இலங்கை சட்டவாக்கப் பேரவை Legislative Council of Ceylon
இலங்கை சட்டவாக்கப் பேரவை அல்லது இலங்கை சட்டசபை (Legislative Council of Ceylon) என்பது பிரித்தானிய இலங்கையின் சட்டவாக்க சபையாகும். இது 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் சேர் ரொபர்ட் ஹோட்டன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனுடன் இணைந்து இலங்கை நிறைவேற்றுப் பேரவையும் நிறுவப்பட்டது. இந்த சட்டவாக்கப் பேரவையே இலங்கையின் முதலாவது பிரதிநிதித்துவ முறையிலான அரசு ஆகும். இந்த சட்டசபை 1931 டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இலங்கை அரசாங்க சபையாக மாற்றப்பட்டது.
அறிமுகம்
பிரித்தானிய இலங்கைக்கான பிரதிநிதித்துவ முறைக்கான அரசொன்றை அமைப்பதற்கான முதற்கட்டமாக 1833 கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு சட்டசபையை நிறுவியது. ஆரம்பத்தில் 16 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டிருந்தது: பிரித்தானியத் தேசாதிபதி, நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நிறைவேற்றுப் பேரவை (தலைமைச் செயலர், சட்டமா அதிபர், கணக்காய்வுத் தலைவர், பொருளாளர், பொதுப் படைத்தலைவர்), 4 அரச ஊழியர்கள் (மேல், மற்றும் மத்திய மாகாண அரச அதிபர்கள் அடங்கலாக), மற்றும் அதிகாரபூர்வமற்ற வகையில் நியமிக்கப்பட்ட 6 உறுப்பினர்கள் (மூன்று ஐரோப்பியர்கள், ஒரு சிங்களவர், ஒரு தமிழர், மற்றும் ஒரு பரங்கி) ஆகியோர். அதிகாரபூர்வமற்ற ஆறு உறுப்பினர்களுக்கும் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரும் அதிகாரம் இருக்கவில்லை; இவர்கள் சட்டமூலத்துக்கான விவாதங்களில் மட்டுமே பங்குபற்ற முடியும். இதன் மூலம் பிரித்தானிய இலங்கை நிருவாகத்தில் உள்ளூர் மக்களின் குரலைக் கொண்டு வரும் முதலாவது முயற்சியாகும்.
1889 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமற்ற வகையில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டது (மூன்று ஐரோப்பியர்கள், ஒரு தென்னிலங்கைச் சிங்களவர், ஒரு கண்டியச் சிங்களவர், ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு பரங்கி).