Type Here to Get Search Results !

இலங்கை அரச நிர்வாக சேவை - எப்படி இணைவது?

இலங்கை அரச நிர்வாக சேவை - எப்படி இணைவது?





நீங்கள் இலங்கைத்திருநாட்டின் குடிமகன்/ள் என்றால், எஸ்.எல்.ஏ.எஸ், எஸ்.எல்.ஏ.எஸ் என்று நிறையப்பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அப்படி என்றால் என்ன என்று உங்களுக்கு ஒரு வேளை தெரியாமல் இருக்கலாம். குறிப்பாக, நீங்கள் பட்டதாரி என்றால், பட்டம் முடித்து விட்டு ஒரு தொழிலுக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டிய விடயம் இது. ஏனென்றால் ஒருகாலத்தில் நீங்களும் அந்த எஸ்.எல்.ஏ.எஸ்ஸின் ஒரு பாகமாக இருக்கலாம். 

உங்களைப் போன்றவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு.


இலங்கையின் அரச பணிகளில் முக்கியமான சில பொதுச்சேவைகளில் ஒன்று SLAS - Sri Lanka Administrative Service, தமிழில் 'இலங்கை நிர்வாக சேவை'. ஓரளவு அறிமுகமான இன்னொன்று SLEAS, Sri Lanka Education Administrative Service, இலங்கை கல்வி நிர்வாக சேவை. இப்படியே இலங்கை திட்டமிடல் சேவை (SLPS, Sri Lanka Planning Service), இலங்கை வெளிநாட்டு சேவை (Sri Lanka Overseas Service, Colloquially SLFS, Foreign Service) என்று பல பொதுச்சேவைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வழிமுறைகள் வேறுபடும்.


இவற்றில், இலங்கை நிர்வாக சேவை, இலங்கையின் உயர் அதிகாரத்துவம் மிக்க நிர்வாகப் பதவிகளை உள்ளடக்குகின்றது. இலங்கையின் நிர்வாகம் 9 மாகாணங்கள், 25 மாவட்டங்கள், 341 உள்ளூராட்சி அலகுகள் (276 பிரதேசங்கள் - 41 நகரங்கள் - 24 மாநகரங்கள்) என்று பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மத்திய மற்றும் மாகாண  அமைச்சுக்களிலும் திணைக்களங்களிலும் முக்கியமான முகாமைத்துவப் பதவிகள் இருக்கின்றன. இந்த எல்லாப் பிரிவுகளிலும் உயர்ந்த இடத்தை வகிப்பவர்கள், இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களே.


இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால், பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், நகர / மாநகர ஆணையாளர், துணை ஆணையாளர், பணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர், மாவட்ட செயலாளர், பிரதான செயலாளர், அமைச்சுச் செயலாளர், மேலதிக செயலாளர் முதலானோரைச் சொல்லலாம். இந்தப் பெயர்களில் ஏதாவது ஒன்றை என்றாலும், நீங்கள் உங்கள் அரச பணியொன்றை நிறைவேற்றச் சென்றிருக்கும் போது கட்டாயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.


இந்தச் சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் அரச இதழான வர்த்தமானியில் வெளியாகும். திறந்த (Open) மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட (Limited) எனும் இரு பிரிவுகளில் பரீட்சை இடம்பெறும். இந்த இரு பரீட்சைகளுக்கும் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் அமர முடியாது. திறந்த பரீட்சையை எழுத 30 வயதுக்குட்பட்ட இலங்கையின் சகல பல்கலைக்கழக பட்டதாரிகளும் தகுதியானவர்கள். மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு அரச சேவையில் குறைந்தது 5 வருட அனுபவம் வாய்ந்த - 53 வயதிற்கு உட்பட்டவர்கள் / பட்டதாரிகள் தகுதியானவர்கள்.


திறந்த போட்டியாளர்கள் 

1. பொது விவேகம் (நுண்ணறிவு) 

2. இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணி, அதன் போக்குகள் (உள்நாட்டுப் பொது அறிவு)

3. சர்வதேச போக்குகள் (உலக பொது அறிவு)

4. முகாமைத்துவ விவேகம் (நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம்)

5. ஆக்க பூர்வ பகுப்பாய்வும் தொடர்பாடல் திறனும் (மொழித்திறன்)

ஆகிய ஐந்து வினாப்பத்திரங்களுக்கு தேர்வு எழுதவேண்டும்.


(மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாளர்களுக்கு நான்கு வினாப்பத்திரங்களே. பொது விவேகம், உள்நாட்டு பொது அறிவு மற்றும் அரச நிர்வாக விடய ஆய்வு பற்றிய இரு பத்திரங்கள்.)


திறந்த பரீட்சையின் ஐந்து பத்திரத்திலும் 50இற்குக் குறையாத புள்ளிகள் பெற்று, மொத்தமாக 250 புள்ளிகளுக்கு மேல் பெறுவோரில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையானோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.


நேர்முகத்தேர்வில் முகாமைத்திறன், தலைமைத்துவம், தொடர்பாடல், ஆளுமை முதலிய விடயங்கள் ஆராயப்படும். வெற்றிடத்துக்கு அமைய நேர்முகத்தேர்வில் சித்தி பெறுவோர் இலங்கை நிர்வாக சேவை தரம் IIIஇற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள். ஆட்சேர்ப்புக்கு உள்ளானோர் ஓராண்டு பயிற்சியிலும் ஐந்தாண்டு தகுதிகாண் கால பணியிலும் ஈடுபடவேண்டும்.


SLAS பரீட்சைக்கு இந்த இந்த வினாப்பத்திரங்கள் என்று இருந்தாலும், வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம் என்று ஒன்று இல்லை. பயிற்சியும் பரந்த விடய அறிவும் கொஞ்சம் அவசியம்.


பக்கத்திலேயே கூகிள் என்ற ஒன்று கடைவிரித்துக் காத்திருக்கிறது. "அதிர்ச்சி வீடியோ","படங்கள் இணைப்பு", "ஷேர் செய்யுங்கள்" இணைப்புகளை சொடுக்குவதற்கு பதில், டிக்டொக்கையும் இன்ஸ்ராவையும் தட்டிக்கொண்டிருப்பதற்குப் பதில், பயனுள்ள செய்தித் தளங்களை, விக்கிப்பீடியா, யூரியூப் கற்பித்தல் காணொளிகள் போன்றவற்றை படிக்கலாம். அறிவை விருத்தி செய்து கொள்ளலாம்.


SLAS உள்ளிட்ட பெரும்பாலான அரச பணிகளுக்கு போட்டிப்பரீட்சை மூலமே ஆட்சேர்ப்பு செய்கின்றார்கள் என்பதால், இலங்கையின் பல இடங்களில் போட்டிப்பரீட்சைகளுக்கான தனியார் வகுப்புகள் இடம்பெற்று வருகின்றன. என் தனிப்பட்ட அனுபவத்தில் அந்த வகுப்புகள் பயனுள்ளவை என்பேன். ஆனால் அங்கு போய் குறிப்புகளைப் பாடமாக்கி பரீட்சையில் ஒப்புவிப்பதும் இங்கு பயன் தராது. வைராக்கியமும் நம்பிக்கையும் இருந்தால் வகுப்புக்குப் போகாமலும் படிக்க முடியும். அது அவரவர் தன்னம்பிக்கையைப் பொறுத்தது.


SLAS போன்ற சேவைகளுக்கு தேவையும் வெற்றிடங்களும் அதிகமாகவே இருக்கிறது. தற்போது அடுத்த பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருக்கிறது. 30 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள், வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் பரீட்சைக்கு தவறாமல் விண்ணப்பம் போடுங்கள். அடுத்த பரீட்சையை எழுதக் காத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்! <3


(மேலதிக உதவிக்காக:


1.கடந்த எஸ்எல்ஏஎஸ் பரீட்சை தொடர்பாக வெளியான வர்த்தமானி தமிழ். 


2. SLAS உள்ளிட்ட போட்டிப்பரீட்சைகளுக்காக முகநூல் நண்பர்கள் இயக்கும் இலவச வழிகாட்டல் குழுமங்கள். இவற்றில் இணைவதன் மூலம், வகுப்புகள், போட்டிப்பரீட்சை வினாக்கள் போன்ற பயனுள்ள விபரங்களை அறியலாம்.:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad