண்டார். காலனி நாடுகளினதும் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருக்கும் நாடுகளினதுமான பிரச்சனைகளைப் பற்றி புரிந்துகொள்ள இந்த மாநாடு தமக்கு உதவியதாக நேரு குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பிறகே 1929ல் லாகூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியாவுக்கு முழுமையான அரசியல் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அவர் நிறைவேற்றினார். அத்தீர்மானம் சர்வதேச அரசியல் நிலைகளை அறிந்ததன் விளைவாக எடுக்கப்பட்ட திடமான முடிவாக அமைந்தது.


இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, நேரு 1949ம் ஆண்டு டெல்லியில் அப்போது புதிதாக உருவாயிருந்த இந்தோனேசிய அரசுக்கு எதிரான டச்சு, பிரிட்டிஷ் குறுக்கீடுகளை எதிர்த்து ஆசிய நாடுகளின் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். ஐக்கிய நாடுகள் அவைக்கு உள்ளாகவே ஆசிய நாடுகள் இணைந்து செயல்படுவது என்ற முடிவும் அதையொட்டி எடுக்கப்பட்டது. அதே நேரு, அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கிவந்த உணவுப் பொருள்கள் உதவியை (பி.எல்.480 திட்டம்) மாதாந்திர அடிப்படைக்கு மாற்றியதன் காரணமாக, அமெரிக்கா வியட்நாமை ஆக்ரமித்தபோது, கண்டிக்க முடியாத நிலைக்கும் ஆளாக வேண்டியிருந்தது.


2


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முழுமையான வடிவத்தை அடைந்த மூன்றாம் உலக நாடுகள் என்ற செயல்திட்டத்திற்கு அணிசேராக் கொள்கை மட்டுமே காரணம் இல்லை. அப்போதுதான் புதிதாக அரசியல் விடுதலையை அடைந்திருந்த நாடுகள் காலனியத்தின்  புதுப்புது வடிவங்களை ஒன்றுசேர்ந்து எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டன என்பதே உண்மை.


இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் 1955ல் நடந்த ஆப்ரிக்க-ஆசிய மாநாட்டில் பேசிய சுகர்னோ, பிரஸ்ஸல்ஸ் மாநாட்டு பிரதிநிதிகள் மீண்டும் சந்தித்துக் கொண்டதை நினைவு கூர்ந்தார். மேலும் அந்தப் பிரதிநிதிகள் தங்களது விருப்பத்தினால் அல்ல, தேவையின் காரணமாகவே கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டுச் சொன்னார். இம்மாநாட்டில் அப்போது புதிதாக சுதந்திரம் பெற்றிருந்த 29 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


பாண்டுங் மாநாட்டில் அணிசேராக் கொள்கையோடு அரசியல் சுதந்திரம், பொருளாதார மேம்பாடு, அணு ஆயுத எதிர்ப்பு ஆகியவை வலியுறுத்தப்பட்டன. இம்மாநாட்டில் வெளிப்பட்ட அணு ஆயுத எதிர்ப்பு அலையே ஐக்கிய நாடுகள் அவை 1957ல் சர்வதேச அணுசக்தி முகமையை அமைப்பதற்கு காரணமாக அமைந்தது.


மூன்றாம் உலக நாடுகள் என்ற அடையாளத்தின்கீழ் இணைந்துகொண்ட நாடுகள் தங்களது கோரிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான தளமாக ஐ.நா.அவையைப் பயன்படுத்திக் கொண்டன. அதேநேரத்தில் காலனியாதிக்கம் செய்த நாடுகளும் அணுசக்தி ஆற்றலை பாதுகாப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளும் ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் வெட்டுத் தீர்மான அதிகாரத்தைப் பெற்றதைக் கண்டு அஞ்சவும் செய்தன. ஐ.நா.அவையில் சிறிய நாடுகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லையென்றும் அது அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் கோரின. வெட்டுத் தீர்மான அதிகாரத்தை அளித்ததன் வாயிலாக இன்று ஐ.நா.வும் தனது உறுப்பு நாடுகள் மீதான புறத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலைக்கு ஆட்பட்டு நிற்கிறது.


ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து பாதுகாப்பு, காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது ஆகியவற்றில் மட்டுமே பாண்டுங் மாநாடு கவனம் கொள்ளவில்லை. கலாச்சார, அறிவியல், தொழில்நுட்ப பரிமாற்றங்களைப் பற்றியும் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கலாச்சாரப் பன்மைத்துவத்தை இந்த நாடுகள் ஏற்றுக்கொண்டன. இந்தியா மட்டுமல்லாது இந்தோனேசியா, கௌடமாலா முதலான நாடுகளும் கலாச்சார பன்மைத்துவத்தை தமது தேசிய அடையாளமாக அறிவித்துக்கொண்டன. தமது நாட்டின் தேசிய இனங்கள் அனைத்திற்கும் சமமான அங்கீகாரத்தை வழங்கின.


பாண்டுங் மாநாட்டினைத் தொடர்ந்து 1957ல் எகிப்து நாட்டின் கெய்ரோவில் நடந்த ஆப்ரிக்க- ஆசிய மக்கள் மாநாட்டிலும், கலாச்சாரப் பரிமாற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  இம்மாநாட்டில் ஆப்ரிக்க ஆசிய நாடுகளுக்கு இடையேயான கலாச்சார தொடர்புகளைப் பற்றியும் பௌத்த சமய தொடர்புகள் பற்றியும், அராபிய வணிகர்கள் ஏற்படுத்திய வாணிப தொடர்புகள் பற்றியும் நினைவு கூரப்பட்டது.


ஆப்பிரிக்க-ஆசிய மாநாடுகளில் கலாச்சாரப் பரிமாற்றத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்  இலக்கியத்துறையில் ஒரு புதிய அலையை உருவாக்கியது. 1957ல் ஆசிய- ஆப்பிரிக்க எழுத்தாளர் மாநாடு புது தில்லியில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தாஷ்கண்ட் (1958), கெய்ரோ (1962), பெய்ரூட் (1967) என்று தொடர்ந்து எழுத்தாளர் மாநாடுகள் நடத்தப்பட்டன. இந்த மாநாடுகளையொட்டி லோட்டஸ் (தாமரை) என்ற இலக்கிய இதழ் ஒன்றும் நடத்தப்பட்டது. அதே பெயரில் விருது ஒன்றும் வழங்கப்பட்டது.


அரசியலுக்கு வெளியே நடந்த இந்த கலாச்சார உரையாடல்களின் தேவை இன்னும் இருக்கிறது. 1973ல் அல்ஜியர்ஸில் நடந்த நான்காவது அணிசேரா நாடுகளின் மாநாட்டில் அந்நாடுகளில் உள்ள 40 செய்தி நிறுவனங்கள் தங்களது செய்திகளை பரிமாறிக் கொள்ள ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. இன்றைய மேலை ஆதிக்கம் நிறைந்த கார்ப்பரேட் செய்தி உலகத்தின் வழியாகத்தான் நமது பக்கத்து நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரிந்துகொள்ளும் நிலையில் இருக்கிறோம். எனவே அப்படியொரு தேவை இன்னமும் நமக்கு இருக்கிறது.


மூன்றாம் உலக நாடுகளின் தொடர் சந்திப்புகள் கலாச்சாரத் துறையில் மட்டுமின்றி பெண்ணுரிமை இயக்கத்திற்கும் பெரும் ஊக்கத்தை அளித்தது. 1961ல் கெய்ரோவில் நடந்த முதல் ஆப்பிரிக்க- ஆசிய பெண்கள் மாநாடு, சொத்துரிமையில் பாலின பேதத்தைக் களைவதற்குக் குரல் கொடுத்தது. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த நாடுகளில் அங்கிருந்த இடதுசாரி அமைப்புகளால் நடத்தப்பட்ட பெண்ணுரிமை அமைப்புகள் மத அடிப்படைவாதிகளது கோபத்தைத் தூண்டவும் செய்தன.


1961ல் யூகோஸ்லோவியாவின் பெல்கிரேடில் நடந்த அணிசேரா நாடுகளின் முதல் கூட்டம் இந்த ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தியது. 1966ல் கியூபாவின் ஹவானாவில் நடந்த மூன்று கண்டங்களுக்கு இடையிலான மாநாடு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளுடன் லத்தீன் அமெரிக்க நாடுகளும் இணைந்தபிறகே மூன்றாம் உலக நாடுகள் என்ற அமைப்பு தனக்கென தெளிவான இலக்கை நோக்கி நடை போடத் தொடங்கியது.



‘இருண்ட தேசங்கள் – மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் வரலாறு’ என்ற நூலை எழுதிய விஜய் பிரசாத், 1983ல் டெல்லியில் நடந்த அணிசேரா நாடுகளின் கூட்டம்தான் மூன்றாம் உலக நாடுகள் என்ற ஒருங்கிணைப்புக்கு அஞ்சலிக் குறிப்பை எழுத அனுமதித்தது என்று குறிப்பிடுகிறார். அம்மாநாட்டில் கலந்துகொண்ட ஃபிடல் காஸ்ட்ரோ மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொண்டிருக்கும் கடன் சிக்கல்கள் அவற்றின் இறுதிக்காலத்திற்கு அறிகுறியாக இருப்பதை விளக்கி, அதற்கு பொருளாதாரத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆனால் அம்மாநாட்டில் சிங்கபூரின் பிரதிநிதியாக்க் கலந்துகொண்ட அந்நாட்டின் துணைப்பிரதமர் ராஜரத்தினம் முதலாளித்துவமா, பொதுவுடைமையா என்பதைப் பற்றி கவலையில்லை, தேச நலனே முக்கியம் என்று மறுத்து வாதிட்டார். கட்டற்ற வணிகச்சந்தையின் ஆதரவாளராக நின்று அம்மாநாட்டில் ராஜரத்தினம் பேசினார்.


நான்கு புலிகள் என்றழைக்கப்படும் ஹாங்காங், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் ஏற்றுமதி 1960 ஆம் ஆண்டிலிருந்து 1990 ம் ஆண்டுக்குள் 1.3 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதத்திற்கு உயர்ந்தது. இப்படி திடீர்ப் பணக்காரர்களான நாடுகள் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் கண்மூடித்தனமான ஆதரவாளர்களாக மாறிவிட்டன. இந்த கிழக்காசிய நாடுகளானது, மற்ற மூன்றாம் உலக நாடுகளிடம் தம்மை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டன. அமெரிக்காவின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருந்ததும், அதன் காரணமாக பாதுகாப்புக்கு மற்ற நாடுகளைவிடவும் மிகக் குறைவாக செலவழிக்க வேண்டியிருந்ததும் இந்நாடுகளுக்கு வசதியாக இருந்தது. இந்த வசதிகள் யாவும் அவற்றின் நிலவமைப்பு கடல் வணிக வழிகளையொட்டி அமைந்ததால் கிடைத்த அனுகூலங்கள். இவை மற்ற நாடுகளுக்குப் பொருந்தி வராது என்பதை ஏற்றுக்கொள்ள அவை தயாராக இல்லை.


டெல்லி மாநாட்டில் மக்களின் கல்வி, மருத்துவம் முதலிய அடிப்படைத் தேவைகளுக்கு அரசு வழிசெய்ய வேண்டும் என்று ஃபிடல் காஸ்ட்ரோ கோரினார். ஆனால் ராஜரத்தினமோ, தனியார் நடத்தும் தொழில்களில் அரசின் குறுக்கீடு குறைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி நின்றார். மாநாட்டின் தலைவராக இருந்த இந்திரா காந்தி இந்த விவாதத்தை நல்ல திசை நோக்கி நகர்த்தியிருக்க முடியும். ஆனால் அவரோ அணிசேரா இயக்கத்தைப் பற்றியும் அதற்காக தமது தந்தையார் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப்  பற்றியும் மட்டுமே பேசி, கடைசியில் அணிசேராமை என்பது நாட்டின் சுதந்திரமும் விடுதலையுமே என்று தனது உரையை முடித்துக்கொண்டார். இப்படியாக இந்தியப் பிரதமரால் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் தொடர்பு இல்லை என்று முடிவு கட்டப்பட்டது.


அணிசேரா இயக்கத்தை முன்னெடுத்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. ஆனால் மூன்றாம் உலக நாடுகள் என்கிற ஒருங்கிணைவில் முதல் விரிசல் இந்தியாவில்தான் உருவானது.


இந்தியாவின்மீது சீனா போர் தொடுத்தது, சில நாடுகளில் மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை இராணுவ ஆட்சியாளர்கள் ஆயுதங்களின் துணைகொண்டு கைப்பற்றியது, மத்திய கிழக்காசிய நாடுகளில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டது, அதையடுத்து அப்பிராந்தியத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகாரம் பெற்றது, புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகமானது என மூன்றாம் உலக நாடுகளுக்கிடையே நிலவிய ஒற்றுமையை சீர்குலைத்த காரணங்கள் பல உண்டு. இவை அனைத்திற்கும் மேலாக அதிக வட்டிவீதத்துடன் அள்ளி வழங்கப்பட்ட வெளிநாட்டு கடனுதவிகள் மிகவும் மோசமான நிலையை உருவாக்கியது.


1986ல் ஜிம்பாவே’யில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மூன்றாம் உலக நாடுகளைப்பற்றி ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் அறிக்கை 1990ல் வெளியானது. அதன்படி, ஐ.எம்.எப். தலைமையிலான உலகமயமாதலே மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் சக்தியை பலவீனப்படுத்தியது என்பது தெளிவானது.


வெளிநாட்டு கடனுதவி பெற்று சிக்கிச் சீரழிந்த கதைக்கு ஜமைக்கா ஒரு உதாரணம். பாக்ஸைட் கனிம வளம் நிறைந்த நாடு அது. மைக்கேல் மேன்லே பிரதமராக இருந்தபோது பாக்ஸைட் சுரங்கங்களை அரசுடைமையாக்கி கனிமச் சுரண்டலை முற்றிலுமாகத் தடுத்தார். பாக்ஸைட் ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து சர்வதேச பாக்ஸைட் அசோசியேஷனை உருவாக்கினார். ஆனால் இந்த அமைப்பில் பிரேசில் சேராதததோடு ஆஸ்திரேலியாவுடன் இணைந்துகொண்டு அசோசியேஷன் நிர்ணயித்த விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு பாக்ஸைட்டை விற்றது. எனவே அந்த அமைப்பு தோல்வி கண்டது. தனது பொருளாதார வலிமைக்கு பாக்ஸைட்டை மட்டுமே நம்பியிருந்த ஜமைக்கா ஒரு கட்டத்தில் கடனாளியாக மாறிப்போனது. மதிப்பு குறைக்கப்பட்ட நாணயம், அரசு செலவுகளுக்குக் கட்டுப்பாடு, வாங்கிய கடனுக்கு அதிக வட்டி வீதம் என்று படாத பாடு பட்டது. ஒருகட்டத்தில் உதவிக்கு கியூபாவை அணுகலாமா என மைக்கேல் மேன்லே யோசித்தபோது இராணுவ அச்சுறுத்தலையும் அவர் சந்திக்க வேண்டியிருந்த்து. கடைசியில் கடனுக்குத் தலைவணங்கியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.  அவரது ஆட்சி தூக்கியெறியப்பட்டு, அடுத்து சீகா பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டபிறகும் மோசமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார நிலையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.


ஒருபக்கம் சோவியத் ஒன்றியம் உடைந்தது. எனவே அணிசேரா கொள்கைக்கு அவசியம் இல்லாமல் போனது. இன்னொருபக்கம் ஏகாதிபத்தியம் காலனியத்தை கைவிட்டு உலகமயத்தைக் கைகொண்டது. இந்நிலையில் இந்தியா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா என சந்தைப் போட்டியில் சற்றே தாக்குப்பிடித்து நிற்கும் சில மூன்றாம் உலக நாடுகள் ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம் கிடைக்குமா என்ற கவலையிலேயே ஆழ்ந்திருக்கின்றன.


இப்போது மூன்றாம் உலகம் இல்லை.


1927ல் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பு இயக்கம்தான் மூன்றாம் உலக நாடுகளின் தோற்றத்திற்கு மூல காரணமாய் அமைந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஏகாதிபத்தியம் எடுத்திருக்கும் நவீன வடிவம்தான் புதிய பெருளாதாரக் கொள்கை என்கிறபோது அதை எதிர்ப்பதற்கான தேவையும் இருக்கத்தான் செய்கிறது. நிலவுரிமை, பெண்ணுரிமை, ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வது என அந்த இயக்கம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad